Published:Updated:

மாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்!

"பெண்கள் 'மென்சுரேஷன் டைரி' (Menstruation Dairy) எனத் தனி கையேடு ஒன்றைப் பின்பற்றுவது நல்லது. அதில், ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு முன் - பின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன, எந்தத் தேதியில், எத்தனை நாள் இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுகிறது என்பதைக் குறித்துவையுங்கள்."

மாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்!
மாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்!

பெண்கள் தங்களது ஆயுட்காலத்தில், 2555 நாள்கள் (ஏறக்குறைய 7 ஆண்டுகள்) மாதவிடாய் அவஸ்தையை எதிர்கொள்கின்றனர். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெண்கள் எதிர்கொண்டே ஆக வேண்டிய இயற்கை நிகழ்வு, மாதவிடாய். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. ஒரே நாப்கினை பல மணி நேரங்கள் பயன்படுத்துவது, முறையற்ற உணவுகளைச் சாப்பிடுவது, மருத்துவரின் பரிந்துரையின்றி வலி நிவாரணிகளைச் சாப்பிடுவது, பிறப்புறுப்பு சுகாதாரமின்றி இருப்பது எனப் பல்வேறு தவறான விஷயங்களைத் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். 

மாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்!

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சுகாதாரத்தை எப்படிப் பேண வேண்டும், மாதவிடாய் வருவதற்கு முன்னும் பின்னும் உடலளவில் ஏற்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்..? 

மகப்பேறு மருத்துவர் மீனாவிடம் கேட்டோம். 

மாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்!

"பெண்கள், மாதவிடாய்க் காலத்தில் நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம், ஒரு நாளில் மூன்று முறையாவது மாற்ற வேண்டியது கட்டாயம். ரத்தப்போக்கு குறைவாக இருந்தால், நீண்டநேரம் ஒரே நாப்கினை பயன்படுத்தலாம் எனச் சிலர் நினைப்பார்கள்; அது தவறு. நாப்கினை மாற்றாவிட்டால், பிறப்புறுப்பில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். இது வெள்ளைப்படுதலில் தொடங்கி சருமப் பிரச்னைகள், புண், கொப்பளங்கள் என ஏராளமான அசௌகரியங்களை ஏற்படுத்தும். மாதவிடாயின்போது, உள்ளாடைகள் அணிவதில் கவனமாக இருக்க வேண்டும். நைலான் உள்ளாடைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 

மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் உடலளவில் சில மாற்றங்கள் நிகழும். உதாரணமாக, சிலருக்கு மாதவிடாய்க்கு முன்பு மார்பகங்கள் பெரிதாக இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு உடல் உஷ்ணம் அதிகரிப்பதைப்போலத் தோன்றும். இன்னும் சிலருக்கு அடிவயிற்றில் வலி, சருமத்தில் பரு, சரும வறட்சி போன்ற உணர்வுகளும், கால் வலி, அடிவயிற்று வலி, இடுப்பு வலி போன்றவையும் ஏற்படலாம். இது ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடும் என்பதால், பெண்கள் 'மென்சுரேஷன் டைரி' (Menstruation Dairy) எனத் தனி கையேடு ஒன்றைப் பின்பற்றுவது நல்லது. அதில், ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு முன் - பின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன, எந்தத் தேதியில், எத்தனை நாள் இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுகிறது என்பதைக் குறித்துவையுங்கள். 

மாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்!

மாதவிடாய் வலிக்காக மாத்திரைகள் உட்கொள்பவர் என்றால் அதன் பெயர் மற்றும் விவரங்கள், மாதவிடாயின்போது எத்தனை வேளை மாத்திரை உட்கொண்டீர்கள் என்ற விவரத்தையும் அதில் எழுதி வைக்க வேண்டும். மேலும் வலி நிவாரணிக்கு வேறு எந்த மருத்துவ முறைகள் உதவும், மாதவிடாய்க்கு முன் - பின் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து விடுபட என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றினீர்கள் என்பதுபோன்ற தகவல்களை அதில் தொகுத்து வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால், மாதவிடாய்க் காலத்தில் எந்த நாளில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது, எத்தனை நாள் உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்கும் என்பதையும் குறித்து வைக்கலாம். அடுத்தடுத்த மாதங்களில் ஏற்படும் சுழற்சியின்போது முன்னெச்சரிக்கையாகச் செயல்பட இந்தக் கையேடு உதவும். 

குழந்தை பெற்ற பெண்களுக்கு மாதவிடாய்க் கால வலி குறைவாக இருக்கும் என்ற பொதுவான நம்பிக்கை இருக்கிறது. பிரசவத்தின் போது கர்ப்பப்பைவாய்ப்பகுதி விரிந்து சுருங்கும். அப்போது பிறப்புறுப்பு தசைகளின் நெகிழ்வுத் தன்மை அதிகரிப்பதால் வலி குறையும் என்பது உண்மைதான். இதைவிட முக்கியமான மற்றொரு காரணம் உள்ளது. பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் மனதளவில் பல மாற்றங்களுக்குத் தயாராகிவிடுவர்; வலிகளை எதிர்கொள்ளவும் தயாராகிவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு வலி குறைந்ததுபோன்ற உணர்வு இருக்கும். 

மாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்!

மாதவிடாயின்போது வலி நிவாரணிகளைச் சாப்பிடுவது சரியா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மாத்திரைகள் உட்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனாலும், அலோபதி மாத்திரைகளால் பக்கவிளைவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. சிலருக்கு மாத்திரை ஒத்துக்கொள்ளாமல் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்படலாம். முடிந்தவரை உணவு முறை மூலம் வலியைக் கட்டுப்படுத்துவது நல்லது. அல்லது மாத்திரை உட்கொண்டதும் ஓய்வு எடுக்க வேண்டும். தாங்கிக்கொள்ள முடியாத வலி என்றால் மட்டும் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். அப்போது தொடர்ந்து வேலைகள் எதையும் செய்யக்கூடாது. உடலுக்கு நன்றாக ஓய்வு கொடுக்கவேண்டும். 

கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த அல்லது அதிகம் வறுத்த உணவுகள், குளிர்பானங்கள், சர்க்கரைச் சத்து நிறைந்த உணவுகள், கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வெந்தயம், மோர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். வலி அதிகமாக உள்ள நாளில் அல்லது ரத்தப்போக்கு அதிகமாக உள்ள நாளில் உடலுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

பெரும்பாலானோருக்குத் தீவிரமான முதுகு வலி மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படும். சுடுநீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி ஓரளவு குறையும். ஆனால், வயிற்று வலியைக் காரணம் காட்டி, உணவைத் தட்டிக் கழிக்கக் கூடாது. ஆரோக்கியமான உணவு முறை அவசியம். 

மாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்!

இவை அனைத்தையும்விட மாதவிடாயின்போது, பிறப்புறுப்பு சுகாதாரம் அடிப்படையாகும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை, கட்டாயம் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். பொதுவெளிகளில், நாப்கினை அகற்ற முறையான வசதிகள் இல்லை என்பதால் அலுவலகம் செல்லும் பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும். நாப்கினை நீக்க வசதியில்லாத கழிப்பிடங்களில், உபயோகப்படுத்திய நாப்கினை பழைய காகிதத்தில் மடித்து கழிவறைக் குப்பைத்தொட்டி மூலம் அப்புறப்படுத்தவும்.

மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தம், கெட்ட ரத்தம் என்பது தவறான கருத்து. மனித உடலில், கெட்ட ரத்தம் ஒன்றே இருக்காது. ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக அவதிப்படுபவர்கள் பலருக்கு, ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். அப்படியானவர்கள், 'கெட்ட ரத்தம் தானே வெளியேறுகிறது' என்ற எண்ணத்தில் அதைப் பொறுத்துக்கொள்வர். அது ஆபத்தான போக்கு. ஒருநாளில் 4, 5 முறை நாப்கின் மாற்றும்நிலை ஏற்பட்டால் பரவாயில்லை. அதற்கும் அதிகமானால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்" என்கிறார் மீனா.

Vikatan