Published:Updated:

ஃபைப்ராய்டு கட்டி கேன்சராக மாறுமா? மருத்துவ வழிகாட்டல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபைப்ராய்டு கட்டி கேன்சராக மாறுமா? மருத்துவ வழிகாட்டல்
ஃபைப்ராய்டு கட்டி கேன்சராக மாறுமா? மருத்துவ வழிகாட்டல்

''ஃபைப்ராய்டு கட்டி கேன்சராக மாறுமா என்றால் 0.5 சதவிகிதத்துக்கும் குறைவான வாய்ப்புதான் இருக்கிறது.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மீபமாக, பெண்களை அதிகம் பதற வைக்கும் பிரச்னைகளில் ஒன்றாக ஃபைப்ராய்டு எனப்படுகிற நார்க்கட்டியும் இருக்கிறது.  'அச்சச்சோ.. ஃபைப்ராய்டு வந்துட்டா அது கேன்சரா மாறிடுமோ' என்கிற பயப்படுகிற பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. உண்மையிலேயே பயப்பட வேண்டிய பிரச்னைதானா ஃபைப்ராய்டு, அதன் அறிகுறிகள் என்னென்ன,  தீர்வுகள் இருக்கின்றனவா ? மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜிடம் கேட்டோம். 

ஃபைப்ராய்டு கட்டி கேன்சராக மாறுமா? மருத்துவ வழிகாட்டல்


''ஸ்கேன் என்ற மருத்துவ வசதி வந்த பிறகுதான், ஃபைப்ராய்டைப் பற்றி எல்லோரும் அதிகமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஏன் வருகிறது என்கிற காரணம் தெரியவில்லை. யாரும் அதை இன்னமும் கண்டுபிடிக்கவும் இல்லை. 

நம் உடலின் உறுப்புகள் இவ்வளவு நீளம்தான் வளர வேண்டும்; இவ்வளவு அகலம்தான் வளர வேண்டும் என்பது ஏற்கெனவே குரோமோசோம்களால் தீர்மானிக்கப்பட்டவை. அதைத்தாண்டி ஏதாவது தவறு நிகழும்போதுதான், ஃபைப்ராய்டு போன்ற உடலுக்குத் தேவையில்லாத வளர்ச்சிகள் வருகின்றன. இதில் ஒன்றுதான் கேன்சர். ஆனால், ஃபைப்ராய்டு கட்டி கேன்சராக மாறுமா என்றால், 0.5 சதவிகிதத்துக்கும் குறைவான வாய்ப்புதான் இருக்கிறது. அதனால், ஃபைப்ராய்டு கட்டி வந்தால், அது கேன்சராக மாறிவிடுமோ என்று பயந்துகொண்டு கருப்பையை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டுமென்கிற அவசியமே இல்லை. 

ஃபைப்ராய்டு கட்டி கேன்சராக மாறுமா? மருத்துவ வழிகாட்டல்

ஃபைப்ராய்டு கருப்பைக்குள் மட்டும்தான் வரும். சினைப்பையில் இதேபோன்று வருகிற கட்டியை ஃபைப்ரோமா என்போம். வயிறு, குடல், கருப்பை போன்ற இடங்களில் இருக்கிற திசுக்கள் மிக மிக மென்மையாக இருக்கும். எங்கெல்லாம் இந்த மென்மையான திசுக்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் ஃபைப்ராய்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஃபைப்ராய்டைப் பொறுத்தவரைக்கும் கருப்பையில்தான் அதிகமாக வருகிறது'' என்றவர், ஃபைப்ராய்டின் அறிகுறிகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''பொதுவாக  ஃபைப்ராய்டு எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. வேறு ஏதாவது பிரச்னைக்காக ஸ்கேன் செய்யும்போதுதான் இது இருப்பதே தெரிய வரும். ஒரு வேளை அறிகுறிகள் காட்டுகிறது என்றால், அதிகமான ரத்தப்போக்கு ஏற்படலாம். மாதவிடாய் நேரத்தில் அதிகமான வலி இருக்கலாம்.  சில நேரங்களில், இரண்டு மாதவிடாய்களுக்கு இடையே லேசான ரத்தப்போக்கு வந்துகொண்டே இருக்கும்.  அதாவது, ஒரு மாதவிடாய் நிகழ்ந்த பிறகு, அடுத்த மாதவிடாய் வருகிற வரை தொடர்ந்து லேசான ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருக்கும்.  ஃபைப்ராய்டு பெரிதாக வளர்ந்து, சிறுநீர்ப்பையை அழுத்தினால், அடிக்கடி சிறுநீர் வந்துகொண்டே இருக்கும். மலக்குடல் மேலே அழுத்தினால் மலச்சிக்கல் வரலாம். ஃபைப்ராய்டின் அளவு ரொம்பவும் பெரிதானால், இடுப்பின் கீழ் பகுதியில் வலியெடுக்க ஆரம்பிக்கும். தவிர, கிட்னியிலிருந்து வருகிற இரண்டு குழாய்களையும் அழுத்தலாம். இதனால், கிட்னியில் வீக்கம் ஏற்படலாம். இவைத் தவிர, வயிறு 4 மாத கர்ப்பிணிபோல தெரியும். சில பெண்களுக்கு 8 மாத கர்ப்ப அளவில் எல்லாம் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்திருக்கின்றன.  

ஒரு தடவை அறுவைசிகிச்சை ஃபைப்ராய்டை எடுத்துவிட்டால், கருப்பையின் அந்த இடத்தில் மறுபடியும் வராது. ஆனால், வேறு இடத்தில் வேண்டுமானால் வரலாம். அதனால்தான், ஃபைப்ராய்டு ஒரு தடவை வந்துவிட்டால், வருடத்துக்கு ஒருமுறை செக் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என்போம். ஃபைப்ராய்டு வந்தால் ஹார்மோன் இம்பேலன்ஸ் வரும் என்பது கிடையாது. அதனால், பயப்பட வேண்டாம்'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ்.

``வயசு 100... காலை 5 மணிக்கு மேல தூங்கினதில்லை... ஆரோக்கியத்துக்கு என்ன காரணம்னா..!" - `யோகா' நானம்மாள் #InternationalDayofYoga
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு