Published:Updated:

கொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கோடைக்காலங்களில் காலை நேரங்களில் அல்லது வெயில் தாழ்ந்த மாலை நேரங்களில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடவேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வெளிப்புற விளையாட்டுகள் மிகவும் அவசியம்.

கொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!
கொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கோடைக்காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதுதான் சவால். பெரியவர்களே வெம்மையால் வெதும்பிவிடும் நிலையில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து இழப்பால் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவார்கள். தவிர, உணவு வழியாகப் பரவும் நோய்களும் குழந்தைகளை வதைக்கக்கூடும். 

கொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!


கோடைக்காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் புஷ்கலா.
``கோடையில் உணவின்மூலம் பரவி குடலைப் பாதிக்கும் நோய்கள்தான் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும். குறிப்பாகச் சீதபேதி, டைபாய்டு, ஹெப்படைட்டிஸ் சி போன்றவை ஏற்படலாம். இவற்றைத் தடுக்க குழந்தைகளுக்கு வீட்டில் தயாரித்த உணவுகளையே சாப்பிடக்கொடுங்கள். கடைகளில் வாங்கும் உணவுகளைக் கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். 

டைபாய்டு, ஹெப்படைட்டிஸ் சி ஆகிய இரண்டு நோய்களுக்கும் தடுப்பூசிகள் உள்ளன. 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தத் தடுப்பூசிகளைப் போடலாம். வழக்கமான தடுப்பூசி அட்டவணையில் இந்த இரண்டு ஊசிகளும் உண்டு. ஏதேனும் காரணங்களால் போடாமல் தவிர்த்திருந்தால், தற்போது இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.

கொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!


குழந்தைகளுக்கான உணவுகளை வீட்டில் தயாரிக்கும்போது அதிக அளவில் காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, வெள்ளரிக்காயை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெள்ளரிக்காயில் 95 முதல் 96 சதவிகிதம் வரை நீர்ச்சத்து உள்ளது. கேரட், பீட்ரூட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளிலும் குழந்தைகளைக் கவரும் வகையில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்கலாம்.

பழங்களில் 96 சதவிகிதம் நீர்ச்சத்துள்ள தர்பூசணியை வெயில் நேரங்களில் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இதுதவிர, கிர்ணி, ஸ்ட்ராபெர்ரி (92 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது), பீச், வாழைப்பழம், ஆப்பிள், ஆப்ரிகாட், நுங்கு போன்ற பழங்களையும் குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிடக் கொடுக்கவேண்டும். பகல் பொழுதுகளில் ஃப்ரெஷ்ஷாக வெட்டிய இளநீரை குடிக்கக் கொடுக்கலாம். தயிரை உணவில் சேர்த்தோ, மோராகக் கடைந்தோ, சிறிது சர்க்கரை சேர்த்து லஸ்ஸியாகவோ கொடுக்கலாம். 

கொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!


சுகாதாரம் பேணுங்கள்!
கோடையில் அதிகம் வியர்க்கும். அதனால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால் குழந்தைகளை நன்றாகக் குளிக்கவைக்கவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டுமுறை தலைக்கு குளிக்கலாம். குழந்தைகள் ஒவ்வொரு முறை வெளியில் சென்று விளையாடிவிட்டுவரும்போதும், கழிவறைக்குச் சென்றுவந்தபிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் கை கழுவும் பழக்கத்தைப் பின்பற்றவேண்டும். 

கொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!


குழந்தைகள், பெரியவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர் அதிகமாகக் குடிக்கவேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். முதலில் கிடைக்கக்கூடிய தாய்ப்பாலில் அதிக அளவு நீர்ச்சத்தும், வளர்ச்சிக்கானச் சத்துகளும் நிறைந்து காணப்படும். ஆறுமாதங்களுக்கு மேல் தண்ணீர் கொடுக்கலாம். குறிப்பாக, மே மாதத்தில் ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு முறை பால்கொடுத்தால் நடுவில் ஒருமுறை தண்ணீர் கொடுக்கவேண்டும். கேன் தண்ணீர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என எதுவாக இருந்தாலும் அதைக் கட்டாயம் கொதிக்கவைத்துத்தான் கொடுக்கவேண்டும். கொதித்து ஆற வைத்த தண்ணீரை டம்ளரில் ஊற்றி, சிறிய ஸ்பூன் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். பாட்டிலில் ஊற்றி குழந்தைக்குத் தண்ணீர் கொடுப்பதைத் தவிர்க்கவும். 

கொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!


நேர அட்டவணை!
அதிக வெப்பம் நிறைந்த நற்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்கவேண்டாம். அதேசமயம் வீட்டிலேயே செல்போன், டிவி, கம்ப்யூட்டர் என விளையாடிக்கொண்டிருந்தால் உடல் பருமன் ஏற்படும். அதனால் கோடைக்காலங்களில் காலை நேரங்களில் அல்லது வெயில் தாழ்ந்த மாலை நேரங்களில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடவேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வெளிப்புற விளையாட்டுகள் மிகவும் அவசியம்.

பள்ளி நேரங்களில் எழுவது, சாப்பிடுவது, உறங்கச்செல்வதில் சரியான நேர அட்டவணையைப் பின்பற்றுவார்கள். விடுமுறை நேரமான கோடைக்காலத்தில் இரவு தாமதித்து உறங்குவது, காலையில் அதிக நேரம் உறங்குவது, நேரம் தவறி சாப்பிடுவது என அவர்களின் ஒட்டுமொத்த நேர அட்டவணையும் பாதிக்கப்படும்.

விடுமுறை நேரங்களிலும் குழந்தைகளை நேர அட்டவணையைச் சரியாகப் பின்பற்றச்செய்ய வேண்டும். காலையில் சரியான நேரத்தில் எழுப்பிவிடவேண்டும். 9 மணிக்கு முன்பாக சாப்பிட வைத்துவிட வேண்டும். குழந்தைகளின் உணவு, உறக்கம் ஆகியவை பாதிக்காத வகையில் ஓர் அட்டவணையைப் பின்பற்ற பழக்குங்கள்" என்கிறார் டாக்டர் புஷ்கலா.

Vikatan