Published:Updated:

கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்?

லட்சுமணன்.ஜி
கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்?
கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்?

பாரம்பர்யத்தை போற்றிப் பாதுகாக்கும் நம் நாட்டில் எல்லா நிகழ்வுகளிலும் வாழைக்கு முக்கியத்துவம் உண்டு. வாழை இலையில் உணவு பரிமாறுவது விருந்தோம்பலின் ஓர் அங்கம். வாழை மரத்தில் மற்ற பகுதிகளைப் போலவே வாழை இலைக்கும் பல்வேறு மருத்துவக் குணங்கள் உண்டு. வாழை இலை, இயற்கை மருத்துவத்தில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்?

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாழை இலைக் குளியல் சிகிச்சை இலவசமாகத் தரப்படுகிறது. கோடைக்காலத்தில் அதிகரிக்கும் வியர்குரு மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு தருவதால் பலரும் மருத்துவமனை சென்று வாழை இலைக் குளியல் செய்து பயனடைந்துவருகிறார்கள். 

கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்?

உடல் ஆரோக்கியம் தரும் வாழை இலைக் குளியல் பற்றி, மருத்துவக்கல்லூரி இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர் யோ.தீபாவிடம் பேசினோம்.

``உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடலில் எந்த பாகமும் வெளியே தெரியாதபடி, வாழை இலைகளால் மூடப்பட்டு அளிக்கப்படும்

கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்?

இந்த சிகிச்சை முறை வாழை இலைக் குளியல் எனப்படும். இந்த சிகிச்சைக்கு சூரிய ஒளி அவசியம். 

வாழை இலையில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற தாதுகளும் வைட்டமின், `ஏ, சி, கே' உட்பட ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. உணவில் உள்ள நச்சுப் பொருள்களை வாழை இலையில் உள்ள குளோரோபில் உட்கிரகித்துக்கொள்ளும். அதேநேரத்தில் உணவின் சுவையைக் கூட்டி, செரிமானத்துக்கு உதவும். விஷப்பூச்சிகள் கடித்தால் அதற்கும் வாழை இலை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இலைகளைவிட வாழை இலையில் ஏராளமான மருத்துவப்பலன்கள் இருக்கின்றன. சூரிய ஒளியின் ஆற்றலையும், வாழை இலையின் மருத்துவக் குணங்களையும் ஒன்றிணைத்து உடலுக்குப் பெற்றுத்தருகிறது இந்த சிகிச்சை. 

என்னென்ன பலன்கள்?

உடலில் கழிவுகள் தேங்குவதால்தான் நோய்கள் உருவாகின்றன. கழிவுகளை வெளியேற்றும் முக்கியப் பணியை தோல் செய்கிறது. இதன் அடிப்படையில் வியர்வை மூலம் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல்களில் வியர்வைச் சுரப்பியின் செயல்பாட்டைச் சீராக்குவதால், சருமப் பிரச்னைகள் நெருங்காது. தோல் நோய்களிருந்து காப்பதுடன் உடலுக்குப் பொலிவு கூட்டும். மெலட்டோனின் ஹார்மோனின் சுரப்பைச் சீராக்குவதால், தூக்கமின்மை பிரச்னை தீரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும். சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைக்கச் செய்வதால், எலும்புகள் வலுப்பெற உதவும். பெண்களுக்கான சிறுநீரகக் கோளாறுகள், கருப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை குணமாக்க உதவும். இதுபோன்று இதன் பலன்கள் ஏராளம். 

சிகிச்சை எடுப்பதற்கு முன்பு...

முதலில் வாழை இலை சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பவரின் உடல் தகுதி பரிசோதிக்கப்படும். இதில் அவரது ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, வேறு ஏதேனும் நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்பவரா என்று அறியப்படும். இவற்றின் அடிப்படையில் அவர் இந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள தகுதியானவரா என்பதை இயற்கை மருத்துவர் ஒருவர் முடிவு செய்வார். சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் எந்த ஆகாரமும் சாப்பிடாமல், வெறும் வயிற்றில் வர வேண்டும். அல்லது சாப்பிட்டு இரண்டரை மணி நேர இடைவெளி இருக்கவேண்டும். சிகிச்சைக்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லவேண்டும். 

கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்?

சிகிச்சை முறை

சூரிய ஒளி நேரடியாகப் படக்கூடிய திறந்தவெளி அல்லது மொட்டை மாடியில் வாழை இலையை விரித்து வைக்கவேண்டும். சிகிச்சை எடுப்பவர் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மல்லாந்து படுக்க (முதுகு கீழே இருக்கும் வண்ணம்) வைக்கவேண்டும். அதன்பிறகு உடலின்மீது வாழை இலைகளைப் போர்த்தி கயிற்றால் கட்டிவிடவேண்டும். சுவாசிப்பதற்காக மூக்குப் பகுதியில் மட்டும் சிறு ஓட்டை போடப்படும். பொதுவாக ஒருவருக்கு 7 முதல் 9 இலைகள் வரை பயன்படுத்தப்படும். உடல் பருமனுக்கு ஏற்ப எத்தனை இலைகள் தேவைப்படும் என்பதை முடிவுசெய்யப்படும். சிகிச்சையின்போது ஒரு துணியை நீரில் நனைத்து, படுத்திருப்பவரின் தலையில் வைக்கவேண்டும். இது ஒரு கம்ப்ரஷர்போன்று செயல்பட்டும் வெயில் காரணமாக வரக்கூடிய `ஹீட் ஸ்ட்ரோக்' வராமல் காக்க உதவும். இந்தச் சிகிச்சையை உச்சி வெயில் எனப்படும் நண்பகல் நேரத்தில் எடுக்கக் கூடாது. காலை 7.30  மணி முதல் 9 மணிக்குள்ளும், மாலை 4.30 மணி முதல் 6 மணிவரையும் இந்தக் குளியல் சிகிச்சையை அளிக்கவேண்டும். பொதுவாக, 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை இந்த சிகிச்சை அளிக்கப்படும். 

கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்?

சிகிச்சைக்குப் பிறகு...

சிகிச்சை முடிந்ததும் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது அரை மணிநேரம் கழித்தே சாப்பிடவேண்டும். குறிப்பாக, காரம், எண்ணெய் அதிகமான உணவுகளைத் தவிர்த்து, நீராவியில் வேகவைத்த உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளின் முகம் உட்பட அனைத்துப் பகுதிகளும் சுற்றப்படுவதால் பயம் ஏற்படும். அதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுக்கும்போது அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். 

வாழை இலைக் குளியல், இயற்கை சிகிச்சைதான் என்றாலும், இயற்கை மருத்துவரின் ஆலோசனையின்படி செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக, இதய நோயாளிகள், உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள், வாழை இலைக்குளியல் எடுத்துக்கொள்ளக் கூடாது. வாழை இலைக் குளியலுக்காக மட்டுமே வந்தால் அவர் மீண்டும் எப்போது வரவேண்டும், எவ்வளவு நேரம் சிகிச்சை எடுக்கவேண்டும் என்பதுபோன்ற விவரங்கள் சொல்லித்தரப்படும். இதுகுறித்து இயற்கை மருத்துவர் ஆலோசனை வழங்குவார். இதை நோயாளியின் வயது, உடல் எடை, நோயின் தன்மைக்கேற்ப மருத்துவரே முடிவு செய்வார். உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுவோர் பலருக்கும் வாழை இலைக் குளியல் சிகிச்சை தரப்படுகிறது. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் மருத்துவமனைசென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் தீபா.

Vikatan