Published:Updated:

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
##~##

'பள்ளிக்கூடம் போற வயசுல படுக்கைப் பாயில் உச்சா போறியே வெக்கமால்ல..?’ என்று வீடுகளில் குழந்தைகளை அதட்டுபவர்களைச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

 தூக்கத்தின்போது தங்களையும் அறியாமல் சிறுநீர் கழிக்கும் பிரச்னையை 'நாக்டேனல் எனுரெசிஸ்’(Nocturnal enuresis) என்பார்கள். எந்த வயதினருக்கும் இந்தப் பிரச்னை வரலாம். ஆனால், குழந்தைகளைப் பொருத்த வரை இது சாதாரண விஷயம். ஏனெனில், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைப் பருவத்தில், சிறுநீர் கழிக்கும் உணர்வைக் கட்டுப்படுத்தும் திறனானது மிகக் குறைவாகவே இருக்கும். அதனால்தான், தூக்கத்தின்போது அவர்களையும் அறியாமல், படுக்கையை நனைத்துவிடுகிறார்கள்.

பெரியவர்களிடம் எப்படி மரியாதையாகப் பழக வேண்டும், உணவைச் சிந்தாமல் எப்படி சாப்பிட வேண்டும் என்று ஒவ்வொரு விஷயங்களையும் குழந்தைகளுக்கு நாம்தான் சொல்லிக்கொடுத்துப் பழக்குகிறோம். இந்த வரிசையில், 'இரவுத் தூக்கத்தின்போது சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், பெரியவர்களிடம் எடுத்துச்சொல்லி கழிப்பறை செல்ல வேண்டும்’ என்று குழந்தையைப் பழக்கப்படுத்துவதும் பெற்றோரின் பொறுப்பு. ஆனால், இன்றைய பரபர உலகில், தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்வோராக இருப்பதால், குழந்தையுடன் அவர்கள் செலவிடும் நேரமும் ஒழுக்கம் சார்ந்த நெறிமுறைகளைக் கற்றுத்தரும் பாங்கும் குறைந்துகொண்டே வருகிறது. அதனால் சில குழந்தைகள் மூன்றரை வயதைத் தாண்டியும்கூட இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

இன்னும் சில குழந்தைகள் ஆறு, ஏழு வயதைக் கடந்த பிறகும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுவார்கள். இதனை 'ப்ரைமரி எனுரெசிஸ்’(Primary enuresis) என்பார்கள். ஏற்கெனவே கூறியதுபோல், பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சரியான பயிற்சிமுறையை குழந்தைக்கு கற்றுத்தராததன் விளைவே இது. மேலும், படுக்கும் முன்னர் அதிக அளவில் தண்ணீர் அல்லது பால் போன்ற நீராகாரங்களை அருந்திவிட்டு குழந்தை தூங்க ஆரம்பிப்பதுவும் ஒரு காரணம். இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே நீராகாரங்களை முடித்துக்கொள்வது நல்லது. அடுத்ததாக சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்து உறங்கப் பழக்கப்படுத்துவது, கடிகாரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அலாரம் வைத்து, குழந்தைகளை எழுப்பி சிறுநீர் கழிக்கச் செய்வது போன்றவற்றைக் கடைப்பிடித்தால், இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம்.

இந்த விஷயத்தில், சில வருடங்கள் சரிவர நடந்துகொள்ளும் குழந்தைகள்கூட சில சமயங்களில் தொடர்ச்சியாகப் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்தத் திடீர் மாற்ற நிலையை 'செகண்டரி எனுரெசிஸ்’(Secondary enuresis)  என்கிறார்கள். பள்ளியில் கடினமான பாடச் சுமை அல்லது வீட்டில் அப்பா அம்மா இருவரும் அடிக்கடி சண்டை யிட்டுக்கொள்வது போன்ற சூழ்நிலைகள் நிலவும்போது அது குழந்தையின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பயத்துடன் கூடிய இந்த மன அழுத்தமும் இதுபோன்ற பிரச்னையை ஏற்படுத்தலாம்.

மருத்துவரீதியாகப் பெண் குழந்தைகளுக்கு 'சிறுநீர்த் தொற்று’(Urinary infections)பிரச்னை இருந்தாலும், ஆண் குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிக்கும் பாதையில் உடற்கூறியல் சிக்கல்கள் (Anatomy problem) ஏதேனும் இருந்தாலும்கூட, 'செகண்டரி எனுரெசிஸ்’ பிரச்னை நேரலாம். இதுதவிர, மூச்சுத் திணறல் (Sleep apnea),  அதீக உடல் எடை, குறட்டை, வலிப்பு பிரச்னை உள்ள குழந்தைகளுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். படுக்கையை நனைப்பதோடு மட்டும் அல்லாமல், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த பிறகு புத்துணர்ச்சி இல்லாமலும் தலைவலியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு 'ஸ்லீப் டெஸ்ட்’ செய்துபார்த்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

பெரியவர்களைப் பொருத்தளவில், இரவில் படுத்து காலையில் எழுவது வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்து மறுபடியும் படுத்து உறங்குவது என்பது இயல்பானது. ஆனால், இந்த அளவீட்டையும் தாண்டி தூக்கத்தின்போது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் பிராஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு உள்ளவர்களும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பர். வயதானவர்களுக்கோ சிறுநீர் கழிக்கும் உணர்வினைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாகவே இருக்கும். இதனால், சில சமயங்களில் படுக்கையில் இருந்து எழுந்து செல்வதற்குள்ளாகவே பெட்ஷீட்டை நனைத்து தர்மசங்கடத்துக்கு உள்ளாவார்கள். இவர்களது பிரச்னையின் தன்மையைப் பொருத்து சிகிச்சையும் பயிற்சியும் கொடுத்து குணமாக்கலாம். தூக்கத்தில் நடப்பது, பேசுவது போன்ற பிரச்னைகளை மையமாக வைத்து நிறைய ஜோக்குகள் படித்திருப்பீர்கள். ஆனால், தூக்கத்தில் எழுந்து சென்று சாப்பிடுபவர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

அடுத்த இதழில் அறிவோம்.

- ஆராரோ ஆரிராரோ