Published:Updated:

மனமே மந்திரம்!

அலைபாயாதே!

##~##

''அந்நியோன்யமான தம்பதி அவர்கள். ஆனால், அவர்களுக்குள் அப்படி ஒரு பிரச்னை இருந்ததை அறிய நேர்ந்தபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது'' என்று மன நல மருத்துவர் அசோகன் சொன்ன சம்பவம் பகீர் ரகம்! 

''காதல் திருமணம் செய்துகொண்ட அந்தத் தம்பதிக்கு  இரண்டு குழந்தைகள். பாசத்துக்கும் அன்புக்கும் பஞ்சம் இல்லை. தாம்பத்ய வாழ்க்கையிலும் எந்தச் சிக்கலும் இல்லை.

ஆனாலும், சில மாதங்களாக அந்தப் பெண்ணிடம் நிறைய மாற்றங்கள் தெரிவதை அந்த அன்பான கணவர் உணர்ந்திருக்கிறார். மனைவியிடம் மனம்விட்டு பேசிப் பார்த்தும், அவர் பிடிகொடுக்கவில்லை. இதனால், அதீத மன உளைச்சலுக்கு ஆளாகி, வேலையில் கவனம் செலுத்த முடியாமல், என்னிடம் வந்தார்.

மனமே மந்திரம்!

'என் மனைவி என்னுடன் பேசுவதையே தவிர்க்கிறாள். குழந்தைகளையும் சரிவரக் கவனிப்பது

மனமே மந்திரம்!

இல்லை. வீட்டு போன் எப்போதும் பிசியாகவே இருக்கிறது. நான் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக்கொண்டால்கூட, வலுக்கட்டாயமாக என்னை அலுவலகம் போகச் சொல்லி அடம்பிடிக்கிறாள். எல்லோரும் எப்போது வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்று காத்திருப்பதுபோல் இருக்கிறது அவளது செயல்பாடு. போன் பில்லை எடுத்துப் பார்த்ததில், தினமும் துபாய் நம்பரில் இருந்து ஒரு லைன் வந்திருக்கிறது. அவளது ஆழ் மனதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து என் சந்தோஷத்தை மீட்டுத் தாருங்கள் டாக்டர்’ என்றார் அந்தக் கணவர்.

மனைவியை அழைத்துவரச் சொன்னேன். சைக்கோதெரபி சிகிச்சை மூலம், அந்தப் பெண்ணின் ஆழ்மனதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்டேன். அங்கே மனதுக்குத்தான் மருந்து தேவையாக இருந்தது.

'உங்களுக்குள் என்ன பிரச்னை?’ என்று நான் கேட்டதுதான் தாமதம், மிகத் தெளிவாகப் பேச ஆரம்பித்தாள் அந்தப் பெண். 'மூன்று மாதத்துக்கு முன்பு என் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. நான் அந்த நம்பருக்குப் போன் செய்து, 'யார்’ என்று கேட்டதும், 'தவறுதலாக அழைத்துவிட்டேன். சாரி’ என்று மன்னிப்பு கேட்டது ஒரு ஆண் குரல். அந்தக் குரல் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அடுத்துவந்த நாட்களிலும் அந்தக் குரலை கேட்க மாட்டோமா என்று ஏங்கினேன். திரும்பவும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும், தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பேச ஆரம்பித்தேன். தினமும், 'என்ன சாப்பிட்டியா, இன்னைக்கு என்ன சமையல், உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்...’ இப்படியான விஷயங்கள்; ஒரு கட்டத்தில் ஜோக்ஸ், சினிமா, அரசியல்னு எனக்கு ஒரு சேனல் மாதிரியே ஆனது. மற்ற‌வர்கள் என்னைப் பற்றி எதிர்மறையாகப் பேசிய விஷயங்களைக்கூட‌ அந்தக் குரல் புகழ்ந்து பேசும். நானே அறிந்திராத - எனக்குள் இருக்கும் திறமைகளைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டும். அந்தக் குரலோடு பேசும்போது இனம் புரியாத சந்தோஷம் எனக்குள் பொங்கும். ஆனால், சத்தியமாக எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. அந்தக் குரலுக்கு நான் அடிமை’ என்றவரிடம் கணவரைப் பற்றி கேட்டேன்.

அந்தப் பெண் விம்மி அழ ஆரம்பித்தார்.

மனமே மந்திரம்!

'என் கணவர் மிகவும் நல்லவர். நான் ஏன் இப்படிச் செய்கிறேன் என்று எனக்கே புரியவில்லை’ என்றார்.

அழகு, ஆசை, பணம், பதவி என்று எதில் வேண்டுமானாலும் மனம் அடிமைப்படலாம். இந்தப் பெண் ஓர் ஆணின் குரலுக்கு அடிமையாகியிருக்கிறார். ஒருகட்டத்துக்கு மேல் கணவர் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், நிலைமை கை மீறி விவாகரத்து வரைக்கும் போயிருக்கக்கூடும். ஆனால், கணவர் அந்தப் பெண்ணை ஒரு நோயாளியாகப் பாவித்து உண்மையான அக்கறையோடு அணுகினார். அந்தப் பெண்ணுக்கு நான் சிகிச்சை அளித்தேன். ஒருவருக்கொருவர் மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு, இன்று பழைய மகிழ்ச்சியுடன் அந்தத் தம்பதி இருக்கிறார்கள்.

ஆண், பெண் இருபாலருமே 100 சதவிகிதம் நிறைவான வாழ்க்கை வாழ்வது இல்லை. எல்லோருக்குமே ஆழ்மனதின் ஓரத்தில் ஏதோ ஓர் ஏக்கம் இருக்கும். கேட்டது கிடைத்து, நினைத்தது பலித்துவிட்டால்... அந்த ஆழ் மன ஏக்கம் அமுங்கிவிடும்.

மனநோய்களைக் குணப்படுத்துவதில் மன்னிப்புக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. தான் செய்யும் தவறுகளை உடனுக்குடன் உணர்ந்து மன்னிப்பு கேட்பவனுக்கு, மனநோய் வர வாய்ப்பே இல்லை. வாழ்க்கை என்பது விளையாட்டு மாதிரிதான். விளையாடுபவராக, ரசிக்கும் பார்வையாளராக, சரி - தவறுகளை ஆராயும் விமர்சகராக என மூன்றாகவும் நீங்கள் இருந்தால் மனம் உங்கள் கட்டுக்குள் இருக்கும். அலைபாயாது!''

மனமே மந்திரம்!
அடுத்த கட்டுரைக்கு