Published:Updated:

வாதம் பிடிவாதம்!

வாதம் பிடிவாதம்!

வாதம் பிடிவாதம்!

வாதம் பிடிவாதம்!

Published:Updated:
வாதம் பிடிவாதம்!
##~##

தை மாசப் பனியின் கூதலுக்கு, முன் மதிய வெயில் சுகமாக இருக்கக் கோயிலின் முகப்புத் திண்ணையில் போய் உட்கார்ந்தேன். மதியம் 12 மணி ஆகிவிட்டதால், தெருவில் நடமாட்டம் இல்லை. அவரவர் வீட்டுக்குக் குழாய்கள் வந்துவிட்டதால், தெருமுக்குக் குழாயடிகளும் பெண்களின் வாயடிப்பும் காணாமல் போய்விட, வெறுமையை மென்றுகொண்டு இருந்தது வெயில். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தா சுமதி, பெருமாள் பிரசாதம்'' என்ற குரலோடு என்னோடு பூமா மன்னி சேர்ந்துகொண்டார். பக்கத்து வீட்டு மங்கை மாமியின் மருமகள். வெண் பொங்கலை வாழை இலைக் கீற்றில் பொதிந்து சுடச்சுட எடுத்து வந்திருந்தவரை உற்றுப் பார்த்தபடி, பொங்கலைச் சுவைத்தேன். இடுப்பைப் பிடித்தபடி மிகுந்த அசௌகர்யமாக இருந்தார்.

எனது பார்வைக்குப் பதிலாக, ''இந்த இடுப்பும் முதுகும் சேரும் இடத்தில் பிடிச்சுக்கிட்டு, ரெண்டு நாளா ஏகப்பட்ட வலி. குனிஞ்சு, நிமிர்ந்து பெருமாளுக்குக் கோலம் போட முடியலை. செவ்வரளி பறிச்சுச் சார்த்தவும் முடியலைல...' என்றபடி கால்களைக் கொஞ்சம் நீட்டி மடக்கினார். வலியில் கோணிய

வாதம் பிடிவாதம்!

முகத்தில் களைப்பைவிட சலிப்பே தூக்கலாகத் தெரிந்தது.

''ஏன் மன்னி, மங்கை மாமி கை வைத்தியம் செய்வாரே... கேட்கலியா?' என்றேன்.

''அத்தைக்கு வயசாச்சு...' என்று அவர் முடிப்பதற்குள் மாமி, ''ஆனா, வைத்தியத்துக்கு வயசாகுமா என்ன... சொன்ன பிரகாரம் கேட்டாத்தானே சுமதி, உடம்பு சுகப்படும்?' என்றபடி மெதுவாகத் திண்ணைப் பக்கம் வந்தார்.

அவரது ஒரு கண் பார்வை சுத்தமாகப் பறிபோனதால், தடுமாறித்தான் நடக்கிறார். ஆனாலும், குரலில் திடமும் தெளிவும் குறையவில்லை. திண்ணையின் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றவரைக் கீழே இறங்கிக் கை கொடுத்து மேலே உட்காரவைத்தேன். 83 வயதாகின்ற மங்கை மாமி வயோதிகத்தின் நிழலில் தோல் சுருங்கி, சின்னச் சின்ன உபாதைகளுடன் இருந்தாலும், இத்தனை வயசுக்கும் காய்ச்சல், தலைவலி என்று மருத்துவமனைக்குச் செல்லாதவர். தனது ஆரோக்கியம் குறித்துப் பெருமையும் தன் கை வைத்தியத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும்கொண்டவர்.

''மன்னிக்கு முதுகுல மட்டும் பிடிப்பாம் மாமி' என்ற என்னை இடைமறித்து, ''ம்... 'தம்பிரான் நல்லவர்... தடிதான் பொல்லாதது’ங்கிற மாதிரி இருக்கு நீ சொல்றது. உடம்பு வில்லாம். ஆதாரமான, முதுகு மட்டும்தான் பிரச்னையாக்கும்!' என்ற மாமி, பூமா மன்னி பக்கம் திரும்பினார்.

அதற்குள், பூமா மன்னி சிரமத்துடன் திண்ணையில் இருந்து இறங்கிக் கிளம்ப ஆயத்தமாகிவிட்டார்.

''கொஞ்சம் உட்காரு பூமா. 'தீயிலிட்ட நெய் திரும்ப வராது’ம்பா. ஆரோக்கியம் போச்சுன்னா, ஆயுசுக்கும் சுமைதான். நான் சொன்னபடி ஒத்தடம் வைச்சியா?' என்ற மாமியிடம்... ''எல்லாம் செஞ்சும் எதுவும் கேட்கலை அத்தை. சாயரட்சை டாக்டர்ட்ட போகப்போறேன்' என்று பட்டும்படாமல் பதில் சொன்னபடி, மன்னி நடக்கத் தொடங்கினார். பொங்கல் சூட்டில் வாடி வதங்கியிருந்த இலைக் கீற்று எனக்கும் மாமிக்கும் நடுவில் சுருண்டிருக்க, எறும்புகள் மொய்க்கத் துவங்கியிருந்தன.

''பாரு சுமதி... டாக்டர்கிட்ட தாராளமாப் போகலாம். முதல்ல நம்ம கை வைத்தியத்த ரெண்டு நாளைக்கு முயற்சி பண்ணிப் பார்க்கிறதுல தப்பில்ல. 'அகதி சொல் அம்பலம் ஏறாது’ங்கற மாதிரி நம்ம சொல்லை இந்தக் காலப் பொண்ணுங்க கேட்பாங்களா என்ன?' என அலுத்துக்கொண்ட மாமியிடம், ''அது என்ன ஒத்தடம்?' என்றேன்.

''உனக்கு வாத நாராயணன் மரம் தெரியுமோ? கொன்றை மரத்துக் காய் போலத்தான் இந்த மரத்தோட காய்களும் இருக்கும். மொக்கைப் பார்த்தியானா, ரத்தச் சிவப்புல கண்ணுல ஒத்திக்கலாம். நம்ம புளிய மர இலை போலவே, ஒரே காம்புல நிறைய இணுக்குகள் இருக்கும். அந்த இலைதான் பிடிப்புக்கு அருமருந்து' என்றார்.

''வைத்தியத்தைச் சொல்லுங்க மாமி' என்றேன்.

''திண்ணைக் கல் குத்துறது... கொஞ்சம் வசதியாச் சாஞ்சுக்கிறேன்' என்ற மாமி கால் மாற்றி உட்கார்ந்தபடி விவரித்தாள்:

''நம்ம ஒடம்புல எங்காவது பிடிப்பு ஏற்பட்டுச் சிரமப்பட்டா, இந்த வாத நாராயணன் இலைகளைக் காம்பு ஆய்ஞ்சு, எண்ணெய்ச் சட்டியில போட்டு, நல்லா வேப்ப எண்ணெய்விட்டு வதக்கணும். அப்புறமா, ஒரு துணியில கொட்டிச் சூடா இருக்கிறச்சயே, வலியும் பிடிப்பும் உள்ள இடத்தில் மெதுவா ஒத்தடம் கொடுக்கணும். குறைஞ்சது அஞ்சு, ஆறு தடவையாவது தினமும் இப்படிக் கொடுத்தா, பட்டுன்னு வாதம் விட்டுடும்கிறது என் ஆழ்வார்த் திருநகரி அனுபவமாக்கும்'' என்று மாமி முடிக்கும்போது, ''வாதத்துக்கு மருந்து உண்டு மாமி, ஆனாக்கா, மருமக பிடிவாதத்துக்கு மருந்திருக்கா?' என்றபடி பூண்டுக்காரம்மா வந்து சேர்ந்தார்.

வெள்ளைப் பூண்டு வாசனைக்கு மூக்கைச் சுளித்த மாமியிடம்,

''ஆத்து நீர் வாதம் போக்கும்

அருவி நீர் பித்தம் போக்கும்

சோத்து நீர் இரண்டையும் போக்கும்''

என்றபடி தலைக் கூடையைக் கீழே இறக்கி ஓர் ஓரமாகவைத்தார். சேலை முந்தானையை எடுத்து முகம் துடைத்து, பின் சுருட்டிப் பின் பக்கம் வைத்து அதன் மேல் வாகாக உட்கார்ந்துகொண்டார். ''மாமி... பூண்டு, வெங்காயம் ஆகாதுல்ல உங்களுக்கு' என்றபடி கூடைக்குள் இருந்த சிறு தூக்குவாளியை

வாதம் பிடிவாதம்!

எடுத்தாள். ''நீச்சத் தண்ணி செமதி, இந்தச் சோத்துத் தண்ணிதான் எனக்குச் சொர்க்கம். இதக் குடிக்கிறதால வயித்துப் புண், தொண்டை எரிச்சல், மலச் சிக்கல் - இதெல்லாம் கிட்ட அண்டாது. ஒனக்கு ஊத்த வாய்க் காபின்னா, எனக்குக் கொப்பளிச்சுக் குடிக்க, இந்தச் சோத்துத் தண்ணீதான்...' என்று சிலாகித்துக்கொண்டே போனவரை மாமி ரசிக்கவில்லை.

கவனிக்காதவர்போல, விடாமல் பூண்டுக்காரம்மா, ''ஆத்து நீரில் முங்கினா பக்கவாதம், முடக்கு வாதம், மூட்டுவாதம் எல்லாம் ஓடிடும். அருவி நீரில் குளிச்சா பித்தம் சம்பந்தமான வியாதி சட்டுன்னு குணமாகிடும். இந்த ரெண்டும் இல்லாத நம்மள மாதிரி கரிசக்காட்டு ஜனங்களுக்குச் சோத்து நீர்தான் வாத, பித்தச் சனியன்களுக்கு ஒரே மருந்து' என்று நீட்டி முழக்கினார். ''சோத்து நீர்ல கொஞ்சம் வெங்காயத்தை நறுக்கிப்போடறத விட்டுட்டியே' என்ற என்னையும் மாமி ரசிக்கவில்லை. மாமிக்கு வெங்காயமும் ஆகாது என்பது சட்டென்று புரிபட, ''சரி, மாமி, நேரமாச்சு. மெதுவாப் போய்க் கொஞ்சம் ஓய்வெடுங்க' என்றேன். பூண்டுக்காரம்மாவிடம் மாமி, ''தங்கச் செருப்பா இருந்தாலும் தலையில வைச்சுக்க முடியுமா? வெங்காயமும், பூண்டும் எனக்கு அப்படித்தான். விலக்குன்னா அது கிட்டே வரப்படாது' என்றவர் என்னைத் தாங்கிப் பிடித்தபடி திண்ணையில் இருந்து இறங்கி மெதுவாய் நடந்தார். கூடவே அவர் வீடு வரை கை பிடித்தபடி நானும் சென்றேன்.

திரும்பி வரும்போது, கோயில் திண்ணையின் கீழே தன் முந்தானையை விரித்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார் பூண்டுக்காரம்மா. தன் மண்ணின் உணவு முறையே, தனது பிழைப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் அடிப்படை எனும் புரிதல் அவரின் லேசான மடித்த உதடுகளில் புன்னகையாய்த் தேங்கி இருந்தது. பூண்டின் வாசனையில் கிறங்கிக்கிடந்த வெயிலைத் தனிமையில் விட்டுவிட்டு, நான் வீடு திரும்பினேன். உள்ளே வாத நாராயண மரத்தின் நிழல் எனக்காகக் காத்திருந்தது!

- மல்லாங்கிணறு மணக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism