Published:Updated:

குறட்டைக்கு குட் பை!

குறட்டைக்கு குட் பை!

பிரீமியம் ஸ்டோரி
குறட்டைக்கு குட் பை!
##~##

ங்கள் வீட்டில் எல்லோருமே தூங்கும்போது குறட்டைவிடுகிறோம். இது என்ன பரம்பரை வியாதியா? 

'ஸ்லீப் ஆப்னியா’ என்றால், பயப்படும்படியான மெடிக்கல் ப்ராப்ளமா?

குறட்டை வருவது எதற்கான அறிகுறி?

- இப்படி குறட்டையைப்பற்றி அடுக்கடுக்கான கேள்விகளோடு நிறையப் பேர் வருகிறார்கள்.

சுவாசமானது மூக்கு - வாய் - தொண்டை - மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. இந்தப் பாதையில் எங்கேனும் அடைப்பு ஏற்படும்போது, குறட்டைச் சத்தம் எழுகிறது.

விழித்திருக்கும் நிலையில் வராத குறட்டைச் சத்தம், தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது? தூங்கும்போது உடலின் ஒவ்வொரு தசைப் பகுதியும் தத்தமது இயக்கத்தை நிறுத்திக்கொண்டு தளர்வான நிலையில் ஓய்வெடுக்கிறது. அந்த வகையில், தொண்டை,  மூச்சுக் குழல் பகுதித் தசைகளும் தளர்ந்துவிடும்போது சுவாசப்பாதையின் அளவும் குறுகலாகிறது. இப்போது குறுகியப் பாதை வழியாக சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சப்தம் எழுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இது ஊதுகுழல் தத்துவத்தைச் சார்ந்த இயல்புதான்.

குறட்டைக்கு குட் பை!

மல்லாக்கப் படுத்துத் தூங்கும்போது தளர்வு நிலையில் உள்ள நாக்கும் வாய்ப் பகுதியில் இருந்து சிறிது உள்வாங்கி தொண்டைப் பகுதிக்குள் இறங்கி நிற்கும். இதனாலும், மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை வரும். இதுபோன்ற தளர்வுச் செயல்பாடுகளால் மூச்சுக் குழல்களில் எந்த அளவுக்கு அடைப்பு ஏற்படுகிறதோ... அந்த அளவுக்கு குறட்டைச் சத்தமும் அதிகரித்துக்கொண்டே போகும்.

குறட்டைக்கு ஒருவருடைய முக எலும்பு மற்றும் தசை அமைப்புகளும்கூட காரணமாக இருக்கின்றன. கீழ்த் தாடையானது லேசாக உள்வாங்கி இருந்தாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

'பஸ், ரயில், ஏரோப்ளேன் என எல்லாப் பயணங்களிலும் குறட்டைச் சத்தத்தோடு தூங்கி வழிகிறார் என் கணவர். இவருடைய குறட்டைச் சத்தத்தைப் பொறுத்துக்கொண்டு தூங்குவதற்கு நானும் பழகிவிட்டேன். ஆனால், சில சமயங்களில், திடீரென குறட்டை சத்தமே நின்றுவிடும்போது ஐயய்யோ என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில், எழுந்து அவரை உலுக்கிவிடுகிறேன். இதனால், என் தூக்கமும் கெட்டுப்போகிறது டாக்டர்’ என்று வருத்தத்தோடு வந்தார் ஒரு பெண்.

குறட்டைப் பாதிப்பு உள்ளவர்களுக்கு சில சமயங்களில் இதுபோன்று முற்றிலுமாக மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்த சுவாச ஓட்டமும் நின்றுவிடும் ஆபத்தும் உண்டு. ஆனால், இந்த மாதிரியான நேரங்களில் மூளையானது எச்சரிக்கை உணர்வோடு உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்யும். அதனால்தான் தூங்கிக்கொண்டு இருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென நின்று விடுவதும் அடுத்த சில நொடிகளில் சம்பந்தப்பட்டவர் லேசாக உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது. குறட்டை விடுபவர்களுக்கு அடிக்கடி நிகழும் சம்பவம் இது. ஆனாலும் தூக்க நிலையில் அவர்களையும் அறியாமல் அனிச்சையாக இந்தச் செயல்கள் நடைபெறுவதால், இவை எதையுமே அவர்கள் உணர மாட்டார்கள்.

யாருக்கெல்லாம் குறட்டை வரும்?

குழந்தையில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் குறட்டை வரலாம். சளியுடன் கூடிய மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு, டான்சில் எனப்படும் தொண்டைச் சதை வளர்ச்சி, பற்களில் கிருமி, தைராய்டு பாதிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு தூக்கத்தின்போது குறட்டைச் சத்தம் வரும். ஆனால், இவை எல்லாம் பயப்படும் அளவுக்கான குறட்டைத் தொல்லை இல்லை. ஏனெனில், மேற்கண்ட பிரச்னைகளுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டு குணமாக்கிவிட்டால், குறட்டையும் 'குட் பை’ சொல்லிக் கிளம்பிவிடும். ஆனால், அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு குறட்டைத் தொல்லை என்பது தவிர்க்க முடியாத 'போனஸ்’ தொல்லை.

பெரியவர்களுக்கு வரும் குறட்டைக்கு முதல் காரணமாக இருப்பது உடல் பருமன் பிரச்னை. 'ஒரே மாதத்தில் ஐந்து கிலோ உடம்பு பெருத்துவிட்டேன்’ என்று சிலர் அலட்சியமாகச் சொல்வார்கள். இவர்களுக்கு குறட்டை வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். தவிர மதுவில் இருக்கும் ஆல்கஹாலுக்குத் தொண்டைச் சதைகளை மிகவும் தளர்வாக்கிவிடும் இயல்பு உண்டு. எனவே, மற்ற நாட்களைவிடவும் மது குடித்த நாட்களில், குறட்டைச் சத்தத்தின் அளவும் கூடுதலாக இருக்கும். பொதுவாக பெண்களைவிடவும் ஆண்கள்தான் அதிக அளவில் குறட்டைப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகு இரு பாலருக்குமே சரிசம விகிதத்தில் குறட்டைப் பாதிப்பு இருக்கிறது.

குறட்டை என்பது நோயா? இதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும்? என்பது போன்ற கேள்விகளுக்கு அடுத்த இதழில் பதில் சொல்கிறேன்.

- ஆராரோ ஆரிராரோ

குறட்டைக்கு குட் பை!

டிப்ஸ்

குறட்டைத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாக்கப்படுப்பதைத் தவிர்த்து, ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் குறட்டையின் அளவு குறையும். காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்வதும் குறட்டைப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி. அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவோருக்கு எளிதில், குறட்டைத் தொல்லையும் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, பிரச்னைகளுக்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் காரத்துக்கு தடா சொல்ல வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு