பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

ஏப்பம் வருவது  எதனால்?

சந்தோஷ், குமாரமங்கலம்

'எனக்கு வயது 26. அடிக்கடி பெருத்த சப்தத்துடன் ஏப்பம் வருகிறது. இது எதனால் ஏற்படுகிறது? ஏதாவது உடல் நோயின் அறிகுறியா?'

கேள்வி பதில்

டாக்டர் வி.சமீம் அஹமது,  வயிறு, குடல், கல்லீரல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர், மதுரை.

'வயிற்றில் புண், செரிமானத் தொல்லை, பாக்டீரியா தோற்று போன்றவை இருந்தால், இது மாதிரியான ஏப்பம் தோன்றும். ஆனால், இந்த காரணங்கள் நூற்றில் 25 பேர்களுக்கு மட்டுமே! பெரும்பாலானவர்களுக்கு  மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவும் இந்தத் தொந்தரவு ஏற்படுகிறது. மிகுந்த வேலைப்பளு, மனஅழுத்தம், தூக்கமின்மை போன்றவையும் ஏப்பத்திற்கான காரணங்கள். மேலும்  முறையற்ற உணவுப்பழக்கமும் இதற்கு முக்கியக் காரணம். எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள், வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகள், பால், பெரிய வெங்காயம் போன்றவை ஏப்பத்தை உண்டாக்கும். இவை அனைத்தையும் சரிசெய்ய முடியும். உங்களுக்கு எத்தனை காலமாக இந்தப் பிரச்னை உள்ளது என்பதைக் குறிப்பிடவில்லை. எனவே, முதலில் உங்களுக்கு எதனால் இந்த ஏப்பம் பிரச்னை வருகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். எனவே, மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை, கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்னை எளிதாகச் சரியாகிவிடும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள், தயிர், பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க, தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.''

கல் வருமா?

 இரா.செல்வக்குமார், பெரம்பலூர்

கடல் நீரைக் குடிநீராக்கி அருந்துபவர்களுக்கு சிறுநீரகக் கல் வரும் என்பதும், அதனால்தான் வளைகுடா நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்குச் சிறுநீரகக் கல் பிரச்னை வருகிறது என்பதும் எந்த அளவுக்கு உண்மை?

ரத்தின ஜனார்த்தனன், ஜெனிட்டோ சிறுநீரக சிகிச்சை நிபுணர், புதுச்சேரி

''சாதாரணத் தண்ணீரைவிடக் கடல் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களின் அளவு அதிகமான அளவில் இருக்கும். அந்தக் கடல் நீரை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிப்பு செய்தாலும் சில தாதுஉப்புக்களின் அளவு மாறுபடாமல் அப்படியே இருக்கும். அதற்காக, இந்த நீரைக் குடிப்பதால் கல் வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. அரபு நாடுகளில் நம் நாட்டைவிட வெப்பம் பல டிகிரி அதிகமாக இருக்கும். நமது உடலும் வெப்பத்துக்கு ஏற்றவாறு உஷ்ணமாகும். உடல் செயல்பாட்டுக்குத் தேவையான நீரைப் பருகாதபோது, சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உருவான பிறகு, அதன் ஆரம்ப நிலையிலே அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் பின்நாளில் பெரும்                      தொல்லையை ஏற்படுத்தும்''

'தாம்பத்திய’த்  தலைவலி ஏன்?

கேள்வி பதில்

எம்.நடராஜன், மன்னார்குடி

'எனக்கு வயது 42. ஒவ்வொரு முறையும் உடலுறவு கொண்ட பிறகும் எனக்கு கடுமையான தலைவலி ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?'

டாக்டர் சவுண்டப்பன், மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர், சென்னை

'உடலுறவின்போது சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால் ரத்த ஓட்டத்தில் மாற்றங்கள், ரத்தக் குழாய்கள் விரிவடைவது ஆகிய காரணங்களால், தலைவலி வரலாம். உடலுறவுக்குப் பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு அதன் காரணமாகவும் தலைவலி ஏற்படலாம். இவை தவிர, மூளையில் உள்ள ரத்தக் குழாயில் வலு இழந்த இடத்தில் வீக்கம் ஏற்படுவதால் தலைவலி ஏற்படலாம். இந்த மூன்றாவது பிரச்னையை அநியூரிசம் (Aneurysm )  என்று சொல்வோம். ரத்தக் குழாய் விரிவடைதல் அல்லது மன அழுத்தம் பிரச்னை என்றால், மருந்து மாத்திரைகளினாலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். அநியூரிசம் என்றால், அதற்கு அறுவைசிகிச்சை தேவைப்படும். உரிய மூளை நரம்பியல் மருத்துவர் அல்லது அறுவைசிகிச்சை நிபுணரைச் சந்தித்து உங்களுக்கு எதனால் தலைவலி வருகிறது என்பதைக் கண்டறிந்தால், அதற்கு ஏற்றபடி சிகிச்சை அளிப்பார்.'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு