Published:Updated:

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

Published:Updated:
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
##~##

லக அளவில் அனைத்துத் தரப்பு மக்களாலும் பரவலாகப் பின்பற்றப்படுவது ஆங்கில மருத்துவ முறை (அலோபதி). ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் வசிக்கும் சூழலில் இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை மருந்துகளையும் நோய் தீர்க்கும் மாற்று மருத்துவ முறைகளையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அடிப்படை மருந்துத் தயாரிப்புகளில் இந்த மருத்துவ முறைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும்கூட, அனைத்துமே மக்களின் பிணியைப் போக்கி ஆரோக்கியம் காக்கும் நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கப்பட்டவை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், நடைமுறையில் அலோபதி மருத்துவத்தைப் பின்பற்றினால் பக்க விளைவுகள் அதிகளவில் ஏற்படும் என்றும், மாற்று மருத்துவ முறைகளில் இந்தப் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என்பதுபோலவும் மக்களிடையே ஒரு மாயை உலவுகிறது.  இது உண்மை அல்ல!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

''நெடுநாட்களாக நான் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாகிவிட்டேன். தொடர்ந்து இப்படி அலோபதி மருந்துகள் சாப்பிட்டால், பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். அதனால், தூக்க மாத்திரையை நிறுத்தவும் நிம்மதியாகத் தூங்கவும் மாற்று மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவரைச் சந்தித்து கடந்த சில மாதங்களாக மருந்து சாப்பிட்டு வருகிறேன். ஆனால், இந்த மாற்று மருத்துவ மருந்துகளால் எனக்கு சரியான தூக்கம் வரவில்லையே?'' என்ற குறையோடு என்னிடம் வந்திருந்தார் ஒரு நோயாளி.

''மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த ஒரு மருந்தையும் தொடர்ந்து சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரத்தான் செய்யும். அதற்கு ஆங்கில மருத்துவம், மாற்று மருத்துவம் என்ற வேறுபாடு எதுவும் கிடையாது'' என்பதை விளக்கிச் சொல்லிவிட்டு, ''இப்போது நீங்கள் என்னென்ன மருந்துகள் சாப்பிடுகிறீர்கள்? அதில் எந்தெந்த மூலப் பொருட்கள் கலந்திருக்கின்றன என்ற விபரங்கள் உங்களுக்குத் தெரியுமா?'' என்று நான் திருப்பிக் கேள்வி கேட்டேன்.  தெளிவான பதில் அவரிடமும் இல்லை.

ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஆங்கில மருத்துவ முறையில், தயாரிக்கப்படும் மருந்துகளில் என்னென்ன பொருட்கள் எந்தெந்த அளவுகளில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்கிற புள்ளிவிவரங்கள் மருந்து அட்டையிலேயே தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், ஏனைய மாற்று மருத்துவ முறைகளில் இந்த விவரங்கள் பெரும்பாலும் இருக்காது. எனவே, தொடர்ச்சியாக இதுபோன்ற மருந்துகளைச் சாப்பிட்டு வரும் நோயாளியின் உடம்பில் அந்த மருந்தானது எந்தவிதமானப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதே நிஜம்.

மருந்துகளோடு நம்பிக்கையும் சேரும்போதுதான் நோய் முற்றிலும் குணமாகும். 'மருந்து பாதி; நம்பிக்கை மீதி’ என்பது நினைவில் இருக்கட்டும். அவநம்பிக்கையோடு எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள். உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும் மருத்துவ முறையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றி மருந்து சாப்பிடுங்கள்; அதுதான் இங்கே முக்கியம். மற்றபடி சித்தா, அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி என்று இடையிடையே ஒவ்வொரு மருத்துவ முறையாக மாறிக்கொண்டு இருக்காதீர்கள். இது பல பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

''தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதைக் காட்டிலும், யோகா, தியானம், மசாஜ் செய்துகொண்டால், நல்ல தூக்கம் கிடைக்கும் என்கிறார்களே உண்மையா டாக்டர்?'' என்று சிகிச்சைக்கு வந்த ஓர் இளம்பெண் என்னிடம் கேட்டார். வாய் வழியாக உள்ளுக்குள் சாப்பிடும் மருந்து வகைகள்பற்றிக் கேட்டால், ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்ல முடியும். ஆனால், மன அழுத்தத்தைக் குறைக்கும் இதுபோன்ற பயிற்சி முறைகளோடு மாத்திரையின் செயல்பாட்டை ஒப்பிடச் சொல்லிக் கேட்டால் என்ன சொல்வது?

பிடித்த விளையாட்டுக்களில் ஈடுபடுவது, இனிமையான இசையைக் கேட்டு ரசிப்பது, நடைப்பயிற்சி செல்வது, குடும்ப உறுப்பினர்களோடு சந்தோஷமாக பேசிக் களிப்பது என்று மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இன்னொரு பக்கம், 'யோகா மற்றும் தியானம் செய்வதால் எனது தூக்கமே பறிபோய்விட்டது’ என்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவரவர் மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும்போது மனச்சுமை இறங்கி மனசு லேசாகிவிடுவதால், நல்ல தூக்கம் கிடைக்கும். எனவே, இங்கே ரிலாக்சேஷன் என்பதுதான் முக்கியமே தவிர... எந்த மாதிரியான ரிலாக்சேஷன் என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

''குறட்டைத் தொல்லையால் பெரும் அவதிப்படுகிறேன். யோகா செய்தால் குறட்டைத் தொல்லை போய்விடும் என்கிறார்களே?'' என்று கேட்டார் நண்பர் ஒருவர்.

குறட்டைத் தொல்லைக்கு ஒரே வரியில் பதில் சொல்லிவிட முடியாது. அதுபற்றி அடுத்த இதழில் விரிவாகச் சொல்கிறேன்.

- ஆராரோ ஆரிராரோ

 டிப்ஸ்...

• நடைப்பயிற்சி நல்லதுதான். ஆனால், இரவு வேளையில் வீட்டுக்கு வெளியே சென்று நடைப்பயிற்சி செய்தீர்கள் என்றால், தூக்கத்துக்குப் பதிலாக விழிப்பு நிலை தொடர்வதற்கு வாய்ப்பு உண்டு. எனவே தூக்கம் வராமல் தவிக்கக் கூடும்.

• ''குளித்துவிட்டுத் தூங்கினால், நிம்மதியான தூக்கம் வரும்'' என்பார்கள் சிலர். குளித்துவிட்டு உடனே தூங்கப் போனால், தூக்கம் வராது. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே குளிப்பதுதான் நல்லது.

• தூக்கம் வராமல், தவிப்பவர்கள் படுக்கையைக் கண்டாலே பதற்றம் ஆவார்கள். இவர்கள், தூக்கம் வருவதாக உணர்ந்தால் மட்டுமே படுக்கையில் சாய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இது படுக்கை மீதான பதற்றத்தைக் குறைக்கும்.

• குடும்பப் பிரச்னைகள் காரணமாக மன அழுத்தம் இருந்தால், மனது ஒரு நிலையில் நில்லாது அலைபாய்ந்துகொண்டே இருக்கும். இவர்கள் தங்களது நெருக்கமான நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொண்ட பிறகு தூங்கச் செல்லலாம்.

• தூக்கம் வருவதற்காக புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால், படுக்கையில் அமர்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ படிக்காதீர்கள். நாற்காலியில்  அமர்ந்துகொண்டு புத்தகம் வாசியுங்கள். தூக்கம் வந்ததும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism