Published:Updated:

மனமே மந்திரம்!

மனமே மந்திரம்!

மனமே மந்திரம்!
##~##

னநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் விடுதியைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினார் ஒருவர். அந்த விடுதியின் ஓர் அறையில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு முன்னால் நின்றுகொண்டு ஒருவன் அழுதுகொண்டு இருந்தான். விடுதியைச் சுற்றிப்பார்க்க வந்தவர் விடுதிக் காப்பாளரை நோக்கிக் கேட்டார். 

''ஏன் இவர் இப்படி அழுகிறார்?’'

''அவருடைய காதலியின் படம்தான் இது. சாதிப் பிரச்னையினால் அவளை வேறு ஒருவருக்கு மணம் முடித்துவிட்டார்கள். அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனநிலை பாதிக்கப் பட்டுவிட்டது'' என்று விளக்கிய விடுதிக் காப்பாளர் அந்த விருந்தினரை அடுத்த அறைப் பக்கம் அழைத்துச் சென்றார். அங்கே இன்னொருவன் சுவற்றில் முட்டி மோதி அழுதுகொண்டு இருந்தான்.

''யார் இவர்.... இவருக்கு என்ன?'' என்று அதிர்ச்சியாய்க் கேட்டார் விடுதியைச் சுற்றிப் பார்க்க வந்தவர்.

''இவர்தான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர்'' என்றார் விடுதிக் காப்பாளர்.

- தத்துவ ஞானி ஓஷோ சொன்ன குட்டிக்கதை இது.

மனமே மந்திரம்!

மனித மனம் விசித்திரமானது. ஒருவர் நினைப்பதுபோல் மற்றொருவர் நினைப்பது இல்லை. அதைவிடவும் முக்கியமானது நீங்களேகூட இன்று நினைப்பதுபோல் நாளை நினைக்க மாட்டீர்கள். வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத வகையில் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிரம்பிக்கிடக்கும் ஆழ்கடலுக்கு ஒப்பானது மனித மனம்!

மனநல சிகிச்சையின்போது தாங்கள் சந்தித்த சில வித்தியாச மனிதர்களைப் பற்றிய அனுபவங்களை இதழ்தோறும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள் பிரபல மனநல மருத்துவர்கள்.

இந்த வாரம் டாக்டர் ஷாலினி:  

'இளங்கோவுக்கு அப்பா கிடையாது; அவனுடைய அம்மாதான் எல்லாமே. அதனாலேயே அம்மாவைத்

மனமே மந்திரம்!

தெய்வமாக மதிக்கும் பையன். அவனுடைய பருவ வயதில் பக்கத்து வீடு, எதிர் வீட்டில் இருக்கும் பெண்களைப் பார்க்கும்போது அந்த வயதுக்கே உரிய சில உணர்வுகள் அவனுக்கும் தோன்றி இருக்கின்றன. ஆனால், 'பெண்களை இப்படி எல்லாம் நினைத்துப் பார்ப்பது மிகப் பெரிய தவறு’ என இவனாகவே நினைத்துக்கொண்டு, தன்னுடைய உணர்வுகளை அடக்கி இருக்கிறான். பள்ளியிலும் யாரிடமும் ஒட்டாமல் தனியாகத்தான் இருப்பான். யார் என்ன சொன்னாலும் எதிர்க் கேள்வி கேட்காமல் அடங்கியேபோவான்.

அந்தச் சமயத்தில் வகுப்பில் தைரியமாக, நல்ல உடற்கட்டுடன் இருக்கும் ஒரு பையனை இவனுக்குப் பிடித்துவிடுகிறது. ''அவனை எனக்குப் பிடித்திருக்கிறது. எப்போது பார்த்தாலும் நான் அவனைத்தான் பார்த்துக்கொண்டே இருப்பேன்'' என்னும் எண்ணம் அவன் மனதுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அப்போது பத்திரிகைகளைப் பார்த்திருக்கிறான்... யதேச்சையாக  ஹோமோசெக்ஸ்பற்றி ஒரு  கட்டுரை வெளிவந்திருக்கிறது. உடனே இவன், தானும் அப்படித்தான் என்று முடிவு எடுத்துவிட்டான். அதனால், பையன்களை மட்டுமே சைட் அடிக்க ஆரம்பித்திருக்கிறான். ஓரினச் சேர்க்கையாளர்கள் நடித்த செக்ஸ் படங்களைப் பார்த்திருக்கிறான். கல்யாணம் செய்துகொள்ளாமல் இப்படியே வாழ்ந்துவிட வேண்டும் என முடிவு செய்துவிட்டான்.

ஆனால், திருமண வயது வந்ததும் அவன் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். தான் ஒரு ஹோமோசெக்ஸுவல் என வீட்டில் சொல்ல அவனுக்குப் பயம். அதனால், ''இதை நான் எப்படி என் வீட்டில் தெரிவிப்பது'' என்று என்னிடம் வந்தான். அவனிடம் பேசிப் பார்த்ததில் அவன் உண்மையிலேயே ஹோமோசெக்ஸுவல் இல்லை என்பது தெரியவந்தது.

'அறியாமையால் நீ இப்படி நினைத்துக்கொண்டு இருக்கிறாய். உண்மையில் நீ ஒரு ஹெட்ரோசெக்ஸுவல்தான். முதன்முதலில் பெண்களைப் பார்த்துதானே உனக்கு ஆசை வந்தது? நீதானே வலுக்கட்டாயமாக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டாய். தேவை இல்லாமல் நீ கட்டுப்படுத்திக்கொண்டதால்தான் கற்பனையில் நீயே உன்னை ஒரு ஹோமோசெக்ஸுவல் என நினைத்துக்கொண்டு இருக்கிறாய்’ என்று நான் விளக்கிய பிறகுதான் அவனுக்கு சிறிது நம்பிக்கை வந்தது.

பொதுவாகத் தன்னைப் பற்றித் தவறான சுய அபிப்ராயம் கொண்டிருப்பவர்களை, அதில் இருந்து மாற்றுவதற்கு 'விழி வழி மன அதிர்வு சிகிச்சை’ (Eye Movement Desensitization and Reprocessing) முறை உள்ளது. அது இளங்கோவுக்கும் தரப்பட்டது. பதற்றத்தைக் குறைக்கவும் மருந்துகள் தரப்பட்டன. சிகிச்சை முடிந்ததும் அவன் இயல்பு நிலைக்கு வந்தான். மற்ற ஆண்களைப் போலப் பெண்களை அணுக ஆரம்பித்தான். அதற்குப் பிறகு அவனுக்கு ஆண்களைப் பற்றிய அந்த மாதிரியான நினைவே வரவில்லை. இளங்கோ இப்போது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கிறான்.

இளங்கோ மட்டுமல்ல - இவனைப் போன்று பலர் தானாகவே மனதுக்குள் எதையாவது கற்பனை செய்துகொண்டு வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான எண்ணம். அதைச் சரியாகக் கையாளாதபோது பிரச்னை வேறுவிதமாக வெடித்துக் கிளம்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. யாரிடமாவது இதைப் பற்றி மனம்விட்டுப் பேசும்போதுதான் அதற்கான தீர்வு கிடைக்கும். அந்த நபர் உங்களைப் பற்றி அதிக அக்கறைகொண்டவராகவும் எதையும் பக்குவமாகக் கையாளும் திறன் படைத்தவராகவும் இருக்க வேண்டும் என்பது இங்கே ரொம்ப முக்கியம்.'

மனமே மந்திரம்!

- விசித்திரம் விரியும்...

அடுத்த கட்டுரைக்கு