Published:Updated:

இளநீரில் இருக்கிறது இதய ரகசியம்!

மண்வாசம்

பிரீமியம் ஸ்டோரி
இளநீரில் இருக்கிறது இதய ரகசியம்!

வெயிற்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறியாகக் கரிசல் காந்தல் ருசியுடன் கண் விழித்த காலை

இளநீரில் இருக்கிறது இதய ரகசியம்!

நேரம். நடைப்பயிற்சி முடிந்தவுடன் வழக்கமாக இளநீர் வெட்டித் தரும் தேவர் ஐயாவின் சம்சாரம் திடீரென இறந்து மாதங்கள் சில கழிந்துவிட்டன. வெறுமையைச் சொல்லும் தொழுவத்துக்குள் எட்டிப் பார்த்தேன். தேவர் ஐயா மோட்டுவளையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் எழுந்தபடி, ''நெஞ்சைக் கரிக்குதுன்னு சொன்னவதான். அப்புறம் எந்திரிக்கவே இல்லை' என்று கண் கலங்கினார். சமாதானப்படுத்திவிட்டு, இதய நோய் எப்படி ஏற்படுகிறது என யோசித்தபடி வேப்ப மரத்தடியில் உட்கார்ந்தேன்.

 'இந்தா செமதி எளநி' என்றபடி கைப்பூர்ணம் வந்தார். வெற்றிலைப் போட்டுக் குதப்பியபடி அவர் பேசுவது வேடிக்கையாக இருக்கும். விஷய ஞானம் உள்ளவர்.

''இள வயசுப் புள்ள நீ. இருந்தாலும் எளநி குடிச்சா இன்னும் ஜம்முன்னு இருப்ப. எதயத்துக்கு எதமானதாக்கும்' என்றவரிடம், 'எளநி இல்லை; இளநி, எதயம் இல்லை; இதயம்!' எனத் திருத்தினேன்.

'வாகா வாய்க்குள்ள நுழைஞ்சாச் சரிங்கறேன். 'சாண் பண்டாரத்துக்கு மொழந்தாடி எதுக்கு?’ நீ சொல்ற எளநி எதயத்துக்குப் போற ரத்தத்தைச் சுத்தமாக்குமாம். ஆபரேசன் முடிஞ்சவுடனே டாக்டருக எளநியத்தான முதல்ல குடிக்கக் குடுக்குறாக' என்றபடி தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தார்.

##~##

'பரவாயில்லையே... பல விஷயம் தெரிஞ்சு வெச்சுருக்கீங்க...' என்றவுடன் கொஞ்சம் வெட்கப்பட்டார். வெயிலின் மினுக்கோடு வெட்கம் கூடுதலாக ஜொலித்தவருக்கு வயசே தெரியாத உடல்வாகு. 'இல்ல செமதி; நேத்து ரவையிலகூட எதயத்தைப் பத்தித்தான் முத்துராக்குகூடப் பேசிட்டிருந்தேன். அவ 'சித்தன் போக்கு சிவன் போக்கு’ன்னா, நான் 'ஆண்டிப் போக்கு அதே போக்கு’ன்னேன். நம்ம எதயத்தை நாம நல்லா வெச்சுக்க ஏகப்பட்ட வழி இருக்கு. இந்த எளநித் தண்ணியோட கொஞ்சம் சீரகத் தூள் சேர்த்துச் சாப்பிட்டா ரத்தச் சுழற்சி நல்லாயிருக்கும். அதே எளநியோட கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து குடிச்சா வெக்கை நோய் ஓடிப்போயிடும். ரத்தக் கொழாய் அடைப்பெல்லாம்கூட சரியாகுமாக்கும்' என அடுக்கிக்கொண்டே போனார்.

கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்த என்னைப் பின்னால் இருந்து கண் பொத்தினார் குருவாச்சி.

இளநீரில் இருக்கிறது இதய ரகசியம்!

அவரது வேப்பெண்ணெய் மணக்கும் தலைமுடியை வைத்து, 'குருவாச்சி...' என்றதும், 'ஐயோ, கண்டுபிடிச்சுட்டியா, கொஞ்சம் கீரை கொண்டுட்டு வந்தேன்' என்று மடியில் இருந்து கீரைக்கட்டை எடுத்தார். 'அகத்திக்கீரையா?' என்ற கைப்பூர்ணத்திடம், 'செத்த ஆஞ்சு கொடுக்கா' என்று கொடுத்துவிட்டு, முடிந்துவைத்திருந்த கடலை உருண்டைகளை எடுத்துத் தின்னத் தொடங்கிவிட்டார்.

'' 'ஊரான் பண்டம் உமிபோல... தன் பண்டம் தங்கம்போல...’  திங்கிறதப் பாரு. இந்த அகத்திக்கீரை மகிமை தெரியுமா ஒனக்கு? நம்ம பேசிக்கிட்டிருந்தோமே செமதி எதயத்தைப் பத்தி; அகத்தியைச் சாப்புட்டா, ரத்தக் கொழாயில கொழுப்புப் படியாதாம். நம்மூருல போன வருஷம் இயற்கை மருத்துவ முகாம் நடந்தப்ப டாக்டருங்க சொன்னாங்க. அகத்திக் கீரை வெந்த நீரைக் குடிச்சா எந்தப் புண்ணும் ஆறிப்போகும்...' என்று தொடர்ந்தவரிடம் குருவாச்சி, 'போதுங்கா, கையைவிட வாய் தான் ரொம்ப வேலை செய்யுது ஒனக்கு. எங்க ஆத்தாவும் இதெல்லாம் எங்களுக்குச் சொல்லிருக்காக்கும். நீ வேற அதே பாட்டைக் காலங்காத்தால நிறுத்த மாட்டேங்குற...' என்று நிறுத்தினார்.

அவ்வளவுதான்...  கைப்பூர்ணக்கா மோவாயை நொடித்தபடி சத்தமாக, '' 'என்னைப்போலக் கொரலும் எங்கக்காளைப் போல ஒயிலும் இல்லை’ன்னுச்சாம் கழுதை. நல்ல விசயத்தைச் சொன்னா, மவராசிக்குக் காது வலிக்குதாக்கும். கடலை உருண்டையை நல்லா மொக்கு. கொழுப்பு சேரட்டும். அப்புறம் தன்னால அதிமதுரம், அகத்தின்னு எங்கிட்டதான் ஓடி வருவ...' என்றார். நான், 'அதென்ன அதிமதுரம்?' என்றவுடன் சட்டென உற்சாகமானவர், 'நீ கேளு செமதி, அவகெடக்கா... நம்ம சாப்பிடுறதுதேன் நமக்கு மருந்து. இந்த கருணைக்கெழங்க வாரம் ஒரு தடவை சாப்பிட்டா, மூலம் பறந்தோடிடும். முள்ளங்கிய வாரம் ஒரு நா சாப்பிட்டா, சர்க்கரை நோய் கட்டுப்படும். காரட்ட நெதமும் சாப்பிட்டா, கண் நோய் கிட்ட அண்டாது. உருளைக் கிழங்க வாரத்துக்கு ரெண்டு தடவ மட்டும் சேர்த்துக்கிட்டா, பலம் பெருகும். இதெல்லாம் அந்த இயற்கை மருத்துவ முகாம்ல மட்டும் இல்ல; ஏற்கெனவே நம்ம அப்பன், ஆத்தா சொன்னதுதான். 'இரவல் சேலையை நம்பி இடுப்புச் சேலையை எறிஞ்ச கதை’தான் அவுக சொன்னத மறந்திட்டு ஆசுபத்திரிக்கு நாம இப்ப அழுவுறதும்...' எனக் கைகளை ஆட்டியபடி, கண்கள் விரிய அவர் விவரிப்பதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

கடலை உருண்டைகள் தீர்ந்துவிட்டதில் கொறிக்க வேறு தீனி தேடிக் குருவாச்சியும் போய்விட்டிருந்தார். நிமிர்ந்த முதுகுடன், குத்துக்காலிட்டு, சோர்வில்லாமல் பேசுகின்ற கைப்பூர்ணத்தக்காவின் ஆரோக்கியமும் அது குறித்த தெளிவும் ஆச்சர்யமாக இருந்தது. அவரிடம், 'அந்த அதிமதுரத்த விட்டுட்டியே' என மீண்டும் கிளறினேன்.

வான்கோழிகள் இரண்டு ஜோடியாக நடந்துபோகின்ற அழகைப் பார்த்துக்கொண்டு இருந்தவர், 'அதுவா, அதிமதுரம் ஒரு வேர் செமதி. கடிச்சுப் பார்த்தா இனிக்கும். அதப் பொடி பண்ணிக் கொஞ்சமா ரெண்டு வேளைக்குச் சாப்பிட்டா, கொழுப்புச் சத்து குறைஞ்சு, இதயம் சுளுவா வேலை செய்யுமாம். மத்தபடிக்கு டவுன் டாக்டருங்க கிட்டபோய் எதயத்தை அடிக்கொருவாட்டி இருக்கான்னு சோதிச்சுக்க வேண்டியதுதான். இப்பதான் மூலைக்கொரு டாக்டரு இருக்காகளே...' என்றவர் குருவாச்சி போனதை அப்போதுதான் கவனித்தார். 'ஆத்தாடி, குழுதாடி வயிறு இந்தக் குருவாச்சிக்கு. எதைத் தின்னாலும் அவளுக்கு வயிறு நிறையத் தின்ன வேணும். அதுக்காக ஏச்சுக் கேட்டாலும் விடியு மட்டும் கேட்க வேணும். என்ன சென்மமோ...' என்று அலுத்தபடி எழுந்து கொண்டார்.

'இன்னிக்கு இளநீர் முதல் இதயம் வரை உங்கிட்ட இருந்து ரொம்ப  விஷயம் தெரிஞ்சுக்கிட்டாச்சு. சபாஷ் கைப்பூர்ணம்!' என்று நான் உரிமையோடு அவரின் தோளைப் பிடித்து விடைகொடுத்தேன். 'ம்,  'அரிய சரீரம் அந்தரத்துக் கல்லு’ம்பாங்க. நம்ம ஒடம்ப, நம்ம மண்ணு கொடுக்குறத வெச்சு நாம தான் நல்லாப் பாத்துக்கணும்' என்றபடி சேலையில் இருந்த மணலைத் தட்டிக் கொசுவத்தைச் சரிசெய்தார். அழகான பூக்கள் நிறைந்த பருத்திச் சேலை. 'பெரிய ஆவாரம் பூப்போல இருக்க கைப்பூர்ணக்கா' என்றேன். மலர்ந்து சிரித்தவர், 'ஆவாரம் பூகூட நம்ம எதயத்துக்கு ரொம்ப நல்லது. 'ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’?' என்றபடி நடக்க ஆரம்பித்தார். கொஞ்சும் வெள்ளாட்டுக் குட்டியெனக் கரிசல் வெயில் அவரைச் செல்லமாய்ப் பின்தொடர்ந்தது.

- மல்லாங்கிணறு மணக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு