40 வயதில் மனம் பக்குவப்பட்டிருந்தாலும், உடல் எல்லா வேலைகளையும் செய்ய ஒத்துழைக்காது. வாழ்க்கையில் கொஞ்சம் சலிப்பு தென்படும். `நாற்பது வயதில் நாய்க் குணம்' என்ற பழமொழியை அடிக்கடி சொல்லி குத்திக்காட்டும்போது, அது வலியை ஏற்படுத்தும். வைத்தியர் சொல்வதுபோல் உப்பு, சர்க்கரையைக் குறைத்தால் 40 வயதில் நோய் குணமாகும் என்பதே உண்மை.

பொதுவாகவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கிப் பயணிப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், 40 வயதுக்குப் பிறகுதான் மூளை பலமாக சிந்திக்கத் தொடங்குகிறது என்பதுபற்றிப் பலருக்கும் தெரியவில்லை. உதாரணமாக, புதிதாக ஒரு வாகனத்தை வாங்கும்போது, `10,000 கிலோ மீட்டர் வரை வண்டியைப் பார்த்து ஓட்டுங்க, அதுக்கப்புறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும்' என்று சொல்வார்கள். பல விஷயங்களில் அனுபவப்பட்டு, அடிபட்டு, வாழ்க்கையைப் புரிதலோடு பார்க்கும் வயது 40 வயதுதான். கிட்டத்தட்ட 40 வயதை இரண்டாவது இன்னிங்ஸ் என்றும் சொல்லலாம். இந்த வயதில்தான் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று முடிவெடுப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

40 வயதில் சிலர் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருப்பார்கள். அவர்களுக்குப் புதியதைத் தேடவேண்டும் என்ற எண்ணம் ஓரளவு குறைந்துவிடும். இதனால் அவர்களுக்குச் சோம்பல் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அத்தகைய சூழலில், புதிய வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அது தானாகவே சுறுசுறுப்பைக் கொடுக்கும். உடல் சுறுசுறுப்பாக இருந்தால் மனம் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும், 40 வயதைத் தாண்டியவர்கள் தன் வயது நண்பர்களின் கூட்டத்தில்தான் இருப்பார்கள். அதற்குப் பதிலாக 40 வயதுக்கும் குறைவானவர்களுடன் பழகலாம். அப்போது இளமையான உணர்வும், சிந்தனையும் தோன்றும். இது எப்போதும் மனதை இளமையாக வைத்துக்கொள்ள உதவும். தன் வயது நண்பர்களுடன் மட்டுமே பழகுவது இளமையான உணர்வு மற்றும் காலத்துக்கேற்ற சில அப்டேட் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

`வயதாகிவிட்டது' என்று அதற்கேற்ற ஆடைகளைத் தேர்வு செய்யாமல், அழகான ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் அந்த ஆடைகள் உங்களைப் பொலிவாகவும், வயதைக் குறைத்தும் காட்டும். உதாரணமாக 40 வயதைக் கடந்தவர்கள் பெரிய கட்டம் போட்ட சட்டைகளைத்தான் போடுவார்கள். அதற்குப் பதிலாக சிறிய கட்டம் உள்ள சட்டையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. சாம்பல், கறுப்பு, வெளிறிய மங்கலான நிறமுள்ள ஆடைகளுக்குப் பதில் `பளிச்' என்ற ஆடைகளை அணியலாம். 40 வயதில் தோன்றும் நரையும், வழுக்கையும்கூட ஓர் அழகுதான். 40 வயதைக் கடந்தவர்கள்தான் உலகில் அதிகமானோரை ஈர்க்கும் வரிசையில் அதிகமாக இருக்கிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம். 40 வயதைக் கடந்தவர்கள் எதைச் சாப்பிடவேண்டும், சாப்பிடக் கூடாது என்ற தகவல்களை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. உணவு விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கவேண்டாம்.

40 வயது கடந்துவிட்டது என்பதற்காக, அந்த வயதில் உள்ளவர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு கோயில் கோயிலாகக் கிளம்ப வேண்டாம். சுற்றுலா என்று சென்றால், அதில் இளைஞர்களையும் சேர்த்துக் கொள்வது நல்லது. அப்போது அவர்களது அனுபவங்கள் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கலாம். வேறுபட்ட மனிதர்களோடு உரையாடிய அனுபவம் கிடைக்கும். வயதாகிவிட்டது என்று சலித்துக்கொள்ளாமல், மூளைக்குத் தீனிபோட, அதிகமாகப் புத்தகங்கள் படிக்கவேண்டும். அதையும் தேர்வு செய்து படிக்கவேண்டும். புதிய நவீனச் சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசிக்கலாம். அவர்களது பேச்சைக் கேட்கலாம். அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லா விஷயங்களையும் பேசினால் தெளிவு கிடைக்கும்.
இவை அனைத்தையும் பின்பற்றினால் 40 வயதுக்கு மேல் ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. மூளையும் மனமும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்டால், அதன்பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்னை வரப் போகிறது. எப்போதுமே முதல் இன்னிங்ஸில் இலக்கை மட்டுமே நிர்ணயிக்கமுடியும். இரண்டாம் இன்னிங்ஸில்தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும். `40 வயதைக் கடந்துவிட்டோம்' என யோசித்து, தாமதிக்காமல் புதுப்பொலிவுடன் மீண்டும் களமிறங்குவதாக நினைத்து ஆடத் தொடங்குங்கள்.