Published:Updated:

மனமே மந்திரம்!

பட்டாம்பூச்சியைப் பார்த்தால் பயம்!

மனமே மந்திரம்!

பட்டாம்பூச்சியைப் பார்த்தால் பயம்!

Published:Updated:
மனமே மந்திரம்!
##~##

''நின்றால் பயம், நடந்தால் பயம், உட்கார்ந்தால் பயம் எனத் 'தெனாலி’ கமல்போல எல்லாம் பயமயமாக நினைத்து வாழ்பவர்கள் பலர். அந்த பயமே அன்றாட வேலையைப் பாதிக்கும்போது, பிரச்னை சிகிச்சை பெறும் அளவுக்கு சீரியஸாகப் போய்விடக்கூடும். இப்படிப் பயத்தால் வாழ்க்கையைத் தொலைக்க இருந்த ஒரு பெண்ணை என்னிடம் அழைத்துவந்தார்கள்...'' - உதாரணத்தோடு ஆரம்பிக்கிறார், தேனி மருத்துவக் கல்லூரி மனநலத் துறை இணைப் பேராசிரியர் ரமேஷ் பூபதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தேனிக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அவர். வயது 19. அந்தப் பெண் சிறுமியாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார் என்பதால், வீட்டில் அம்மாவும் பெண்ணும் மட்டும்தான். அந்தப் பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். வழக்கம்போல, அலுவலகம் போன அவர் ஒரு நாள் திடீர் என்று அலுவலகத்தில் இருந்து மாயமாய் மறைந்துபோனார். அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லா இடங்களிலும் தேடி இருக்கிறார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆனால், அந்தப் பெண்ணோ சந்தடி இல்லாமல் தன் வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார்.

மனமே மந்திரம்!

'என்ன இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?’ என்று அம்மா கேட்டதற்குக்கூட பதில் சொல்லாமல் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார். அவரது சக ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு போன் செய்தபோது, அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பியது தெரியவந்திருக்கிறது. ஏதோ உடம்பு சரியில்லை என்பதால் சொல்லாமல் போய்விட்டார் என அலுவலகத்தில் நினைத்துக்கொண்டனர். ஒரு முறை இரண்டு முறை இல்லை, இதுபோலப் பல முறை தொடர்ந்திருக்கிறது. இப்படி இருக்கும்போது அந்தப் பெண், திடீரென அலுவலகம் போவதை முழுமையாக நிறுத்திவிட்டார். என்ன ஏது என்று அம்மா கேட்டதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வீட்டுக்குள் ஓர் அறையில் சென்று முடங்கிவிட்டார். இதனால் பயந்துபோன அவரது அம்மா, மகளிடம் பொறுமையாகப் பேச்சுக் கொடுத்துள்ளார்.

மனமே மந்திரம்!

'எல்லோருக்கும் பட்டாம்பூச்சியைப் பார்த்தா சந்தோஷம் வரும். ஆனா எனக்கு, பட்டாம்பூச்சின்னாதான் பயம் வருது. பட்டாம்பூச்சியை எங்கு பார்த்தாலும் உடனே பயம், அறுவெறுப்பு, அலர்ஜி வந்துடும். எங்க  அலுவலகத்தைச் சுத்தி இருக்குற தோட்டத்தில் மூணு முறை பட்டாம்பூச்சியைப் பார்த்தேன். அதனால, அங்கே என்னால் வேலை செய்ய முடியலை’ என்று அழுதிருக்கிறார். அந்தத் தாய் தன் மகளை அழைத்துக்கொண்டு என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். பட்டாம்பூச்சி என்றால் அவருக்கு ஏன் பயம் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள எவ்வளவோ முயன்றும் என்னால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவரது அம்மா மெள்ளப் பேச ஆரம்பித்தார். 'இவளோட அப்பாவுக்குப் பட்டாம்பூச்சின்னா பயம் டாக்டர். அந்தப் பயம்தான் இவளுக்கு அப்படியே வந்திருக்கு...’  என்று உண்மையைப் போட்டு உடைத்தார். இதுபோன்ற ஃபோபியாக்கள் மரபியல் ரீதியாகவும் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.

அந்தப் பெண்ணுக்குப் பட்டாம்பூச்சியைக் கண்டு பயம் ஏற்பட்டு அது வளர்ச்சியடைந்து பதற்ற நோயாக மாறியிருப்பதைப் புரிந்துகொண்டோம். அந்தப் பெண்ணுக்கு மனநலச் சிகிச்சைகள் செய்தோம். முதலில் அவர் மனதைப் பக்குவப்படுத்துவதற்கான 'டி-சென்சடைசேஷன்’ சிகிச்சையை அளித்தோம். பட்டாம்பூச்சியால் எந்தப் பயமும் இல்லை என்பதை அவருக்குப் புரியவைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டாம்பூச்சிப் படத்தைப் பார்க்கவைப்பது, பின்னர் நேரில் பட்டாம்பூச்சியைப் பார்க்கவைப்பது என்று படிப்படியாக முன்னேறினோம். அதனால் எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என்பதை புரியவைத்தோம். பட்டாம்பூச்சியைப் பார்க்கும்போது முதலில் அவருக்கு ஒருவித இறுக்கம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க 'பிராக்ரசிவ் ரிலாக்சேஷன் டெக்னிக்’ எனப்படும் மன அமைதிக்கான வழிமுறைகளைக் கற்றுக்கொடுத்தோம். இப்போது அவர் அந்தப் பிரச்னையில் இருந்து விடுபட்டு எல்லோரையும்போல் நார்மலாக அலுவலகம் சென்று வருகிறார்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism