குட் நைட்!


##~## |
பல ராத்திரிகள் உல்லாசமாக உற்சாகமாக கழிக்கப்போகும் ஒவ்வொரு தம்பதியும் தங்கள் வாழ்வில் இணையும் முதல் இரவை இப்பவும்கூட ஒரு ஆசிட் டெஸ்ட் ஆகத்தான் நினைக்கிறார்கள். 'கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி’ என்று பாடினார் வைரமுத்து. ஆனால், நம் சமூகத்தில் பெண்ணின் உறுப்புகளுடன் தொடர்புபடுத்தி கற்பு (Vergin) என்கிற விஷயத்தைப் பேசிவருகிறார்கள். அதிலும் பெண்ணின் பிறப்பு உறுப்பில் உள்ள கன்னித்திரையைப் பற்றித்தான் இந்த உலகத்தில் எவ்வளவு கற்பிதங்கள்?
கன்னித்திரைக்கு ஆங்கிலத்தில் ஹைமன் (Hymen) என்று பெயர். இது பெண் பிறப்பு உறுப்பின் உள்ளே, திரை வடிவத்தில் ஒரு ஜவ்வு போன்று அமைந்திருக்கும். எல்லோரும் நினைத்துக்கொண்டு இருப்பது போன்று கன்னித்திரையானது, முழுமையாக மூடப்பட்டு இருக்காது. அதில் சிறு துளை இருக்கும். மாதவிடாய் சமயத்தில் ரத்தம் வெளியேறுவதற்காகத்தான் கன்னித்திரையில் இந்தத் துவாரத்தை இயற்கை அமைத்து உள்ளது.
இந்தக் கன்னித்திரை முதன்முதலில் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது கிழிந்துவிடும். அந்த சமயத்தில் சிறிது அசௌகரியமும் கொஞ்சம் ரத்தமும் வெளியேறவும் வாய்ப்பு உண்டு. கட்டாயமாக ரத்தம் வெளியேறும் என்று சொல்ல முடியாது.
முதன்முதலில் உடல் உறவு வைத்துக்கொள்வதால் மட்டும் அல்ல; வேறு பல காரணங்களாலும் கன்னித்திரை முதல் உடலுறவுக்கு முன்னதாகவே கிழிந்துவிடலாம். தடகளப் போட்டிகள், குதிரையேற்றம், நடனம்... ஏன் சைக்கிள் ஓட்டுவது, சைக்கிளிலோ, மோட்டார் சைக்கிளிலோ இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக்கொண்டு பயணிப்பதாலோகூட கன்னித்திரை கிழிந்துவிடும் வாய்ப்பு உண்டு.
பெண் உறுப்பைச் சுத்தம் பண்ணும் 'டச்சிங்’ (Douching) என்கிற சாதனத்தை சில வசதிமிக்க குடும்பப் பெண்கள் பயன்படுத்துவார்கள். தண்ணீரைப் பீச்சியடிக்கும் குழாய் போன்ற சாதனம் இது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதனாலும் கன்னித்திரை கிழிந்துவிடலாம்.
இந்த நவீன காலத்திலும்கூட கன்னித்திரை கிழிந்த பெண் திருமணத்துக்கு முன்பு தவறான பழக்கம் உள்ளவள் என்றும் கற்பு என்கிற கருத்தியலுடன் தொடர்புபடுத்தியும் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
இதில் ஒரு முரண்பாடு என்ன தெரியுமா? ஆதி காலத்தில் கற்புக்கும் கன்னித்திரைக்கும் தொடர்பு இல்லை என்ற கருத்தியலே இருந்தது. சமூகரீதியாலும் மனரீதியாலும் ஓர் ஆணைச் சார்ந்து இல்லாத பெண்ணைத்தான் கற்பு உள்ள பெண் என்று ஆதிகாலத்தில் கருதினார்கள். திருமணம் என்கிற கட்டமைப்பும் ஆணாதிக்க மனோபாவமும் வந்த பின்னர்தான் கன்னித்திரையைக் கற்புடன் தொடர்புபடுத்திப் பேசும் வழக்கம் வந்தது.
'முதன்முதலில் ஓர் ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறப்பு உறுப்பில் ரத்தக் கசிவு இருக்குமா?’ என்பது பலருடைய கேள்வி.
கட்டாயமாக ரத்தக் கசிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்க ஆய்வு ஒன்று என்ன சொல்கிறது என்றால், ''42 சதவிகிதம் பெண்களுக்குத்தான் முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது ரத்தக் கசிவு இருக்கும். 47 சதவிகிதம் பெண்களுக்கு கன்னித்திரையின் துவாரம் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதால், ரத்தக் கசிவு இருக்காது. மீதம் 11 சதவிகிதம் பெண்களுக்கு கன்னித்திரை மிக மிக மெலிதாக இருப்பதனால், உடல் உறவுக்கு முன்பே, சாதாரண வீட்டு வேலை செய்யும்போதேகூட கிழிந்துபோய் இருக்கும். இதனால், இவர்களுக்கு ரத்தக் கசிவுக்கு வாய்ப்பு இருக்காது'' என்கிறது.
சரி, அப்படி ரத்தக் கசிவு ஏற்பட்டால் எந்த அளவு இருக்கும்?
இதுவும் எல்லோரும் தெரிந்துகொள்ள விரும்பும் செய்திதான். இது பெண்ணுக்குப் பெண் வேறுபடும். கன்னித்திரையின் அடர்த்தி, அதன் நெகிழ்வுத் தன்மை, கன்னித்திரையில் உள்ள ரத்தக் குழாய்களின் எண்ணிக்கை போன்றவற்றைச் சார்ந்தே ரத்தக் கசிவின் அளவு நிகழும். சில துளி ரத்தம் மட்டுமே வெளியாகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அதிகபட்சமாக 5 மி.லி. ரத்தம் வெளியேறலாம்.
முதன்முதலில் கூடலின்போது நிகழும் இந்தச் சிறு சம்பவத்தின் பின்னணியில் பல அன்பான குடும்பங்கள் சிதைந்துபோயிருக்கின்றன. அறியாமை, சந்தேகம், மூடநம்பிக்கை போன்ற பல மூர்க்க மிருகங்கள் ஒன்றுகூடி பல மனிதர்களின் இல்லற நதியை அமில நதியாக்கி இருக்கின்றன. இவர்கள் எல்லோரும் தங்களுக்குக் கிடைத்த நிரூபணமாக எடுத்துக்காட்டுவது கன்னித்திரையைத்தான்.
இன்றைய நவீன உலகில் - நவீன மருத்துவத்தில் 'ஹைமனோபிளாஸ்டி’ (hymenoplasty) என்கிற அறுவைச் சிகிச்சை உள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே உடல் உறவினாலோ இன்னபிற நாம் குறிப்பிட்ட காரணங்களினாலே கன்னித்திரை முன்பே கிழிபட்டு இருந்தால், 'ஹைமனோபிளாஸ்டி’ முறையில், செயற்கையான புதிய கன்னித்திரையை உருவாக்கிக்கொள்ள முடியும். எனவே, ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைக் கன்னித்திரையை வைத்து முடிவு செய்வது அபத்தம்!
சரி சார்... எப்படித்தான் பெண் - திருமணத்துக்கு முன்பு தவறு செய்யாதவள் என்பதைக் கண்டுபிடிப்பது? என்றுதானே கேட்கிறீர்கள்...
ஏன் சார் கண்டுபிடிக்க வேண்டும்? கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமே கிடையாது. ஓர் ஆணை ஒரு பெண் திருமணத்தின் மூலம், கணவனாக நம்பிக்கையுடன் அவனுடைய ஒழுக்கத்தின் மீதும் அவனுடைய கடந்த காலத்தின் மீதும் நம்பிக்கைவைத்து ஏற்றுக்கொள்வதுபோலவேதான் ஒவ்வோர் ஆணும், தான் கரம்பற்றும் பெண்ணையும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் சார் உண்மையான ஆண் மகனுக்கு அழகு!
- இடைவேளை