Published:Updated:

பெயரில் குப்பை... நலனில் கோபுரம்!

பெயரில் குப்பை... நலனில் கோபுரம்!

பெயரில் குப்பை... நலனில் கோபுரம்!

பெயரில் குப்பை... நலனில் கோபுரம்!

Published:Updated:
பெயரில் குப்பை... நலனில் கோபுரம்!

தமிழச்சி...  

மக்களின் வாழ்வோடு கலந்த மண் மணக்கும் கிராமத்து மருத்துவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இன்னிக்குக் குப்பைக் கீரைக் கடைசல்தான் முக்கு வீட்டம்மா கொடுத்துவிட்டாங்க'' என்றபடி வந்த அம்மாவிடம், ''அதென்னமா பேரு? குப்பையில விளையிறத எப்படிச் சாப்பிடறது?'' என்றேன். ''குப்பை எவ்வளவு நல்ல உரம்னு தெரியாதா... விவசாயத்துல குப்பைக்கு ஏக கிராக்கின்னா, ஆரோக்கியத்துல குப்பைக் கீரையை அடிச்சுக்க ஆளில்லை'' என்ற அம்மாவிடம், நான் எங்கோ படித்த

''நீரைப் பெருக்கி விடு நீடனலைத் தானெழுப்பும்

பாரநறுற் தங்கத்தை பஸ்மிக்கு! நேரே

விடவிருக்கும் பொற்றாடை மேவுல்குன் மாதே

யடவிநிற்கு முள்ளிக் கீரை''

எனும் வரிகளைச் சொன்னேன்.

பெயரில் குப்பை... நலனில் கோபுரம்!

சிரித்தபடி அம்மா, ''பாட்டுக்கு ஒழுங்கா அர்த்தம் சொல்லு'' என மிரட்டுகையில், ''என்னா, டீச்சரு, இன்னும் உத்யோகத்த வுடலியா- பாப்பாவை மிரட்டுற'' என்றபடி நுழைந்தார் கெம்பம்மா. ''சும்மா, குப்பைக் கீரையைப் பத்திப் பேசிட்டிருக்கோம்'' என்றதைக் காதில் வாங்காதவர்போல், வாசல்படியில் உட்கார்ந்து, சுருக்குப்பையைத் திறந்து ஏதோ எடுத்தார்.

##~##

அள்ளி முடிந்திருந்த அவரது கொண்டை, சிக்கென்று பிசிறில்லாமல் இருந்தது. வழுவழுப்பான மினுக்குடன் தேங்காய் எண்ணெய் கழுத்தோரம் வழிந்திருந்தது. பெரிதான குங்குமப் பொட்டின் மீது பூசியிருந்த திருநீறு வியர்வையில் ஒழுகி சாம்பல் நிறமாகி இருந்தது. வெற்றிலைச் சீவல் போட்ட கறை அழுத்தமாகப் படிந்திருந்ததையும் மீறிப் பற்கள் வெளீரிட்டன. 'கைமருந்து’ வைத்தியம் பார்க்கின்ற கெம்பம்மா ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர். ஏதாவது வேலையென்று மல்லாங்கிணறு வந்தால், எங்கள் வீட்டுக்கு நிச்சயம் வருவார். ''என்ன கெம்பம்மா, சுருக்குப்பையில காசு நிறைய இருக்கா?'' என்றேன். ''கைவைத்தியத்துக்குக் காசு வாங்க மாட்டோம். அவுகளாப் பார்த்து இஷ்டப்பட்டதைக் கொடுப்பாக'' என்றவர், ''வயிறு உப்புசமுன்னு ஒரு பாப்பாவை வடக்குத் தெருவில இருந்து மூணு நாளைக்கு முன்னால கூட்டிட்டு வந்தாக. சொகமாயிருச்சானு ஒருநடை பாக்க வந்தேன்'' என்றார்.

அம்மா அதற்குள் குப்பைக் கீரையை ஆய்வதற்கு எடுத்துவர, ''என்னது முள்ளிக் கீரையா?'' என்றபடி பாகுபாடு பார்க்கத் தொடங்கினார். ''குப்பைக்கீரைங்கிறதவிட, முள்ளிக்கீரைன்னு சொன்னா நல்லாருக்கு...'' என்ற என்னிடம், ''குப்பைன்னா மட்டமா என்ன? கழுத்தைவிட்டு இறங்கி இரைப்பைக்குப் போறவரைக்கும்தான் சாப்பாடு. அப்புறம் குப்பைதான்... அதக் கொஞ்ச நேரமாவது நம்ம ஒடம்புக்குள்ள வைச்சுருக்கம்ல? இந்த முள்ளிக்கீரைச் சாறு, தங்கத்தைக்கூட பஸ்பமாச் செறிக்கவெச்சுடும். இதச் சாப்பிட்டம்னா, பசி தீயாப் பிடுங்கும்!'' எனத் தன் பாட்டுக்குப் பேசிக்கொண்டேபோனார்.

நான் அம்மாவிடம் திக்கித் திணறி மேற்கோள் காட்டிய பாடலின் பொருளை இவர் போகிற போக்கில் சொல்லிவிட்டாரே என அசந்துவிட்டேன்.

அதற்குள் வடக்குத் தெரு சாந்தி தன் ஐந்து வயது மகளோடு கெம்பம்மாவைப் பார்க்க வந்துவிட்டாள். கொஞ்சம் சோர்வாகத் தெரிந்த பாப்பாவைப் பார்த்தவுடன், கை கழுவித் துடைத்துவிட்டு வந்த கெம்பம்மா, பாப்பாவின் வயிற்றில் மெதுவாக அழுத்திப் பார்த்தார். ''உப்புசம் இன்னும் முழுசாக் குணமாகல போலிருக்கு'' என்றவர், ''நான் சொன்னபடிக்கு அரைச்சுக் கொடுத்தியா?'' எனச் சாந்தியைக் கேட்டார். ''ஆமாக்கா, கொஞ்சம் சீரகத்தை மை போல அரைச்சு, அதுல எலுமிச்சம் பழச் சாறைப் பிழிஞ்சு, அந்த லோட்டா நிறையற அளவுக்கு வெந்நீரைவிட்டு நல்லாக் கலக்கி, மூணு வேளையும், சாப்பிடறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னால கொடுத்தேங்கா. இன்னும் சரியாப் பசிக்கலைக்கா...'' என்ற சாந்தியின் குரலில் கவலை அப்பி இருந்தது.

பெயரில் குப்பை... நலனில் கோபுரம்!

''சரி, இன்னிக்கொரு நாள், இஞ்சியையும் பச்சைக் கொத்தமல்லியையும் சமமா எடுத்து அரைச்சு, அதோட எலுமிச்சச்சாறக் கலந்து கொடுத்துப் பாரு. அப்பவும் கேட்கலன்னா, டவுனு டாக்டருகிட்ட கூட்டிட்டுப் போ...'' என்ற கெம்பம்மா, சலிப்பான குரலில், ''அப்பன் அருமை செத்தாத் தெரியும். உப்பின் அருமை இல்லாட்டாப் புரியும்கிறது மாதிரி இந்தக் காலத்துப் புள்ளங்களுக்கு விளையாட்டோட அருமை வியாதி வர்றப்பதான் தெரியும். அஞ்சு வயசுல மந்தம், உப்புசம்னா... அம்பது வயசுக்கு என்னாகிறது? 'அக்கினியைத் தின்னாலும் ஜீரணிக்கிற வயசுல, அல்லித் தண்டே அஜீரணம்னா, என்னத்தச் சொல்ல?'' என்றார். ''சரிக்கா, கவனமாப் பார்த்துக்கறேன்'' என்று கிளம்பிய சாந்தியிடம், ''சரியாகலைன்னா, டவுனுக்குப் போ. ஆயிடுச்சுன்னா, ஒருவார்த்தை பால்கார ரெட்டியார்ட்ட சொல்லிவிடு. ரவைக்குச் செத்த நிம்மதியாத் தூங்குவேன்ல'' என்ற கெம்பம்மாவின் குரல் சுத்துப்பட்டியில் கைவைத்தியம் பார்க்கிறவர்கள் அத்தனை பேரின் கவலையையும் எதிரொலித்தது.

தங்களது வைத்தியம் கைகொடுத்ததா, வலியை சொஸ்தமாக்கியதா எனும் கவலையுடன் தூக்கம் தொலைக்கின்ற இவர்கள் அருகிவிட்டார்கள் என்றாலும், அவர்களது பாரம்பர்யமான வைத்திய முறைகளைப் பதியன் போட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லத் தவறவில்லை. கெம்பம்மாவின் மகளும் கைவைத்தியம் பார்ப்பவள்தான். ''ஒங்க மக செங்கம்மாவும் மருத்துவச்சிதானே..?'' என்ற என் கேள்விக்கு, ''ம், 'அடி நொச்சி... நுனி ஆமணக்கா என்ன?’ ஆனா, டின் ஃபேக்டரில வேலைக்குப் போறா'' எனப் பதில் தந்தார். செங்கம்மாவும் அவரைப் போலவே நல்ல உயரமும் அதற்கேற்ற உடல்வாகும்கொண்டவள். அம்மாவின் கைராசி அவளுக்கும் எனப் பரவலாகப் பேசும் அளவிற்குப் பெயர் வாங்கியிருந்தாள்.

ஆய்ந்த கீரையை அம்மா சமைக்கின்ற வாசனை வந்தது. '' 'அமாவாசை இருட்டில் பெருச்சாளி போனதெல்லாம் வழின்னு வாழக் கூடாது’. நம்ம ஒடம்புக்கும் காலத்துக்கும் வேலைக்கும் ஏத்த மாதிரி சாப்பிடணும். நம்மூர்ல விளையிற கீரை, நாட்டுக் காய்கறிகளைப் பக்குவமாச் சமைச்சுச் சாப்பிட்டாலே, ராசாவாட்டம் இருக்கலாம். கறி, கோழி, மீனு வைக்கிறப்ப மிளகும் பூண்டும் இஞ்சியோடச் சேர்த்துக்கிட்டாலே போதும். சுவைக்குமாச்சு, ஜீரணத்துக்குமாச்சு. 'அரிசி ஆழாக்கா இருந்தாலும் அடுப்புக்கு மூணு கட்டை வேணுமாக்கும்’.  நம்ம எண்சாண் ஒடம்புக்கு அரைசாண் வயிறுதான் எல்லாருக்குமே..!'' என்றபடி எழுந்தார். அவர் வயசுக்குக் கை ஊன்றியோ, சற்றுத் தாங்கியோ எழாமல் விருட்டென்று நிமிர்ந்த கம்பென நின்றபோது அவருடைய ஆரோக்கியம் தெரிந்தது.

தை மாத மதிய வெயிலின் இணக்கம் பரவியத் தன் உடலைக் கொஞ்சம் வளைத்துப் புடவையை நேராக்கிக்கொண்டவர், என்னைப் பார்த்து ''முள்ளிக்கீரையை ஒரு பிடி பிடி, அடுத்த வாட்டி நான் சாணாக்கீரை பறிச்சுட்டு வர்றேன். ரெட்டியப்பட்டி பாலத்துக் கீழ அப்பிக்கெடக்கு'' என்றபடி கிளம்பினார். 'உறுதியும் திடமுமான கிராமத்து மருத்துவச்சிகளின் நடையும் உடற்கட்டுமே இந்த மல்லாங்கிணற்றின் வசீகர ரகசியம்’ என்றபடி வெயில் அவரை ரசித்துப் பின்தொடர்ந்தது!

- மல்லாங்கிணறு மணக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism