
மோர் பாரம்பர்ய உணவாக இருக்கும் நாடுகளில், இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்வது நல்லது.
'தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்'' என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தேசிய வேளாண் ஆய்வகத்தில் (French National Agricultural Research Institute) மெனோபாஸை கடந்த, உடல் பருமனான 58 பெண்களை வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் அன்றாட உணவில், க்ரீம் வகை சீஸை (புளித்த பால் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை) சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஒரு மாதம் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்த போது, அவர்கள் உடலில் கெட்ட கொழுப்புச்சத்து, டிரைகிளரைட் ஆகியவை குறைவது கண்டறியப்பட்டுள்ளது. வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இதய பாதிப்புகளும்கூட, அன்றாடம் மோர் குடித்து வந்தால் தடுக்கப்படும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆய்வு முடிவில், 'மோர் மற்றும் புளித்த பால் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ள பொருள்கள் யாவும், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்'' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு அமிலங்களும் (Polar Lipids) குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்களில் ஒருவரான மிசால்ஸ்கி இந்த ஆய்வு முடிவு குறித்து கூறும்போது, "ஒவ்வொரு நாளும் 5 கிராம் கொழுப்புச்சத்து நிறைந்த பால் பொருள்களை உட்கொள்வதன் மூலமாக, உடலிலிருந்து 8.7 சதவிகித கொலஸ்ட்ராலை கரைக்கலாம் என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு மாத காலகட்டத்துக்குள் இந்த ஆய்வு முடிக்கப்பட்டுவிட்டது என்பதால், நீண்ட நாள்கள் தொடர்ச்சியாக மோர் குடிப்பவர்களுக்கு அதனால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுமா என்ற தகவலை எங்கள் தரப்பினரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. மோர் பாரம்பர்ய உணவாக இருக்கும் நாடுகளில், இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்வது நல்லது" என்றுள்ளார்.