Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ஒட்டிய கண்ணை பிரிக்க என்ன வழி?

ராஜேஸ்வரி, மதுரை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 'காலையில் எழுந்ததும், கண்ணைத் திறக்கவே முடியாத அளவுக்குக் கண்கள் ஒட்டிக் கொண்டு விடுகிறது. எண்ணெயைத் தடவிதான் இமைகளைப் பிரிக்க முடிகிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு?'

கேள்வி - பதில்

  டாக்டர் மனோகர் பாபு, கண் நல மருத்துவர், சென்னை

'இரவில் அதிக அளவில் கண்ணில் நீர் வடிவதால் இவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். நீர்ப்பையில் அடைப்பு இருந்தால், அதை முதலில் தடுக்க வேண்டும். நீங்கள் கூறியது போல் கண் ஒட்டிக் கொள்ளும் வேளையில் எண்ணெய் விட்டு அதைப் பிரிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக தண்ணீரில் தோய்த்த ஈரமான பஞ்சைக் கொண்டு கண்ணைத் திறவுங்கள். கண் இமைகளில் தொற்று ஏற்படுவதால் வரக்கூடிய Conjunctivitis உங்களுக்கு இருக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு மருத்துவரை அணுகி அவர் கூறும் ஆன்டிபயாடிக் சொட்டு மருந்துகளைப் (Antibiotic EyeDrops)பயன்படுத்துங்கள்.  கண்களைக் குளிர்ந்த தூய நீரால் நன்கு கழுவுங்கள். தூய்மையான டவல், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். மற்றவர்கள் பயன்படுத்திய கைக்குட்டைகளைப் பயன்படுத்தாதீர்கள். பிரச்சனை தீவிரமாகி பிறருக்குப் பரவும்முன் சீக்கிரம் மருத்துவரை அணுகி அவர் ஆலோசனையின்படி செயல்படுங்கள்'.

'சுகர்’ பிரச்னைக்கு  ஏற்ற பழம் எது?

என்.சிவசங்கர், கோவை

'எனக்கு 37 வயதாகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சர்க்கரை நோய் இருப்பதை அறிந்தேன். எனக்குப் பழங்கள் ரொம்ப இஷ்டம். நான் பழங்களைச் சாப்பிடலாமா? அப்படி சாப்பிடலாம் என்றால், என்னென்ன பழங்களைச் சாப்பிடலாம்?'

கேள்வி - பதில்

டாக்டர் ரவிக்குமார், சித்த மருத்துவர், நெல்லை

'பழங்கள் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லதுதான் என்றாலும் சர்க்கரை நோயாளிகள் சற்றுக் கவனத்துடன் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றில் இனிப்புச் சத்து கூடுதலாக இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் அவற்றை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. நாவல் பழம் மிகவும் நல்லது. இலந்தைப் பழமும் உங்கள் உடலுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. பழுத்த கொய்யாக்கனியைத் தவிர்த்து, காய்வெட்டாக இருக்கும் கொய்யாவைச் சாப்பிடலாம். ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக உவர்ப்புச் சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும் பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கான மருந்தைத் தவறாமல் எடுத்துக்கொண்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.'

மனக் கலவரத்துக்கு மருந்து உண்டா?

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை

கேள்வி - பதில்

'எனக்கு வயது 42. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்கிறேன். நல்ல சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு சின்னப்பொருள் தொலைந்து போனாலும்கூட என் மனம் கலவரமாகிவிடுகிறது. அப்போது அருகில் இருப்பவர்களைக் கண்டபடித் திட்டிவிடுகிறேன். சில சமயம் தனிமையில் சென்று அழுதும்விடுகிறேன். இதனால் என் நண்பர்கள் என்னை 'அல்பன்’ என்றும் 'கஞ்சன்’ என்றும் கேலி செய்கிறார்கள். இதனால் என் மனம் இன்னும் வேதனை அடைகிறது. இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?'

டாக்டர் பன்னீர் செல்வன், மனநல மருத்துவர், நெல்லை

'பொதுவாக ஆழ்மனதில் மனஅழுத்தம் இருப்பவர்களிடம் இதுபோன்ற செயல்கள் இருக்கும். சிலர் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்பவர்களாகவும் இருப்பார்கள். தங்களிடம் இருக்கும் அதே நேர்மை, நாணயம் மற்றவர்களிடம் இல்லாதபோது சின்ன விஷயத்துக்குக்கூட எரிந்து விழுவார்கள். இது மாதிரியான சூழலில் இருப்பவர்கள் தங்கள் பதற்றத்தைக் குறைக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா செய்வது, குழந்தைகளுடன் விளையாடுவது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போன்றவை இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட வழிவகுக்கும். கோபம் காரணமாக நீங்களும் கலவரமாகி, மற்றவர்களையும் திட்டித் தீர்ப்பதைவிடவும் அந்தக் கோபத்தைத் தள்ளிவைக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். மன நல மருத்துவர்கள் இதற்கென எளிய பயிற்சிகள் அளிப்பார்கள். அவற்றைப் பின்பற்றிக் கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகாமல் தப்ப முடியும். இதற்காக வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை.'