Published:Updated:

தூக்க மாத்திரை!

தூக்க மாத்திரை!

தூக்க மாத்திரை!

தூக்க மாத்திரை!

Published:Updated:
தூக்க மாத்திரை!
##~##

அந்தப் பெரியவருக்கு 50 வயது இருக்கும். 'சரியாகத் தூக்கம் வரவில்லை’ என்று ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போனார். பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், 'உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால், தூக்கம் வருவதற்கு என்று தனியாக மருந்து மாத்திரைகள் எதுவும் இப்போதைக்குத் தேவை இல்லை. தானாகவே சரியாகிவிடும். அப்படி சரியாகவில்லை என்றால், திரும்ப வாருங்கள்’ என்று நம்பிக்கை சொல்லி அனுப்பினார். ஆனால், பெரியவரால் அந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தானாகவே கடைக்குச் சென்று 'தூக்க மாத்திரை’களை வாங்கி சாப்பிட்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் அன்று சாப்பிட்ட இரண்டு மில்லி கிராம் தூக்க மாத்திரை அவருக்கு நன்றாக வேலை செய்ததால்... அதையே தினமும் தொடர்ந்தார். ஒருகட்டத்தில் அந்த இரண்டு மில்லி கிராம் மாத்திரையாலும் அவருக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கவில்லை. அதனால், இரண்டு மில்லி கிராம் என்ற அளவை அதிகப்படுத்த முயன்றார். ஆனால், 'மருந்துச் சீட்டு இல்லாமல், இந்த அளவுக்கு மேல் மாத்திரைகள் கொடுக்க முடியாது’ என்று மருந்துக் கடைக்காரர் மறுத்துவிட்டார். ஆனாலும், மனிதர் கொஞ்சமும் அசராமல், ஒரு மருந்துக் கடைக்குப் பதிலாக, பல மருந்துக் கடைகள் ஏறி இறங்கி, மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்.

தூக்க மாத்திரை!

மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்தப் பழக்கத்தை வருடக்கணக்கில் தொடர்ந்து இருக்கிறார். கடைசியாக என்னிடம் சிகிச்சைக்கு வரும்பொழுது தூக்கத்துக்காக தினமும் அந்தப் பெரியவர் சாப்பிட்டு வந்த மாத்திரைகளின் எண்ணிக்கை ஆறு.

''நான் செய்வது தவறு என்று எனக்கே தெரிகிறது டாக்டர். பிரச்னை என்னவென்றால், இப்போது ஆறு மாத்திரைகள் சாப்பிட்டாலும்கூட, சரியாகத் தூக்கம் வரவில்லை. நாளையில் இருந்து நான் மருந்து மாத்திரை இல்லாமல் நிம்மதியாத் தூங்க நீங்கதான் வழி செய்யணும்...'' என அவர் கெஞ்சியபோது பரிதாபமாக இருந்தது.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த அளவு மாத்திரைகள் சாப்பிட்டதே தவறு. அதையும் திடீரென ஒரே நாளில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்திவிட வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய அறியாமை?

புதிதாக ஒரு மாத்திரையைப் பயன்படுத்தும்போது, ஆரம்பத்தில் அதன் வீரியம் அதிகமாகவே இருக்கும். ஆனால், தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது அந்த மாத்திரையின் வீரியத்துக்கு உடம்பு பழகிவிடும். அதன் பிறகு மருந்தின் அளவைக் கூட்டினால்தான் வேலை செய்ய ஆரம்பிக்கும். அடிப்படையான இந்தப் பிரச்னையினால்தான் ஆறு மாத்திரைகள் வரை சாப்பிடுகிற அபாயக் கட்டத்துக்கு வந்திருந்தார் அவர்.

பொதுவாக நோயாளியின், தூக்கமின்மைப் பிரச்னைக்கு என்ன காரணம் என்ற அடிப்படையைக் கண்டறிந்து அதனைச் சரிசெய்தாலே நிம்மதியான தூக்கம் கிடைத்துவிடும். உதாரணமாக, காலில் முள் குத்தி வலி ஏற்பட்டால், வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடுவது சரியான தீர்வு இல்லை. அந்த முள்ளை எடுத்தெறிந்துவிட்டு அதன் பின்பு வலி தீர்வதற்கான சிகிச்சை அளிப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

சில நேரங்களில், நோயாளிக்குத் தூக்க மாத்திரை கொடுத்தே ஆக வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால்கூட, மிக மிகக் குறைந்த அளவு வீரியம்கொண்ட மாத்திரைகளை மட்டுமே நாங்கள் பரிந்துரைப்போம்.

ஆனால், இந்தப் பெரியவரைப் போன்று தனக்குத்தானே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும், அதையும் தாண்டி ஆறு மாத்திரைகள் வரை சாப்பிடுவது என்பதும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடக் கூடியது.

இந்த நிலையில், 'நாளையே நான் மாத்திரைகளை நிறுத்திவிட வேண்டும்’ என்று ஆசைப்படுவதும் தவறு. ஏனெனில், எந்தப் பழக்கத்தையுமே சட்டென நிறுத்திவிடுவது முடியாத காரியம்.

உண்மையிலேயே அவருக்குத் தூக்கம் வராததற்கு காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து அதனைச் சரிசெய்யவும், ஏற்கெனவே சாப்பிட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்கவும் நிறைய கால அவகாசம் தேவைப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக 'தூக்கமின்மைப் பிரச்னையில் இருந்து நம்மால் மீண்டு வர முடியும்’ என்ற நம்பிக்கை நோயாளிக்கு வர வேண்டும். இதனை எல்லாம் அந்தப் பெரியவரிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி, கடந்த ஒன்றரை வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தேன். தூக்க மாத்திரைகளின் பிடியில் இருந்து இப்போது அவர் முழுமையாக மீண்டுவிட்டார்.

தூக்கப் பிரச்னைக்கு ஆங்கில மருந்துகளைத் தவிர ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகா போன்ற மாற்று மருத்துவ முறைகள் பலன் அளிக்குமா? அடுத்த இதழில் இதுகுறித்துப் பேசலாம்.

- ஆராரோ ஆரிராரோ

      டிப்ஸ்...

• காலை அல்லது மாலை நேரங்களில் தினமும் உடற்பயிற்சி செய்வது, இரவில் நிம்மதியாகத் தூங்க உதவி புரியும். இசை, தியானம், புத்தகங்கள் படித்தல், ஓவியம் வரைதல்... என்று மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டால் இரவில் அநாவசியமான சிந்தனை ஓட்டங்கள் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.

• இரவு வேளைகளில், டி.வி., கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இருந்து வெளிவரும் பிரகாசமான வெளிச்சம் தூக்கத்தைத் தடை செய்யும். விளக்குகளை அணைத்துவிட்டு கம்ப்யூட்டரில் வேலை செய்வது கண்களுக்கும் தூக்கத்துக்கும் பாதகமான விஷயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism