Election bannerElection banner
Published:Updated:

இதய நோய்கள் நெருங்காமல் இருக்க, செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

இதய நோய்கள் நெருங்காமல் இருக்க, செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்! #LifeStartsAt40 #நலம்நாற்பது
இதய நோய்கள் நெருங்காமல் இருக்க, செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

``ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தங்களுக்குள் இருக்கும் பயத்தை சற்றே தள்ளிவைத்துவிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்!"

`கல்லைத் தின்னாலும் கரையுற வயசு' என்ற அடிப்படையிலேயே நம்மில் பலரும் வளர்ந்திருப்போம். அதனாலேயே, வரைமுறைகளற்ற உணவுப்பழக்கத்தைப் பின்பற்றியிருப்போம். வயது முப்பதைத் தொடும்போது நம் உடலின் மீதான சந்தேகம் ஏற்படத் தொடங்கும். அதிலும் நாற்பதைத் தொட்டுவிட்டால் அந்தச் சந்தேகங்கள் அனைத்தும் பயமாக மாறிவிடும். லேசாக நெஞ்செரிச்சல் ஏற்பட்டாலும்கூட அது மாரடைப்பாக இருக்குமோ என்று படபடக்கத் தொடங்கிவிடுவோம். உடலில் எந்தப் பிரச்னை இல்லையென்றாலும்கூட பயம் காரணமாகத் தலை சுற்றுவது போன்று இருக்கும். 

இதய நோய்கள் நெருங்காமல் இருக்க, செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

இதுபோன்ற உடல்நலன் சார்ந்த அக்கறைகளும் சந்தேகங்களும் உள்ளவர்கள், நிம்மதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தங்களுக்குள் இருக்கும் பயத்தை சற்று தள்ளிவைத்துவிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம் என்கிறார் இதயநோய் நிபுணர் பாரதி செல்வன். இதய ஆரோக்கியத்தை உறுதி செய்ய அவர் நம்மிடம் பகிர்ந்த சில ஆலோசனைகள்... 

``இதயநோய் ஒரு பிரச்னையாகும்வரை அதுபற்றி நம்மில் பலரும் யோசிப்பதே கிடையாது. இதயமும், நம்முடைய உடலின் மற்ற தசைகளைப் போன்றதே. இதய ஆரோக்கியத்துக்கு, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இதற்கு ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மிகவும் அவசியம். நாள்பட்ட பாதிப்புகளைத் தவிர்த்தாலே உடல் ஆரோக்கியத்தைக் குறிப்பாக இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொள்ளலாம். சில நேரங்களில் வாழ்வியல் பாதிப்புகள் இல்லையென்றாலும், வயது முதிர்வால் சில சிக்கல்கள் ஏற்படலாம். அந்த வகையில், 40 வயதைத் தொடுபவர்களுக்கு, இதயத் தமனி குறுகல் எனப்படும் இதய அடைப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம். இதைத் தவிர்ப்பது சிரமம் என்றாலும், அறிகுறிகள் மூலம் தொடக்க நிலையிலேயே பிரச்னைகளை கண்டறிந்தால், எளிமையாகச் சரிசெய்யலாம். இதைக் கவனிக்காமல்விட்டால் மாரடைப்புகூட ஏற்படலாம். 

இதய நோய்கள் நெருங்காமல் இருக்க, செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

இதய ஆரோக்கியத்துக்கான அடிப்படை, உடலின் மற்ற உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே. அதற்கு, கீழ்க்காணும் சில விஷயங்களைப் பின்பற்றவேண்டியது அவசியம்.

* அன்றாடம் உடற்பயிற்சி. 

* அதிகம் வறுத்த உணவுகள், பதப்படுத்திய உணவுகள், எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

* சீரான ரத்தஅழுத்தத்தை உறுதிப்படுத்தவேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்வது நல்லது.

* ரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது கட்டாயம். 

* சிகரெட், மதுப்பழக்கம் இருந்தால், அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

* உடலுக்கேற்ற எடையைப் பராமரிக்கவேண்டும். பி.எம்.ஐ அளவைக் கணக்கிடுவதன் மூலம், இதை உறுதிசெய்யலாம். 18 வயதுக்குக் கீழோ, 30 வயதுக்கு மேலோ இந்த அளவுகள் இருப்பது ஆரோக்கியமானதல்ல.

* மன அமைதிக்கான வழிமுறைகளை அவசியம் மேற்கொள்ளவேண்டும். இரவில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடுவது, வாய்ப்பிருக்கும்போது அனைவரும் ஒன்றாக வெளியே செல்வது நல்லது.

இதய நோய்கள் நெருங்காமல் இருக்க, செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுவதில் ஆண்கள் கூடுதல் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். 

அலட்சியப்படுத்தக்கூடாத இதய பாதிப்புகளுக்கான அறிகுறிகள்:

* நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, மார்புக்கு நடுவே தீவிர அழுத்தம். 

* மாடிப்படி ஏறும்போதோ, எடை தூக்கிக் கொண்டு நடக்கும்போதோ, மார்பு அல்லது முதுகுத் தண்டுவடத்தில் வலி உணர்வு.

* இரவுத் தூக்கத்தில் மூச்சுத்திணறல்.

* சில நிமிடங்களுக்கு மட்டும் திடீர் நினைவிழத்தல் ஏற்பட்டு, கண்கள் இருண்டுபோவது.                

* திடீரென இதயத்துடிப்பு அதிகரித்து, அடுத்த சில நிமிடங்களில் உடல் இயல்புக்கு நிலைக்குத் திரும்புவது.

* சாப்பாடு முடிந்து, அடுத்த இரண்டு நிமிடங்களில் நெஞ்சின் நடுப்பகுதியில் எரிச்சல் உணர்வு. 

இதய நோய்கள் நெருங்காமல் இருக்க, செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

இவற்றில் பெரும்பாலான அறிகுறிகளை, அசிடிட்டி என நினைத்து சிலர் கடந்துவிடுவதுண்டு. எந்தவொரு அசௌகரிய உணர்வையும், அலட்சியப்படுத்தக் கூடாது. அடிப்படை மருத்துவப் பரிசோதனையாவது செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக எக்கோ மற்றும் இசிஜி செய்வதுநல்லது. தொடர்ந்து மருத்துவர் பரிந்துரைக்கும்பட்சத்தில், கொரனரி ஆஞ்சியோகிராம் (Coronary Angiogram) செய்து பார்க்கலாம். அனைவரும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தங்களது அடிப்படை மருத்துவ ஆய்வுக்கு உடலை உட்படுத்திக் கொள்வது கட்டாயம். இதயத்துக்கான தனிப்பட்ட பரிசோதனைகளான இசிஜி, எக்கோ போன்றவற்றை மருத்துவரின் பரிந்துரையின்றி செய்ய வேண்டாம்!" என்கிறார் அவர்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு