Published:Updated:

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?
##~##

திய நேரம். பஸ்ஸில் பயணம் போகிறீர்கள். தாகமாக இருக்கிறது. வெள்ளரிக்காயையோ, திராட்சையையோ வாங்கி அப்படியே கழுவாமல் சாப்பிடுகிறீர்கள். உங்களுக்கு அது புழுத்தொற்றை உருவாக்கும் என்பதையும் அந்தப் புழுக்கள் உங்கள் வயிற்றுக்குள் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடும் என்பதையும் அறிவீர்களா? உண்மை! 

புழுத் தொல்லைக்கு என்னென்ன காரணங்கள், தடுப்பது எப்படி, நிவாரணம் என்ன? கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சி. மனோகரனும் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்தா பிரிவு உதவி மருத்துவ அலுவலர் ஆர்.சந்திரிகாவும் விவரித்தனர்.

'சுகாதாரமற்ற குடிநீர், உணவு, புழு முட்டை நிரம்பிய மண், கொசு போன்றவற்றால் மனிதனுக்குப் புழுத்தொற்று ஏற்படும். மனிதக் குடலில் ஒட்டுண்ணிகளாக வசிக்கும் புழுக்கள் தங்களின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களைக் குடலில் இருந்து அப்படியே உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன. மனிதனின் ரத்தமும் திசுக்களும்தான் இவற்றின் உணவு. இந்தப் புழுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றன. குடல் திசுக்களுக்குள் ஊடுருவுகின்றன. சத்துக்களைப் புழுக்கள் உறிஞ்சிவிடுவதால் சத்துக் குறைபாடு ஏற்படுகிறது'' என்று சொன்ன மனோகரன் குடற்புழுக்களின் வகைகளையும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளையும் விவரித்தார்.  

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

நூல் புழுக்கள்: வெண்மை நிறத்தில் சுமார் அரை அங்குல நீளம் மட்டுமே இவை இருக்கும். எதேச்சையாக இந்தப் புழுவின் முட்டைகள் தப்பித் தவறி மனிதனின் வயிற்றுக்குள் போனால்

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

தொற்று ஏற்படும். புழு முட்டைகள் காற்றில் பரவியும் தொற்றை ஏற்படுத்தும். மனிதனின் பெருங்குடலுக்குச் சென்று குடைச்சலைக் கொடுக்கும். நாள் ஒன்றுக்கு 15,000 முட்டைகள் வரை இடும்.

கொக்கிப் புழுக்கள்: ஏறக்குறைய எல்லோருமே கொக்கிப் புழுத் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மண்ணில் இருக்கும் புழுவின் முட்டைகள் பொரித்து, வெளிவரும் லார்வாக்கள் மனிதனின் தோலில் ஊடுருவித் தொற்றை ஏற்படுத்துகின்றன. எடைக் குறைவு, வயிற்றுவலி, அனீமியா போன்றவற்றை இவை ஏற்படுத்தும். காலணி அணியாமல் நடப்பதால் புழுக்களின் லார்வாக்கள் பாதத்தைத் துளைத்துக்கொண்டு மனித உடலில் நுழையும். முட்டைகள் இடுவதற்காக ஆசனவாய்ப் பகுதிக்கு அவை வரும்போதுதான் தொந்தரவுக்கு ஆளாக நேரிடும்.

உருண்டைப் புழுக்கள்: குடல் அடைப்பு, வயிற்று வலி, எடைக் குறைவு போன்றவை ஏற்படலாம். இந்த முட்டைகள் மண்ணில் இருந்தோ அல்லது உணவுப் பொருட்களின் மீது படிந்திருந்து அதை உண்ணும்போதோ, மனிதனின் குடலுக்குள் செல்கின்றன. சுமார் 2.4 லட்சம் முட்டைகளைத் தினசரி இடும். மண்ணில் இருக்கும் முட்டைகள் ஆண்டுக்கணக்கில் நோய் பரப்பும் தன்மையோடு இருக்கும்.

நாடாப் புழுக்கள்: பன்றி, மாடு போன்றவற்றின் மாமிசங்களைச் சரியாக வேகவைக்காமல் சாப்பிடும்போது இவை தொற்றுகின்றன. அதிகப்படியான பசி, தூக்கம் இன்மை, அனீமியா, வயிற்றில் எரிச்சல் போன்றவை ஏற்படும். நாடாப் புழுத் தொற்று யானைகளையே மரணத்தில் தள்ளிவிடும்.

சாட்டைப் புழுக்கள்: இவையும் உருண்டைப் புழுக்களைப் போன்றவைதான். வாய்க்குள் புகும் புழு முட்டைகளால் தொற்று ஏற்படும். மனிதனின் பெருங்குடல் சுவர்களில் குடியேறிப் பெருகும். வயிற்றுப்போக்கு, அனீமியா பெருங்குடல் கீழிறங்குதல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

இது தவிர 'ட்ரைச்சினெல்லா ஸ்பைராலிஸ்’ (Trichinella spiralis) என்ற வகைப் புழுக்கள் எலிகளிடம் இருந்து மனிதருக்குப் பரவக் கூடும்.

புழுத்தொற்று யாருக்கு ஏற்படும்? தப்பிக்க என்ன வழி?

யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும். முக்கியமாகக் குழந்தைகளுக்கு ஏற்படும். புழுத்தொற்று உள்ளவர்கள் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவுப் பொருட்களைத் தொடும்போது மீண்டும் மீண்டும் அவர்களுக்கே புழுத்தொற்று ஏற்படும். அந்த உணவைச் சாப்பிடும் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும். காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை முறையாகக் கழுவாமல் பச்சையாகச் சாப்பிடுவதாலும், புழுத்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. இறைச்சியைச் சரியாக வேகவைக்காவிட்டால், அந்த இறைச்சியைச் சாப்பிடும்போது  நிச்சயம் புழுத்தொற்று ஏற்படும்.

மலப் பரிசோதனை மூலம் புழுத்தொற்றைக் கண்டறியலாம். அதற்கேற்ப உரிய குடற்புழு நீக்கி மருந்துகளை எடுத்துக்கொண்டால் குடற்புழுத் தொல்லை முழுவதும் நீங்கும். புழுத் தொல்லை இருப்பது தெரிந்தால், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வாய்விடங்கன் என்னும் வேரை வாங்கி, பொடி செய்து, தேனில் குழைத்து இரவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு மூன்று நாட்கள் எடுத்துவரப் புழுத் தொல்லை தீரும்!