Published:Updated:

மனமே மந்திரம்!

மனமே மந்திரம்!

மனமே மந்திரம்!
##~##

''ஆழ்மனதில் அட்டைபோல் ஒட்டி இருக்கும் நினைவலைகள் ஏராளம். சந்தோஷ நினைவுகள் எப்போதும் நம் உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கும். ஆனால், வேதனை நிறைந்த துயரச் சம்பவங்கள் பெரும்பாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், அதே மாதிரியான சம்பவத்தை மீண்டும் உணரும் சந்தர்ப்பம் வரும்போது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மதியைக் குலைக்கும்!'' - உணர்வுகளின் நிதர்சனத்தைப் பகிர்கிறார் சென்னை மன நல மருத்துவர் டாக்டர் எஸ். நம்பி.   

''28 வயதே நிறைந்த பெண் ஹேமா, இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பாட்டியுடன் என் கிளினிக்கிற்கு வந்திருந்தார். ஒருவிதப் பதற்றமான மனநிலையில் இருந்தார்.  ஏ.சி. அறையிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டியது.  கூடவே வந்திருந்த, அவரது பாட்டிதான் பேச்சை ஆரம்பித்தார்.

'டாக்டர், இவள் என் பேத்தி.  இப்ப மூன்று மாதக் கர்ப்பம்.  சரியா சாப்பிடறது இல்லை.  தூக்கமே

மனமே மந்திரம்!

இல்லாமத் தவிக்கிறாள். அடிக்கடி வேர்த்துக் கொட்டி, மூச்சு முட்டுது.  கை, கால் நடுக்கம் இருக்கு. அடிக்கடி பாத்ரூம் பக்கம் போறா.  மகப்பேறு மருத்துவரைப் பார்த்ததில், 'உங்க பேத்தி மனரீதியா ஏதோ ஒரு பாதிப்பில் இருக்காங்க’ என்றவர்  மனநல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். அதான் உங்கக்கிட்ட வந்தேன்’ என்றார்.      

தாய்மை அடைந்ததன் பூரிப்போ, சந்தோஷத்தின் சாயலோ அந்தப் பெண்ணின் முகத்தில் இம்மியளவும் இல்லை.  எதையோ பறிகொடுத்ததுபோல் விட்டத்தைப் பார்த்தபடி இருந்தார்.  மனப் பிரச்னையைப் பேசிப் பேசித்தான் தீர்க்க முடியும். தினமும் மணிக்கணக்கில் அவரிடம் பேசியபோது, அந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது, தாயைப் பறிகொடுத்த துயரச் சம்பவமே, மனதையும் உடலையும் ஆட்டிப் படைக்கிறது என்பது தெரியவந்தது.  

நேரடியாக நாம் பார்க்கும் சம்பவங்கள் எப்போது நினைத்தாலும் திரைப்படமாக  ஓடத் தொடங்கும்.  

ஹேமாவிற்கு மூன்று வயதாக இருக்கும்போது, அவரது தாயை இரண்டாவது பிரசவத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.  கூடவே, ஆஸ்பத்திரிக்குச் சென்ற ஹேமா, தாயைப் பிரசவ அறைக்குள் அழைத்துச் செல்வதையும் எல்லோரும் பதற்றத்துடன் காத்திருந்ததையும் பிரசவத்தின்போது சிக்கலாகி, தாய்

மனமே மந்திரம்!

இறந்துவிட்டதாகச் சொல்லவும், கூட இருந்தவர்கள் கதறி அழுததும், அந்தப் பிஞ்சு மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. அதன் பிறகு அம்மா இல்லாத வெறுமை, ஏக்கம், தவிப்பு எல்லாமே இருந்தும், அந்த குழந்தைப் பருவத்தில் மறைந்து, தாய்மை அடையும் தருணத்தில் ஆழ் மனக் கசப்புகள், அலைபாய ஆரம்பிக்க, பயம், பதற்றம் எல்லாம் ஹேமாவை ஆட்கொண்டுவிட்டது. இதைத் தீவிர மனப்பதற்ற தடுமாற்றம் (Severe Anxiety Disorder) என்போம்.

பிரசவ வலியால் துடித்த அம்மாவின் முகம் அவ்வப்போது கண் முன்னே ஹேமாவிற்கு வந்து போயிருக்கிறது. அம்மாவைப் போல் தனக்கும் பிரசவத்தின்போது ஏதாவது நேரிடுமோ என்கிற பயம் பற்றிக்கொண்டதன் விளைவு... கை, கால் நடுக்கம், வியர்த்தல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, பேச்சுத் தடுமாற்றம், தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் தோன்றி இருக்கின்றன. தேவை இல்லாத சிந்தனைகளைக் களையவும் மனம் அமைதியாக இருக்கவும் தூக்கம் மிகவும் அவசியம்.  ஆனால், ஹேமா கர்ப்பமாக இருப்பதால் மருந்து கொடுத்து சிகிச்சையைத் தொடர இயலாத நிலை.

தியானம், யோகா போன்ற வழிமுறைகளில் ரிலாக்சேஷன் டெக்னிக் பயிற்சி தொடர்ந்து ஒரு வாரம் கொடுத்தோம்.  குடும்பத்தினரின் அணுகுமுறையே, ஹேமாவிற்கு ஆரோக்கிய மனநிலையையும் உடலுக்குத் தெம்பையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்பதால், அவரது கணவரை வரவழைத்து, மனைவியிடம் பேசும் விதம், செயல்கள், பூவைப்போல் அவரை மென்மையாக நடத்துவது  பற்றி எல்லாம் விரிவாக கவுன்சிலிங் கொடுத்தோம். இதைத் தவிர, இன்று வளர்ந்துவரும் மருத்துவத் துறையில், பெண்ணுக்குப் பிரசவம் என்பது எந்த அளவுக்குச் சுலபம் என்பதைப் பற்றியும் புரியவைத்தோம்.  நல்ல கதைகளைக் கேட்பது, இனிய பாடல்களை ரசிப்பது என்று ஹேமா எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பதாகப் பாட்டி வந்து சொன்னார்.

ஆரோக்கியமான மனநிலையில் பிரசவம் இல்லாமல் போனால், பிறக்கும் குழந்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடும்.  நல்ல வேளை உரிய நேரத்தில் வந்து மனதுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் ஹேமா.  

ஐந்து வயதில் பதியும் சம்பவங்கள் ஆறாத வடுவை ஏற்படுத்தி, நிம்மதியை நிரந்தரமாய்க் குலைக்க வழிவகுத்துவிடும். எந்த ஒரு பிரச்னையும் பாதிப்பும் குழந்தைகளின் கண் எதிரில் நடந்துவிடக் கூடாது என்பதை பெரியவர்கள்தான் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்!''