Published:Updated:

மனமே மந்திரம்!

மனமே மந்திரம்!

மனமே மந்திரம்!

மனமே மந்திரம்!

Published:Updated:
மனமே மந்திரம்!
##~##

''பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன் அவன். அவனது பெற்றோர் அவனை என்னிடம் அழைத்து வந்தனர். அவனது அப்பா பேச்சைத் தொடங்கினார். 'சார்... இவன் என்னோட இரண்டாவது பையன். வீட்டில் எப்பவும் வால்தனம் பண்ணிக்கிட்டு இருப்பான். ஆனா, படிக்கட்டைத் தாண்டிட்டான்னா அடங்கி ஒடுங்கிடுறான். எதுக்கு எடுத்தாலும் பயப்படுறான். வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்துட்டா, ஏதாவது காரணம் சொல்லி மாடிக்கு ஓடிடுறான்...’ என்று நிறுத்தினார். அவர் சொல்வதை உறுதிசெய்வதுபோல் அந்த மாணவன் அதிகமான கூச்சத்துடனும் பயத்துடனும் இருந்தான். ஓரமாக இருந்த சேரில் அமர்ந்து இருந்த அவன், வெளியே விட்டால் போதும் என்கிற மனநிலையில் இருப்பது தெரிந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து பேசிய அவனது தந்தை, 'உறவினர் வீட்டு விசேஷம் எதுக்கும் வர மாட்டேங்கிறான். ஒருநாள் எங்க உறவுக்காரர் வீட்டுக் கல்யாணத்துக்கு என்னால் போக முடியலைனு இவனை

மனமே மந்திரம்!

அனுப்பினேன். கல்யாண மண்டபம் வரைக்கும் போயிட்டு உள்ளே போகப் பயந்துட்டு வீட்டுக்கு ஓடியாந்துட்டான். காலேஜ் படிக்குற பையன் நடந்துக்கிற முறையா இது?’ எனக் குமுறினார்.

ஒரு பிள்ளை தலையெடுக்க வேண்டிய வயதில், எவரையுமே நிலைக்குலைய வைக்கும் பிரச்னை இது. ஆனால், ரொம்பவும் அச்சப்பட வேண்டிய பிரச்னை இல்லை. இளம் வயதில், பொது இடத்தில் ஏற்படும் ஏதாவது ஒரு கசப்பான அனுபவம் காலம் முழுவதுக்கும் பொது இடங்களின் மீது ஏற்படுத்தும் வெறுப்பு இது. தொடக்கத்தில்,  கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க ஆரம்பிப்பவர்கள், நாளடைவில் வீட்டுக்கு உள்ளே அடைந்து கிடப்பதையே சுகமானதாக உணர ஆரம்பித்துவிடுவார்கள். வெளி உலகத்தைக் கண்டாலே பயப்படும் அளவுக்கு இது ஆபத்தாகிவிடும்!'' - மனதின் மற்றொரு பக்கம் குறித்துப் பேசுகிறார் நெல்லையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் சி.பன்னீர்செல்வன்.

''ஒரு நாள் தந்தையுடன் வங்கிக்குச் சென்றிருக்கும்போது மேலாளர் உள்ளே அழைத்து 'என்ன படிக்கிற? என்ன வேலைக்குப் போகப் போற..?’ என விசாரித்து இருக்கிறார். பதற்றத்தில் வியர்த்துக்கொட்டி உளறித் தள்ளி இருக்கிறான் அந்த மாணவன். அவனது தந்தையைத் தனியாக அழைத்த

மனமே மந்திரம்!

வங்கி மேலாளர், உடனே அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு சொல்லவும் அவர் என்னிடம் கூட்டி வந்திருக்கிறார். அந்த மாணவனிடம் பேசினேன்.

சிறு வயதில் விடுமுறையின்போது உறவினர் வீட்டுக்குப் போயிருக்கிறான். அங்கே தெருவில் விளையாடியபோது கூட்டமாக வந்த சிலர் அவனைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். மறுநாளிலும் அதே இடத்தில் வேறு சிலர் அவனைக் கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதனால், தன்னை மற்றவர்கள் எல்லோரும் எப்போதும் கண்காணிப்பதுபோலக் கற்பனை செய்துகொண்டான்.

இந்தச் சிந்தனை நாளடைவில் அதிகமானதால், எதிரில் இருப்பவர்களைக் கண்ணுக்கு கண் சந்தித்துப் பேசுவதுகூட இல்லை. அதிகபட்ச பயத்தில் கை நடுக்கம், நெஞ்சு படபடப்பு, பதற்றம், நாவறட்சி, வியர்த்துக் கொட்டுதல், நாக்கு குழறுதல், வயிற்றைக் கலக்குதல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை ஏற்பட்டு இருக்கின்றன. அவனுக்கு 'சோஷியல் போஃபியா’ பாதிப்பு இருப்பதை தெரிந்துகொண்டேன். 'சோஷியல் போஃபியா’ இருப்பவர்களால் எல்லா வேலையையும் நன்றாக செய்ய முடியும். ஆனால், கும்பல், புதிய ஆட்கள் இருக்கும் இடத்தில் செய்வதில்தான் பிரச்னை ஏற்படும்.

பொது இடங்களுக்கு செல்வதில் அவருக்கு உள்ள தயக்கம் போக்க 'கிரேடட் எக்ஸ்போஷர்’ (Graded exposure) மற்றும் கூட்டத்தினரைப் பார்க்கும்போது ஏற்படும் பயத்தைப் போக்க 'சிஸ்டமேடிக் டிசென்சிடைசேஷன்’ (Systematic desensitization)  ஆகிய சிகிச்சைகளை அளித்தோம். அதாவது அவருக்கு கூட்டத்தினர் முன்னிலையில் பேசுவதில் தயக்கம் இருந்ததால், முதலில் கண்ணாடி முன்பு பேசச் செய்தோம்.  பின்னர் வீட்டில் உள்ளவர்கள் மத்தியில் பேசச் செய்வது, பின்னர் நண்பர்கள் மத்தியில் பேசச் செய்வது என்று படிப்படியாக அவரது தயக்கத்தைப் போக்கினோம். யோகா, தியானம் போன்றவை மூலம் தாழ்வு மனப்பான்மையை நீக்கித் தன்னம்பிக்கையை அளித்தோம். முக்கியமாக, சமூகத்தில் எல்லோருக்கும் வேலை இருக்கிறது. உன்னைக் கவனிக்க யாருக்கும் நேரம் இல்லை என்பதை உணர்த்தினோம். இதுதவிர மூளையில் 'செரட்டோனின்’ என்ற ரசாயனம் சுரப்பதில் குறைபாடு காரணமாகவும் 'சோஷியல் போஃபியா’ ஏற்படலாம். இதற்கு சில மருந்துகள் மூலமாகச் சிகிச்சை அளித்தோம். இப்போது அந்த மாணவன் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான்; டீம் லீடராக!'' என்கிறார் பன்னீர்செல்வன்.

உண்மைதான்... மனநலப் பிரச்னைகளுக்கான முதல் தீர்வே தயக்கத்தை உடைப்பதில்தான் இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism