பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

ரத்தக் குழாய் அடைப்பு  பரம்பரை நோயா?

என்.சிவராமன், தூத்துக்குடி

''என் அப்பாவுக்கு வயது 54. அவருக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு என்று கூறி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தார்கள். இதய ரத்தக் குழாயில் அடைப்பு பிரச்னை அப்பாவுக்கு இருந்தது என்பதால் என்னையும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுகிறார்கள். அப்பாவுக்கு வந்தால் பிள்ளைக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதா?''

கேள்வி - பதில்

சஞ்சய் செரியன், இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

''உலக அளவில் இதய நோய் பிரச்னைகளால் உயிரிழப்பு என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதயத் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாய்களில் கொழுப்பு படிவதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. அப்பாவுக்கு இருந்தது, பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள். உங்களுக்கான பதில் - ஆம். இதய நோய்களுக்கு மரபியல்ரீதியான காரணங்களும் உள்ளன. இதய ரத்தக் குழாய் நோய்களை ஏற்படுத்துவது எனக் கண்டறியப்பட்ட 250-க்கும் மேற்பட்ட ஜீன்களில், 20 ஜீன்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. நோயால் பாதிக்கப்பட்டவரின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆய்வுகள் 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை உள்ளதாகக் கூறுகின்றன. இந்த ஜீன்களில் ஏற்படும் மாற்றமானது நல்ல கொழுப்பைக் குறைத்து, கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடுகிறது. மேலும், அது ரத்த அழுத்தத்திலும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதற்காகச் சோர்ந்து அமர்ந்துவிட வேண்டாம், அப்பாவுக்கு வந்தால் உங்களுக்கும் வந்தே தீரும் என்று அர்த்தம் இல்லை. உங்களுக்கு இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம். தொடர் பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். இதற்கு உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள். ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு