Published:Updated:

காவலர் உட்பட மூவருக்கு கொரோனா.. கூடும் எண்ணிக்கை- ராமநாதபுரம் `ஷாக்'!

காவல் நிலையம் முன் மருத்துவர்கள்
காவல் நிலையம் முன் மருத்துவர்கள் ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ராமநாதபுரத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வரும் ஒருவர் உட்பட மூவர் பாதிப்பு.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, ராமநாதபுரம் நகரின் பிரதான பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. காவலர் குடியிருந்த வீட்டின் அருகே உள்ள காவல் நிலையமும் மூடப்பட்டது.

ராமநாதபுரம் காவலர் குடியிருப்பு பகுதி
ராமநாதபுரம் காவலர் குடியிருப்பு பகுதி
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்களம், உச்சிப்புளி பகுதிகளைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் உச்சிப்புளியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய சுகாதாரப் பெண் பணியாளர் ஒருவரும் உள்ளார். இவர்கள் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்புவரை 9 பேர் குணமடைந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிருமி நாசினி தெளிப்பு
கிருமி நாசினி தெளிப்பு
உ.பாண்டி

இதனால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த இரு நாள்களாக புதிதாக நோய்த் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ராமநாதபுரம் போக்குவரத்துக் காவல்நிலையத்தில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வரும் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த சூரங்காட்டு வலசை கிராமத்தைச் சேர்ந்த மஸ்தூர் பெண் பணியாளர் ஒருவர் ஆகிய மூவரையும் கொரோனா தொற்று பாதித்திருப்பது தெரியவந்தது.

போக்குவரத்து காவலர் மாற்றுப்பணியாக தேவிப்பட்டினம் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரது வீட்டுக்கு காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, போக்குவரத்துக் காவலரது வீடு அமைந்துள்ள காவலர் குடியிருப்பு பகுதி, அதன் அருகில் உள்ள பஜார் காவல் நிலையம், நகராட்சி அலுவலகம் மற்றும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கையிலிருந்து வந்த மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட மூவரையும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

வண்டிக்கார தெரு சாலை மூடல்.
வண்டிக்கார தெரு சாலை மூடல்.
உ.பாண்டி

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள போக்குவரத்துக் காவலர் வீடு அமைந்துள்ள பகுதி ராமநாதபுரத்தின் பிரதான பகுதியாகும். இதன் அருகில்தான் வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், கூட்டுறவு வங்கி தலைமையகம், நகராட்சி நீரேற்று நிலையம் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இதனால் இப்பகுதிக்குச் செல்லும் சாலைகளான வண்டிக்கார தெரு உள்ளிட்ட சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனாவில் பாதிக்கப்பட்ட சுகாதாரப்பணியாளர் தங்கியிருந்த சேது நகர் துவங்கி ராமேஸ்வரம் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை உள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது நகரின் மையப்பகுதிக்குள் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருப்பதால் ராமநாதபுரம் முழுமையாக முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு