Published:Updated:

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இதயநோய்... தப்புவது எப்படி?

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இதயநோய்... தப்புவது எப்படி?
இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இதயநோய்... தப்புவது எப்படி?

"ஆரோக்கியமான வாழ்வியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் அக்கொயர்ட் வகை இதயப் பிரச்னைகளை எளிதாகத் தடுக்கலாம். ஆனாலும், நம்மில் பலர் அதற்காக மெனக்கெடுவதில்லை."

தய நோய் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வொன்றை நடத்தியது. அதில் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயச் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன் இளம் வயதிலேயே மரணம் நிகழ்வது கண்டறியப்பட்டது. மேலும், தூக்கமின்மையும் இளைஞர்களைப் பெருமளவு பாதிப்பது தெரியவந்துள்ளது. 

உடல் இயக்கத்துக்கு அடிப்படையாக இருப்பது இதயம். வாழ்வியல் மாற்றங்களால் அதன் செயல்திறன் பாதிக்கப்படும்போது, உடலின் அனைத்து உள்ளுறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தே ஒருவரது ஆயுள்காலம் அமையும் என்பதால், இந்த ஆய்வு முடிவு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது. 'இளம் தலைமுறை இதய நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்' என்று அந்த ஆய்வின் முடிவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இதயநோய்... தப்புவது எப்படி?

இதய நலனில் கவனம் செலுத்துவது எப்படி? 

"இதய நோய்களில், `கன்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்' (Conjinatal Heart Disease) மற்றும் அக்கொயர்ட் ஹார்ட் டிசீஸ் (Acquired Heart Disease) என இரு வகைகள் இருக்கின்றன. 

கன்ஜெனிட்டல் வகை இதயக் கோளாறுகள் 

மரபு காரணமாக மட்டுமே இவை ஏற்படுகின்றன. பிறவிக் குறைபாடு என்பதால் இதை முன்கூட்டியே தடுப்பது சாத்தியமற்றது. முழுமையாகக் குணப்படுத்தவும் வாய்ப்பில்லை. வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். பிரச்னையின் வீரியத்துக்கு ஏற்ப, வெவ்வேறு காலகட்டத்தில் அறிகுறிகள் தெரியத்தொடங்கும். பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே தெரியத் தொடங்கிவிடும். அதிகபட்சம், 30 வயது வரை அறிகுறிகள் தெரியலாம். அறிகுறி எந்த வயதில் தெரிகிறதோ, அப்போதே சிகிச்சையைத் தொடங்க வேண்டும். 

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இதயநோய்... தப்புவது எப்படி?

அக்கொயர்ட் வகை இதயப் பிரச்னைகள் 

சீரற்ற உணவுமுறை, தூக்கமின்மை, மது மற்றும் புகைப்பழக்கம் போன்ற முறையற்ற வாழ்வியல் பழக்கங்களால் ஏற்படும் பாதிப்பு இது. மேலும், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், உடல்பருமன், உடல் எடை பி.எம்.ஐ-க்கு உட்படாமல் இருப்பது போன்ற சூழலிலும் இதயப் பிரச்னைகள் ஏற்படலாம். எதுவாக இருந்தாலும், இதயப் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். கடைசி நிலையில் பிரச்னையைக் கண்டறிந்தால் சரிசெய்வது கடினம். 

ஆரோக்கியமான வாழ்வியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் அக்கொயர்ட் வகை இதயப் பிரச்னைகளை எளிதாகத் தடுக்கலாம். ஆனாலும், நம்மில் பலர் அதற்காக மெனக்கெடுவதில்லை. முன்பெல்லாம் 50, 60 வயதுகளில் ஏற்பட்டு வந்த இதயப் பிரச்னை இப்போது 30 வயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது. எனவே, அனைத்து வயதினரும் இதய நலனில் கவனமாக இருக்க வேண்டும். அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விடும்போது, அவை தீவிரமடைந்து ரத்தக்குழாயில் கொழுப்புச்சத்து சேர்ந்து, ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படும். காலப்போக்கில், மாரடைப்பு ஏற்படலாம். இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புக்கான காரணங்களில், மாரடைப்புக்குத்தான் முதலிடம்.  

இதயக் கோளாறுகளை எளிதில் தடுக்க, அவசியம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் இங்கே...

* ஆரோக்கியமான உணவு முறை. அதிகம் வறுத்த அல்லது பொரித்த உணவுகள், எண்ணெய் அதிகம் பயன்படுத்திய உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

* தினமும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி தேவை. 

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இதயநோய்... தப்புவது எப்படி?

* இரவு 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். மிகவும் குறைவான வெளிச்சம் இருக்குமிடத்தில் தூங்குவது, ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். 

* மன அழுத்தம் இல்லாத, மகிழ்ச்சியான வாழ்க்கை. 

* குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நேரம் செலவிட வேண்டும்.

* புகை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இதயநோய்... தப்புவது எப்படி?

இவை அல்லாமல் சர்க்கரைநோய், ரத்த அழுத்தத்துக்கான பரிசோதனைகளை ஆண்டுதோறும் செய்ய வேண்டும். பிரச்னை உள்ளவர்கள், மருந்து மாத்திரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இரவில் தூங்குவதற்குமுன், மனதுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யலாம். இதமான பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது நல்லது. ஆண்களுக்குத்தான் மனஅழுத்தம் அதிகம் இருக்கும் என்ற கருத்து பலருக்கும் உள்ளது. மருத்துவ ரீதியாக இந்தக் கருத்து ஓரளவு உண்மைதான் என்றாலும், மெனோபாஸ் காலத்தைக் கடக்கும்போது ஆண்களைவிடப் பெண்கள் அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். எனவே 45 வயதுக்குப் பிறகு ஏற்படும் மாரடைப்புப் பிரச்னைகளை பாலின அடிப்படையில் பார்க்க முடியாது. டென்ஷனைக் கையாள கற்றுக்கொள்ளுங்கள். யாராலும் மனஅழுத்தத்தைத் தவிர்க்க முடியாது என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, அதை எப்படி முறையாகக் கையாள்வது என்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியுங்கள்" என்கிறார் இதய நோய் நிபுணர் சாய் சதீஷ்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு