Published:Updated:

`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்!' #LifeStartsAt40 #நலம்நாற்பது

ஜெ.நிவேதா
ர.முகமது இல்யாஸ்

தொடர்ச்சியான வாழ்க்கைமுறை பழக்கங்கள்மூலம் பார்வையை ஷார்ப்பாக்கி... வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!    

`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்!' #LifeStartsAt40 #நலம்நாற்பது
`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்!' #LifeStartsAt40 #நலம்நாற்பது

கிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் டிவி முன்னால் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போது, தண்ணீர் தாகம் எடுத்ததால் கிச்சன் பக்கம் போன நேரத்தில், கமென்ட்ரியில் கொண்டாட்ட சத்தம் கேட்கும். 'என்ன ஆச்சோ' என்று உற்றுப்பார்த்தால், எதுவும் தெரியாது. கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தாலும், கீழே ஓடும் ஸ்க்ரோல் மட்டுமே மங்கலாகத் தெரியும். 'ஏன் என்ன ஆச்சு... எதுக்கு சத்தம் போடுறாங்க, விக்கெட் போச்சா, யாரும் சிக்ஸர் அடிச்சாங்களா?' என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, சட்டென மூளையில், 'நமக்கு 40 வயசாகுதுல்ல... அதுதான் ஒண்ணும் தெரியல...' என்று மனதில் ஒரு பயம் ஏற்படும். அப்போது, எங்கோ, யாரோ ஒருவர் இன்னொருவரைப் பார்த்து 'இல்லையா பின்ன, நாற்பதைத் தாண்டியாச்சுல்ல...' என்று சொல்வது மட்டும் காதில் விழும். நாற்பதைத் தாண்டுபவர்களுக்கு கண் பாதிப்பு மட்டுமல்ல பல்வேறு உடல் பாதிப்புகளும் ஏற்படும்.

`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்!' #LifeStartsAt40 #நலம்நாற்பது

"40 வயதில் மனம் பக்குவப்பட்டிருக்கலாம், ஆனால் உடல் ஒத்துழைக்காது. சில நேரங்களில், உடலோடு சேர்ந்து மனமும் தடுமாறும். 'உடல் சார்ந்த பிரச்னைகளை இனி தடுக்கவே முடியாதா, சரிசெய்யவே முடியாதா?' என்ற பயம் மெள்ள மெள்ள உருவாகும். ஆனால், கண் தொடர்பான பிரச்னையில் அதுபோன்ற பயம் எதுவும் தேவையில்லை. கண்களுக்கான ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு பிரச்னையையும் சரியான நேரத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்தால் போதும்" என்கிறார் கண் மருத்துவர் நவீன். 
40 வயதில் வரும் கண் தொடர்பாக என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பது குறித்து விரிவாகப் பேசினார்.

"நாற்பதைத் தொட்டவர்கள் எதிர்கொள்ளும் கண் சார்ந்த முக்கியமான பிரச்னைகளை நான்காகப் பிரிக்கலாம். 

1. பிரஸ்பையோபியா (Presbyopia)  
2. வறண்ட கண்கள் 
3. கண்புரை
4. கண் நீர் அழுத்த நோய்

`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்!' #LifeStartsAt40 #நலம்நாற்பது

பிரஸ்பையோபியா (Presbyopia) 

வயது முதிர்வு காரணமாக ஏற்படும் பிரச்னை இது. கண்களுக்கும் எதிரே உள்ள பொருள்களுக்குமான இடைவெளி அதிகரிப்பதை `பிரஸ்பையோபியா' என்போம். அடிப்படையில், 20 செ.மீ தூரத்தில் பார்த்து வந்த பொருளை, இப்போது 30 செ.மீ தூரத்தில் தெரியும். கண்ணின் விழித்திரையில் பக்கத்தில் தெரியும் புள்ளி (near point of eye), தூரமாகிக்கொண்டே போவதால் ஏற்படும் பிரச்னை இது. இதைச் சரிசெய்ய, ரீடிங் க்ளாஸ் உபயோகமே போதுமானது. ஒவ்வொருவரின் வேலை, டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும் நேரம், தூக்க ஒழுக்கம், நாளிதழ் மற்றும் புத்தகம் வாசிக்கும் நேரம் போன்றவற்றைப் பொறுத்து +1, +2 போன்ற பவர் உள்ள ரீடிங் க்ளாஸ் வழங்கப்படும். பார்வைக்குச் சிரமப்படும் சூழல்களில் மட்டும், மூக்குக்கண்ணாடி அணிந்தால் போதுமானது. வயது அதிகரிக்க அதிகரிக்க, பவரும் அதிகரிக்கும். வயது காரணமாக ஏற்படும் பாதிப்பு என்பதால், இதைத் தடுப்பது சாத்தியமில்லாதது. முடிந்தவரை, கண்களுக்கு அதிக அழுத்தம் தராமல் இருந்தால், ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

வறண்ட கண்கள் 

அதிக நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதால் ஏற்படும் பிரச்னை இது. நீண்டநேரம் டிஜிட்டல் சாதனங்களுடன் செலவிட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு, அதிலிருந்து வெளிவரும் `ப்ளூ லைட்', கண்களின் விழித்திரையுடைய கூர்மையைக் குறைக்கும். கண்களுக்கான சொட்டு மருந்து மூலம் இந்தப் பிரச்னையை சரிசெய்யலாம். ஆனாலும், கூடுதலாக சில வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக திரைகளைப் பார்க்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தூரத்திலுள்ள பொருள்களைப் பார்க்க வேண்டும். கண் தசைகளுக்கு, அதிக அசைவுகள் கொடுக்க வேண்டும்.

`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்!' #LifeStartsAt40 #நலம்நாற்பது

கண்புரை

சர்க்கரை நோய் பிரச்னை இருப்பவர்களுக்கு, கண்களிலுள்ள புரதம் எளிதில் வறண்டுவிடுவதால் கண்புரை ஏற்பட வாய்ப்பு அதிகம். அடிக்கடி கண் ஒவ்வாமை ஏற்படுபவர்கள், மருத்துவரின் பரிந்துரையின்றி அடிக்கடி ஸ்டீராய்ட் கண் ட்ராப்ஸ் (சொட்டு மருந்துகள்) பயன்படுத்துவர். அதுவும்கூட, கண்ணின் உள்பகுதியில் புரதத்தை அளவுக்கதிகமாகச் சேர்த்து, லென்ஸை அடர்த்தியாக்கி கண்புரை பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். கண்புரை ஏற்பட்டால் லென்ஸின் ஒளிபுகும் தன்மை குறைந்து, பார்வை மங்கலாகத் தொடங்கும். பார்வை மங்கலாவதுதான் கண்புரைக்கான முதல் மற்றும் முக்கிய அறிகுறி என்பதால், அதை உதாசீனப்படுத்தக் கூடாது. கேட்டராக்ட் அறுவைசிகிச்சைதான், கண்புரை பிரச்னைக்கான சிறந்த தீர்வு. இந்த சிகிச்சையின்போது, புரதம் சேர்ந்த லென்ஸ் நீக்கப்பட்டு, வேறொரு லென்ஸ் வைக்கப்படும்.

`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்!' #LifeStartsAt40 #நலம்நாற்பது

கண் நீர் அழுத்த நோய் (குளூக்கோமா)

கண் நீர் அழுத்த நோயில் `ஓப்பன் ஆங்கிள் குளூக்கோமா' (Open Angle Glaucoma), `க்ளோஸ்டு ஆங்கிள் குளூக்கோமா' (Closed Angle Glaucoma) என இரண்டு வகைகள் உள்ளன. இது இரண்டு வகையாக இருந்தாலும் இந்தப் பிரச்னைகளுக்கு அறிகுறிகள் தெரியாது என்பதால், தவிர்ப்பது சாத்தியமில்லை. என்றாலும், முதல் நிலையில் கண்டறிந்தால் சொட்டு மருந்து மூலம் சரிசெய்துகொள்ளலாம். அடிப்படையில், கண் அழுத்தம் 10 முதல் 21 mm/Hg வரை இருக்கலாம். அதற்கு அதிகரிக்கும்போது, விழித்திரையிலுள்ள நரம்பில் அழுத்தம் அதிகம் ஏற்பட்டு, பரந்த பார்வை பாதிக்கப்படும். குறிப்பிட்ட கோணம் வரையில் சுருங்கி, குறுகிய பார்வை உருவாகும். பிரச்னை தீவிரமாகும்போது, பார்வைக் கோணம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். டனல் விஷன் எனப்படும் குறுகிய பார்வை ஏற்பட்டு, கீழே என்ன பொருள் உள்ளது என்பதுகூட தெரியாமல் போகும். அடுத்தடுத்த நிலைகளில், முழுவதுமாகப் பார்வையிழப்பும் ஏற்படும்.

பொதுவாக, நடக்கும்போது காலில் அடிபடுவது, கீழே விழுவது போன்ற சிக்கல்கள் தொடர்ச்சியாக இருந்தால் குளூக்கோமாவுக்கான பரிசோதனைகளைச் செய்து பார்க்கவும். முதல் நிலையிலேயே கண்டறிந்தால், அறுவைசிகிச்சை செய்து பிரச்னை மேலும் வளராமல் தடுக்கலாம். உடனிருப்பவர்களால்தான் இதை எளிதில் உணர முடியும் என்பதால் உறவினர்கள், வீட்டு நபர்கள் கவனமாக இருக்க வேண்டும். `பெரிமெட்ரி' (Perimetry) மற்றும் `ஆப்டிக்கல் கோஹெரன்ஸ் டோமோகிராஃபி' (Optical Coherence Tomography) என்ற பரிசோதனை மூலம் கண்களில் நீர் அழுத்தம் எந்தளவு ஏற்பட்டுள்ளது, நரம்பு நார்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். அறுவைசிகிச்சைகள் மூலம், பார்வை மேலும் சுருங்காமல் தடுக்கப்படுமே தவிர, இழந்த பார்வையை மீட்டெடுப்பது சிரமம். 

`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்!' #LifeStartsAt40 #நலம்நாற்பது

கண் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம்?

* 40 வயது வரை, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். நாற்பதைத் தாண்டியதும் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மாதம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். 

* கண் மருத்துவரிடம் மட்டுமே கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆப்டிக்கல் ஷாப்பில் செய்வது, பார்வைத் திறனை கண்டறிய மட்டுமே பயன்படும். கண்களின் விழித்திரை, நரம்புகள் எனக் கண்களின் அனைத்துப் பகுதிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதையும் முறையாகக் கண் மருத்துவர் ஒருவரிடம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

* சாப்பிடும்போது, திரைகளைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கும். எந்த செயற்கைத் திரைகளையும் பார்க்காமல், பூட்டிய அறைக்குள் அதீத வெளிச்சத்துக்கு மத்தியில் அமர்ந்து சாப்பிடக் கூடாது. உணவின் மீது கவனம் செலுத்திச் சாப்பிட வேண்டும். முடிந்தவரை இயற்கை வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிடவும்.

* தூக்கத்தின்போதுதான் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். மேலும் கண் அசைவுகள் இருக்கும். எனவே, இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். அடர் நிற அறையில் தூங்குவது சிறப்பு.

* ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  

* மருத்துவரின் பரிந்துரையின்றி, கண்களுக்குச் சொட்டு மருந்து உபயோகிக்கக் கூடாது

* பார்வை மங்குதல் பிரச்னை ஏற்பட்டால், அதைத் தவிர்க்கக்கூடாது.

மனித உடலில் ஏற்படும் எந்தவொரு பிரச்னைக்கும், சிறந்த தீர்வு வாழ்க்கைமுறை மாற்றங்கள் மட்டுமே. வாழ்க்கைமுறையும், சூழல்களும் 'கண்களைக்கூடப் பாதுகாக்குமா என்ன?' என சிலர் நினைப்பதுண்டு. நிச்சயம் நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். தொடர்ச்சியான வாழ்க்கைமுறை பழக்கங்கள்மூலம் பார்வையைக் கூர்மையாக்கும், வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்'' என்கிறார் கண் மருத்துவர் நவீன்.

Vikatan