Published:Updated:

உங்கள் தட்டில் உணவா... விஷமா ? - 7

சர்க்கரை நோய்க்கு மருந்து...கறுப்பு அரிசியில் இருக்கு !டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

உங்கள் தட்டில் உணவா... விஷமா ? - 7

சர்க்கரை நோய்க்கு மருந்து...கறுப்பு அரிசியில் இருக்கு !டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

Published:Updated:
##~##

சிவப்பு அரிசியின் சிறப்புகளை சென்ற இதழில் பார்த்தோம். கறுப்பு அரிசி அதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல என்பதையும், அதன் பல்வேறு அற்புத குணங்களையும் இப்போது ஆராய்வோம்.

கறுப்பு அரிசியின் பூர்விகமும் வழக்கம்போல் சர்ச்சைக்குரியது. ஆசியா - குறிப்பாக சீனா என்றும், இந்தியா என்றும், ஆப்பிரிக்கா என்றும் பல்வேறு வாதங்கள். ஜுடித் கார்னி என்கிற பூகோளப் பேராசிரியை, 'பிளாக் ரைஸ்' (Black Rice) என்ற ஆராய்ச்சி நூலை இயற்றி இருக்கிறார். ஆப்பிரிக்க காடுகளில் அமோகமாக விளைவிக்கப்பட்ட கறுப்பு அரிசிக்காகவே, அங்குள்ள ஆப்பிரிக்கர்களைப் பிடித்து அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றதாகவும், அடிமை வர்த்தகத்தின் ஆணிவேரே கறுப்பு அரிசிதான் என்பதும் அவர் வாதம். இந்தப் புத்தகத்தை 'விவசாய துப்பறியும் மர்ம நாவல்’ என்று 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்’ என்ற பத்திரிகை வர்ணிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் ஊரில் கறுப்பு அரிசி 'கவுனி அரிசி’ என்கிற பெயரில் விளைகிறது. 'கவுனி’ என்றால்... 'கோட்டை வாசல்’ என்று பொருள். 'கோட்டைக்குள்ளே வசிக்கும் அரச வம்சத்தினரின் அரிசி என்பதுதான் பொருளோ!' என்று எண்ண வைக்கின்றன, உலகளவில் இதைப் பற்றி இறைந்துகிடக்கும் வரலாற்றுச் செய்திகள். ஆம்... கறுப்பு அரிசியை 'ராஜாக்களின் அரிசி' என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

சீனாவில், 'ராஜாக்களும், ராணிகளும் மட்டுமே இந்த அரிசியைச் சாப்பிட வேண்டும்' என்று ஒரு சட்டமே இருந்திருக்கிறது! 'கையளவு அரிசியைத் திருடிச்சென்ற அரண்மனை ஊழியர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது... யாருக்கும் தெரியாமல் இந்த அரிசியைச் சாப்பிட்ட இன்னொருவரின் தலையும் துண்டிக்கப்பட்டது' என்கிற செய்திகளும் வரலாற்றில் பதிந்துகிடக்கின்றன. இவ்வளவு கடுமையான, கொடுமையான சட்டங்கள்... பண்டைய சீனாவில் இருந்தன என்றால், அந்த அரிசிக்கு விசேஷமான காரணங்கள் இருக்கத்தானே வேண்டும்?!

உங்கள் தட்டில் உணவா... விஷமா ?  - 7

முக்கியமாக, இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஆண்மையையும், வீரியத்தையும் அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்ற நம்பிக்கை ஒரு காரணம். அந்தப்புர வாழ்க்கைக்கு இது அவசியம் என்று அவர்கள் கருதினார்கள். இரண்டாவது காரணம், முதுமையைத் தவிர்க்கவும், ஆயுளை நீட்டிக்கவும் இது உதவும் என்ற நம்பிக்கை.

வெறும் யூகங்களின் அடிப்படையில் இப்படிக் கடுமையான சட்டங்கள் அப்போது இருந்தன. ஆனால், அவற்றுக்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்கள் உண்டு என்பதை இன்றைய மருத்துவ, விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் ஆகிய கொடிய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல்... கறுப்பு அரிசிக்கு உண்டு என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இத்தனை உயிர்க்கொல்லி நோய்களும் தடுக்கப்பட்டுவிட்டால் (சீனர்கள் நம்பியதுபோல), அப்புறம் ஆயுள் நீடிப்பதில் என்ன ஆச்சர்யம்?!

இந்த அற்புதங்களுக்கு எல்லாம் காரணமான ஊட்டச்சத்துக்கள்/உயிர்ச்சத்துக்கள் அப்படி என்னதான் இருக்கின்றன கறுப்பு அரிசியில்?

வழக்கமாக உணவுகளில் இருக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்கள் தவிர, அபரிமித மான நார்ச்சத்து (Fibre) இருக்கிறது. இன்றைய மருத்துவர்கள் மிகவும் வலியுறுத்துவது இவற்றைத்தானே! இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும், 'பி’ வைட்டமின்கள் அத்தனையும், வைட்டமின் 'ஏ’, 'இ’ போன்றவையும், உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் 8 அமினோ அமிலங்களும் (Essential Amino Acids)கறுப்பு அரிசியில் நிறைந்துள்ளன. 'ஆர்ஜினைன்’ என்ற அமினோ அமிலம், 'நைட்ரிக் ஆக்ஸைடு’ என்கிற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. மெல்லிய ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதுவே இதய பாதுகாப்புக்கும், ஆண்மைக்கும் முக்கிய காரணங்களுள் ஒன்று.

'ஆன்த்தோசயனின்' (Anthocyanin) என்கிற வேதிப்பொருள், இந்த அரிசியின் கறுப்பு நிறத்துக்குக் காரணம். இது ஓர் அற்புதமான 'ஆன்டி - ஆக்ஸிடென்ட்' (Antioxidant).. இதய வியாதிகள் முதல் சிறுநீரக வியாதி, மூளை பாதிப்புகள், புற்றுநோய் வகைகள் எல்லாமே... பிராணவாயுவின் சிதைந்த பொருட்களால் (oxygen free radicals) விளையும் கேடுகள் என்று கருதப்படுகின்றன. இதற்கு எதிராகச் செயல்படும் ஆன்டி - ஆக்ஸிடென்ட்கள், தற்போது மருத்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கறுப்பு அரிசியின் 'ஆன்த்தோசயனின்' இதற்குப் பெரிதும் உதவுகிறது.

இப்படி கறுப்பு அரிசியின் மருத்துவ குணங்கள், புதையல்போல் நாளுக்கு நாள் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 'சிறுநீரக வியாதிகள், அல்ஸைமர் போன்ற மூளை பாதிப்புகள், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய பாதிப்புகளை கறுப்பு அரிசியால் தடுக்க முடியும்' என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர். இதிலிருக்கும் வேதிப்பொருட்களைத் தனியே பிரித்து எடுத்து, மருந்துகளாகத் தயாரிக்கலாமா என்றும் ஒருபுறம் ஆராய்ச்சி நடக்கிறது.

சில நாடுகளில், கறுப்பு அரிசியின் ஆன்த்தோசயனின் பகுதியைப் பிரித்து எடுத்து, சிவப்புத் திராட்சை மதுவில் கலப்பது வழக்கம். சிவப்பு ஒயின் இதயத்துக்கு வலு சேர்க்கும் குணம் உடையது. அதில் ஆன்த்தோசயனினையும் கலந்தால், அதன் குணமும், கூடவே, நிறமும் கூடு கின்றன என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு.

அரிய மருத்துவ குணங்களை உடைய உணவுகளை 'சூப்பர் உணவுகள்' (superfoods) என்று அழைக்கிறார்கள். நீல நிற பெர்ரிகள் (Blueberries) இதுவரை அந்த உணவுகளில் முதல் இடத்தை வகித்தன. அதையும்விட பல மடங்கு மருத்துவ குணங்கள் கறுப்பு அரிசியில் இருப்பதால், தற்போது இது முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

டாக்டர் மிருதுளாதேவி என்கிற ஆராய்ச்சியாளர், 'கறுப்பு அரிசியால் செய்த ரொட்டி, பிஸ்கட் போன்றவற்றைப் புற்றுநோயாளிகளுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்' என்று சிபாரிசு செய்கிறார். கறுப்பு அரிசியில் செய்த ரொட்டிகள் கலிஃபோர்னியாவில் மிகவும் பிரசித்தம். கறுப்பு அரிசி கலந்து செய்த மீன், இறால் குழம்புகளும், நூடுல்ஸ்களும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. மணம் கமழும் கறுப்பு அரிசி உணவுகள் மணிப்பூரில் நட்சத்திர ஹோட்டல்களில் பரிமாறப்படுகின்றன. மல்லிகை மணம்போலவே, மாம்பூ வாசனையிலும், மகிழம்பூ வாசனையிலும், கற்பூர வாசனையிலும் அரிசி விளைந்ததாக நம் இலக்கியங்களும் கூறுகின்றன.

நம் ஊரில் செட்டிநாடு பகுதிகளில், திருமணம் மற்றும் விசேஷங்களில் இலையில் தவறாமல் பரிமாறப்படும் சைடு டிஷ்... கவுனி அரிசிதான். அங்கு பல வீடுகளில் மாலை நேரத்தில் டிபனாக கவுனி அரிசியை உட்கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. இந்தப் பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களில் ஒரு சிறிய பகுதியில் கவுனி நெல்லை சொந்த உபயோகத்துக்காகப் பயிரிடு கிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை.

பஜ்ஜி, போண்டா, பீட்ஸா என்று ஆரோக்கியக் கேடு விளைவிக்கும் பலகாரங்களைத் தவிர்த்து, உடலுக்கு பல வகைகளிலும் நன்மை செய்யும் சுவையான கவுனி அரிசிக்கு நாமும் மாறினால், நலன்கள் பல!

- நலம் வரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism