Published:Updated:

நோயின்றி வாழ உதவும் தான்றி!

நோயின்றி வாழ உதவும் தான்றி!

நோயின்றி வாழ உதவும் தான்றி!
##~##

தான்றி மரம் பிரம்மாண்டமான தோற்றம்கொண்டது. 120 அடி வரைகூட வளரும். தண்டின் அடிப் பகுதியின் சுற்றளவு 10 அடி  வரையிலும் இருக்கக்கூடும். இதைத் 'தாணி’ எனவும் சொல்வார்கள். 

இதன் இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குறிப்பாகக் கறவை மாடுகளின் பால் பெருக்கத்துக்கு இது சிறந்த தீவனம். மரப் பட்டையில் இருந்து கிடைக்கும் பிசினைப் பழங்குடியினர் உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பழத்தின் சாறு சிறந்த கிருமிநாசினி. தோல் பதனிடுவதற்குப் பயன்படும். கொட்டையைச் சிறுதீனியாக (Snacks) சாப்பிடுவார்கள். தான்றிக் காய் எண்ணெயில் சோப்பு தயாரிக்கலாம். இதன் தண்டுப் பகுதி சிறு படகுகள் செய்யப் பயன்படும்.

''வட மொழியியில் தான்றியை 'விபீதகி’ என்பார்கள். 'தினந்தோறும் தான்றி உண்டால் நோய் நீங்கும்’ என்பது இதன் பொருள். தான்றி மரத்தின் இலை, காய்,  விதை ஆகியன மருத்துவக் குணம் உடையன. இதில் பலவிதமான நோய் தீர்க்கும் வேதிப் பொருட்கள் அடங்கி இருக்கின்றன'' என்று சொல்லும்

நோயின்றி வாழ உதவும் தான்றி!

பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி உதவி விரிவுரையாளர் சு.சுஜாதா, அதன் மருத்துவக் குணங்களை விளக்கமாகச் சொன்னார்.

இலை: துளிராக இருக்கும் இலைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் இருந்து சாறு எடுத்து அருந்தினால், நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டைக் கமறல் ஆகியன கட்டுப்படும்.

காய்: இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி ஆகிய சத்துகள் உண்டு.

முதிர்ந்த தான்றிக் காயைப் பொடியாக்கி உண்டுவந்தால், இதில் உள்ள பாலிஃபீனால்கள் உடலில் சேரும் நச்சுத்தன்மைகொண்ட வேதிப் பொருட்களை அழிக்கும். இளமைத் தோற்றம் தரும்; ஆயுளைக் கூட்டும். ஒவ்வாமை மற்றும் வீக்கம் ஆகியவற்றுக்கு இது சிறந்த மருந்து. தான்றிக்காயில் உள்ள 'டானின்’(Tannin), உணவுப் பாதையைப் பலப்படுத்தும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை உடனே குணமாக்கும். டைஃபாய்டு காய்ச்சலைத் தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதில் இருக்கும் 'பீடா ஸிடோஸ்டீரால்’(Beta-Sitosterol) என்னும் வேதிப் பொருள், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தும். ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதால் ஏற்படும் 'அதிரோஸ்க்லீரோஸிஸ்’(Atherosclerosis)  உருவாவதைத் தடுப்பதால், மாரடைப்பு, பக்கவாதம் முதலிய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. தான்றிக் காயில் உள்ள 'கல்லிக்’ அமிலம் கணையத்தில் உள்ள செல்களைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச்செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

தான்றிக் காயில் உள்ள எலாஜிக் அமிலம், செபுலினிக் அமிலம், கல்லிக் அமிலம் ஆகியவை செல்களின் டி.என்.ஏ-வில் மாறுதல்கள் (Mutation) ஏற்படுவதைத் தடுத்து, புற்றுநோய் வராமல் காக்கின்றன.  

தான்றிக் காயில் உள்ள கல்லிக் அமிலம் கல்லீரலைப் பாதுகாக்கிறது. கொழுப்புகள் ஆக்ஸிஜனேற்றம் 'டிரைகிளிசரைடு’ (Triglycerides)   அளவைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. கல்லீரலும் பாதுகாக்கப்படுகிறது.

நோயின்றி வாழ உதவும் தான்றி!

தான்றிக் காயைத் துணைப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்படும் கண் சொட்டு மருந்துகள், கிட்டப் பார்வை, கருவிழியின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படுதல், கண் தொற்றுநோய்கள் முதலியவற்றுக்குச் சிறந்த மருந்தாகும். தான்றிக் காயில் உள்ள டானிக் அமிலம் தோல் மற்றும் முடியின் வோக்கால்களில் உள்ள செல்கள் பாதிப்படைவதைச் சரிசெய்து முடியின் வளாச்சியைத் தூண்டுகிறது.

விதை :  விதையில் இருந்து எடுக்கப்படும் தைலம் முடி வளர்ச்சியைத் தூண்டுவதுடன் இளநரையையும் போக்குகிறது. விதை மற்றும் பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வெண்புள்ளி மற்றும் தோல் நோய்களைப் போக்குகிறது. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்துச் செய்யப்படும் திரிபலா சூரணம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மூலம் உட்படப் பல்வேறு நோய்களுக்கு நல்ல நிவாரணி!