Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!
குட் நைட்!
##~##

''எல்லாம் சரியாத்தானே இருக்கு டாக்டர்? எனக்கு மட்டும் ஏன் இப்படி சார்?'' என்று கவலையுடன் கேட்ட சுமனுக்கு வயது 30. 'ஏன் இப்படி?’ என்று அவன் கேட்டது, வெளியே எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத தவிப்பு, அன்பான மனைவியை ஆசையோடு தழுவித் திருப்திபடுத்த முடியாத குற்றஉணர்ச்சி. பந்தியில் உட்கார்ந்து ஐவிரல் கொண்டு... பிசைந்து எடுத்து வாய்க்குக் கொண்டுவரும்போது இலையில் இருந்து எழுப்பிவிடுவதுபோல... 'வாழ்க்கை தங்களை மட்டும் ஏன் இப்படி வஞ்சித்துவிட்டது’ என்று என்னிடம் கேட்கும் பல ஆயிரம் சுமன்கள் இருக்கிறார்கள்.

 அப்படி என்ன அவனுக்குப் பிரச்னை?

விறைப்புத் தன்மைக் கோளாறுதான் பிரச்னை.

ஆண் உறுப்பின் உள்ளே மேலே இரண்டும், கீழே ஒன்றுமாக மூன்று குழாய்கள் இருக்கின்றன. கீழே இருக்கும் குழாய் வழியேதான் சிறுநீர் செல்லும். மேலே உள்ள இரண்டு குழாய்கள்தான் விறைப்புத் தன்மையில் பங்குகொள்கின்றன.

மேலே உள்ள குழாய்களில் சிறு சிறு மெல்லிய காலி அறைகள் இருக்கும். அந்தக் காலி அறைகளுக்கு கேவர்னோசல் ஸ்பேசஸ்(Cavernosal spaces)என்று பெயர். மனிதன் செக்ஸ் உணர்ச்சி அடையாதபோது இந்த அறைகள் காலியாகத்தான் இருக்கும். மேலே உள்ள இரண்டு குழாய்களுக்கும் கார்பஸ் கேவர்னோசம்(Corpus Cavernosum) என்று பெயர். கீழே உள்ள குழாய்க்கு கார்பஸ் ஸ்பான்ஜிசம் (Corpus spongiosum) என்று பெயர்.

குட் நைட்!

உணர்ச்சிவசப்படும்போது உடலில் ஓடும் ரத்தத்தில் ஒரு பகுதியானது அடிவயிற்றுக்கு வரும். அப்படி அதிகமாக வரும் ரத்தம் ஆணுறுப்பின் மேலே உள்ள இரண்டு குழாய்களுக்கும் வந்து சேரும். ரத்த ஓட்டம் வந்தவுடன் காற்று ஊதப்பட்ட பலூன் விரிவடைவது போன்று ஆணுறுப்பு விரிவடையத் ஆரம்பிக்கும். ரத்த ஓட்டத்தைப் பொறுத்துத்தான் அதன் விறைப்புத் தன்மை அமையும்.

ஆணுறுப்பின் ரத்தக் குழாய்களுக்கு அதிக ரத்தம் வருவதும், அப்போது ஆணுறுப்பு விரிவடைவதும் கீழ்கண்டவற்றைப் பொறுத்தும் மாறுபடும்.  

1. மனம் அமைதியாக இருந்து மூளையும் நன்றாக வேலை செய்யும்போதுதான் ஆணுறுப்பு உடலுறவு சமயத்தில் நன்றாக விரிவடையும். இத்துடன் நரம்பு மண்டல அமைப்பும் (Nervous system) சரியாக இயங்க வேண்டும்.

2. உடம்பில் தேவைப்பட்ட அளவில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண் ஹார்மோன் இருக்க வேண்டும். அப்படி இல்லாத சூழலில் நிச்சயம் விறைப்புத் தன்மையில் குறைபாடு வரத்தான் செய்யும்.

3. பொதுவாக ஆணுறுப்பில் இருக்கும் ரத்தக் குழாய்களில் அடைப்போ, ஆரோக்கிய கேடோ இல்லாமல் இருக்க வேண்டும்.

மேலே சொன்ன இந்த மூன்றும் ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும் அல்லது ஏதோ ஒன்று சரியாக இல்லாவிட்டாலும் ஆணுறுப்பு விறைப்புத் தன்மையை அடையாது.

மூளையில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருந்தால் செக்ஸுவல் உணர்ச்சியும், தூண்டுதலும் பாதிக்கப்படும். நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் - கிளர்ச்சி வசப்பட்டவுடன் மூளையின் உத்தரவுடன் நரம்புகளின் வழியாக தூண்டுதல்கள் பாய்ந்து ஆணுறுப்பின் காலி அறைகளை விரிவடைய வைத்து அதிக ரத்தம் தாராளமாக அந்த இடங்களுக்கு வருவது நிகழும். ஆக ஆணுறுப்பு ரத்தக் குழாய்கள், ஆண் ஹார்மோன், மூளை நரம்பு மண்டலம் மூன்றும் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஆணுறுப்பு விறைப்புத்தன்மையை அடையும்.

சில உடல் நலப் பாதிப்புகளும் ஆணுறுப்பில் இருக்கும் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். சர்க்கரை நோய், உடம்பில் அதிக கொழுப்புச் சத்து இருப்பது போன்ற சில உடல் பிரச்னைகள், புகையிலை பழக்கம், உடற்பயிற்சி இன்மை... போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆணுறுப்பின் ரத்தக் குழாய்களைப் பாதிக்கும். இதனால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

மேலே சொன்னவை எல்லாம் ஆணுறுப்பின் இலகுவாக இருக்கும் ரத்தக் குழாய்களை கடினமாக்கிவிடும். இதனால் உணர்ச்சிவசப்பட்டாலும் விரிவடைவதிலும் விறைப்புத் தன்மை ஏற்படுவதிலும் பாதிப்பு ஏற்படலாம்.

மேலும் - ஆணுறுப்பில் இருக்கும் நரம்புகளும் மேல் சொன்ன காரணங்களால் பாதிப்பு அடையலாம். இதனால் தூண்டுதல் நிகழாமல் போய்விடும்.

போதுமான அளவு செக்ஸ் ஹார்மோன் இருக்க வேண்டியதும் அவசியம்.

விறைப்புத் தன்மை குறைபாடு உள்ளவர்கள் தங்களின் லைஃப் ஸ்டைலை மாற்றிக்கொள்வது மிகமிக முக்கியம்.

- இடைவேளை