Published:Updated:

மடியிலேயே ஒரு மருத்துவமனை!

மடியிலேயே ஒரு மருத்துவமனை!

மடியிலேயே ஒரு மருத்துவமனை!

மடியிலேயே ஒரு மருத்துவமனை!

Published:Updated:
##~##

'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்பது பழமொழி. ஆனால், இன்று நாம் சமைக்கும் உணவில் மிளகு சேர்த்தாலே, முகம் சுளிப்பவர்கள்தான் அதிகம். 

வீட்டிலேயே உள்ள அஞ்சறைப் பெட்டிக்குள் அருமருந்து இருக்கிறது. மேலும், மருதாணி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, அருகம்புல், துளசி, ஆவாரம் பூ, செம்பருத்தி என வீட்டைச் சுற்றி வளரும் செடிகள், காய்கறிகள், கீரை வகைகள் அனைத்துமே நோயை முறியடிக்கும் அற்புத மூலிகைகள் என்பதை அழகாகச் சொல்லி இருக்கும் அற்புதக் களஞ்சியம்தான் 'நாட்டு வைத்தியம்' என்ற இந்தப் புத்தகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் தொல்லை, பெரியவர்களுக்கு வரும் வீக்கம், வாதம், வாயுத் தொல்லை, வயோதிகர்களுக்கு வரும் தூக்கமின்மை, வலி, மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னையில் இருந்து மீளும் வழிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் நாட்டு வைத்தியத்தில் நலமான வழிகள் இருக்கின்றன என்கிறார் ஆசிரியர் அன்னமேரி பாட்டி.  

மடியிலேயே ஒரு மருத்துவமனை!

மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால், பத்து கிராம் அருகம்புல், மாதுளை இலை பத்து கிராம் இரண்டையும் 100 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து 50 மில்லியாகக் குறுக்கி காலையில் பாதி, மாலையில் பாதி எனத் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வந்தால் சரியாகிவிடும்.  

இந்தக் காலக்கட்டத்தில் ஏற்படும் வயிற்றுவலிக்கு, ஒரு முழு வாழைப்பூவை இடித்துச் சாறு எடுத்து அதில் மோர்விட்டுக் கலக்கி அருந்தினால், மூன்றே நாட்களில் வயிற்று வலி பறந்துவிடும் என்கிறார்.

அதிக உஷ்ணத்தினால், சிலருக்குக் கண் எரிச்சல் ஏற்பட்டு, கண்களில் நீர் வடியும். அத்தகைய பாதிப்புகொண்டவர்கள் மிளகு, சீரகத்தைப் பொடித்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, தலைக்கு தேய்த்துக் குளித்துவந்தால் கண்கள் ஜில்லென இருக்கும்.

ஜாதிக்காய்ப் பொடியைத் தினமும் சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.

ஆரம்பக்கட்ட மன நலக்கோளாறு இருந்தால், கீழா நெல்லி இலை, வேம்பூ, காய் இவற்றைக் கல் உரலில் இடித்துத் தண்ணீர் விட்டு மையாக அரைத்து, காலை நேரத்தில் தலையில் பூசி மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் நல்ல குணம் கிடைக்கும் என்று அற்புதமான எளிய வைத்தியக் குறிப்பைச் சொல்லி வியக்கவைக்கிறார் அன்னமேரி பாட்டி.

பாட்டியின் மருத்துவத் தீர்வுகளை அவருடைய பேச்சுத் தமிழிலேயே தொகுத்து அருகே இருந்து உரையாடுவதைப்போல் புத்தகத்தைத் தொகுத்து இருக்கிறார் மரிய பெல்சின். வயிற்று கடுப்புக்குக் கடுக்காய், ஒல்லி உடம்பைப் பருக்கவைக்க பூசணி, உடைந்த எலும்பை ஒட்டவைக்கப் பிரண்டை, நீர்க்கடுப்பை விரட்ட நன்னாரி, தும்மலைப் போக்க கொம்பு மஞ்சள் என 'நாட்டு வைத்தியம்’ புத்தகம் சொல்லும் மருத்துவக் குறிப்புகள் ஏராளம். 'மடியிலேயே ஒரு மருத்துவமனை’யாக விளங்கும் இந்தப் புத்தகம் எல்லோருக்குமான எளிய மூலிகை வழிகாட்டி!