Published:Updated:

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

Published:Updated:
மனமே நலமா?

60 வயதைக் கடந்த அம்மா, அவரது மகன், மருமகள் மூவரும் என்னிடம் வந்தனர். மகன்தான் முதலில் பேசினார். 'நாங்க ரெண்டு பசங்க. என் தம்பி பிறந்த சில வருடங்களிலேயே அப்பா இறந்துவிட்டார். சொந்தபந்தங்கள் ஆதரவு இன்றி வீட்டு வேலை செய்து என்னையும் என் தம்பியையும், எங்க அம்மா இன்ஜினியரிங் படிக்கவைத்தார். இப்போ நாங்க இரண்டு பேரும் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கோம். நான் வெளிநாட்டுக்குச் சென்றால், ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் இந்தியா திரும்புவேன். என் வீட்டில்தான் அம்மா இருக்காங்க. என் மனைவிதான் அவங்களைக் கவனிச்சிட்டு இருக்காங்க. சில வருடங்களாக என் அம்மாவின் செயல்பாட்டில் மாற்றம். மனநலப் பிரச்னை இருக்குமோனு உங்களை கன்சல்ட் பண்ணகூட்டிட்டு வந்தேன் டாக்டர்'' என்றார் கவலையுடன்.

மனமே நலமா?
##~##

அடுத்து மருமகள் பேசினார். ''காலைல டிபன் சாப்பிடுவாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு டிபன் எடுத்துவைனு சொல்லுவாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே சாப்பிட்டீங்க அத்தைனு சொன்னா, 'எனக்கு சாப்பாடு போடாம கொல்றாங்களே’னு அழுவாங்க. திடீர்னு ஒருநாள், 'நான் நேத்து கொடுத்த நகைகளை எடுத்துக்கிட்டு வா’னு சொன்னாங்க. நீங்க எதுவும் கொடுக்கலைன்னதும் தலையில அடிச்சுக்கிட்டு 'எல்லாரும் ஒண்ணுசேர்ந்து என்னை ஏமாத்துறாங்களே’னு அழுறாங்க. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமப் பேசுறாங்க. திடீர் திடீர்னு கோச்சுக்கிறாங்க, அழுறாங்க, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றாங்க, படுக்கையிலயே சிறுநீர் கழிச்சிடுறாங்க. திடீர்னு எங்கேயோ போயிடுறாங்க. திரும்ப வரவும் வழி தெரியலை. யாராவது தெரிஞ்சவங்க கூட்டிட்டுவந்து விட்டுட்டுப் போவாங்க. நைட் தூங்குறது இல்லை, ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்காங்க, கதவைத் திறந்து வெளியே போயிடுறாங்க. அவங்களோட இறந்துபோன அம்மா, அப்பா வெளியில இருக்கிறதாகவும், இவங்களை கூப்பிடுறதாகவும் சொல்வாங்க. ஒருநாள் அவங்க கணவன் சாப்பாடு கேட்டதா சொல்லி வீட்ல செய்துவைத்த சாப்பாடு எல்லாத்தையும் வெளியில கொண்டுபோய் அவருக்கு பரிமாறுறேன்னு தரையில கொட்டினாங்க. சில நேரங்களில தெளிவாத்தான் சார் இருக்காங்க. ரொம்ப விவரமாவும் பேசுறாங்க. எனக்கே சில சமயத்துல இவங்க வேணும்னே செய்றாங்களோன்னு தோணுது. எனக்கும் குழந்தைங்க இருக்காங்க. இவங்க இப்படிப் பண்றதால, யாரையும் சரியாக் கவனிக்க முடியலை. நானும் மனுஷிதானே'' என்றார் அழுதபடி.

ஏழ்மையில் இருந்தபோதே மிகவும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் ஆடை அணிபவராக இருந்திருக்கிறார் அந்தத் தாய். ஆனால், இப்போது நிலை மாறி, எப்போதும் அழுக்கு படிந்த கிழிந்த ஆடையையே உடுத்திவருகிறார்.  பல் துலக்குவது எப்படி என்பதுகூட அவருக்கு மறந்துவிட்டது. அந்த அம்மாவை கவனித்துக்கொள்வதற்காக வீட்டிலேயே நர்ஸ் ஒருவரை வைத்துக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த அம்மாவின் அட்டகாசத்தால் இரண்டு மூன்று நாட்களிலேயே நர்ஸ் ஓடிவிட்டார். கடைசியில், வேறுவழியின்றி அவரைக் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்துவந்தனர்.

மகன் இந்தியா வரும்போதெல்லாம் அம்மாவை சந்தித்துவிட்டுபோவார். அப்போதெல்லாம், 'டேய் என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப்போடா’ என்று அந்த அம்மா கண் கலங்குவார். அம்மா கண் கலங்கியதும், மகனுக்குக் குற்ற உணர்ச்சி அதிகமாகிவிடும். 'எங்களைக் கஷ்டப்பட்டு ஆளாக்கினவங்க டாக்டர், தம்பி இருக்கிறான், அதற்காக பெத்த தாயை யார் கவனித்துக்கிறதுன்னு ஏலமா போட முடியும்? 'வீட்டிலேயே வெச்சு கவனிச்சுக்கோ’னு மனைவிகிட்ட சொன்னாப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறா’ என்று அவர் அழுகிறார். 'மாமியாரைக் கவனிச்சுக்கத் தயார், அதற்காக அவங்களைச் சங்கிலி போட்டா கட்டிவைக்க முடியும், எங்காவது தொலைந்துபோய்விட்டால், நான் சரியாக கவனிக்கவில்லை என்று என் கணவரும், ஊராரும் பேசுவாங்க’ என்று அந்த மருமகளும் அழுகிறார்.

அந்த அம்மாவை என்ன செய்ய வேண்டும்? முதியோர் இல்லத்தில் விட்ட மகன் தவறு செய்தவரா? கவனிக்க முடியவில்லை என்று கூறும் மருமகள் செயல் சரியா? ஒன்றும் புரியாமல் குழந்தைபோல் நடந்துகொள்ளும் தாயின் மீது தவறுள்ளதா? உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

கடந்த இதழ் முன்சுருக்கம்

கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்த பெண் ஒருவருக்கு, அதே கல்லூரியில் படித்துவந்த சீனியர் மாணவர் காதலைச் சொல்லியிருக்கிறார். ஆனால், இதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நேரத்தில், ஒருநாள் கோவிலுக்கு கூட்டிச்சென்று திருட்டுத்தனமாகத் தாலி கட்டிவிட்டான். ஆனால், அங்கேயே அதை அந்தப் பெண் கழற்றி எறிந்துவிட்டு வந்துவிட்டாள். நண்பர்களோ தாலியைக் கழற்றியதால் அவனுக்கு ஏதேனும் பாதிப்பு வரலாம் என்று கூறுகின்றனர். அதுபோலவே, விபத்தில் அந்த மாணவன் இறந்துவிட, அந்தப் பெண்ணுக்கு குற்ற உணர்ச்சி அதிகமாகி அடிக்கடி மயக்கம்போட்டு விழுகிறாள்.

மனமே நலமா?

வாசகர் கடிதம்

வெறுமனே தாலியைக் கட்டுவதால் மட்டும் கணவன் ஆகிவிட மாட்டான். தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு வந்த அந்தத் தோழிக்கு சல்யூட்! விபத்தில் அந்த பையன் இறந்தது எதேச்சையாக நடந்த ஒன்று. அந்தத் தோழி மறக்கவேண்டிய விஷயத்தை இப்படி மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்வது தவறு. நடந்த எல்லாவற்றையும் அறிந்த ஒரு புரிதல் உள்ள கணவன் அவளுக்கு கிடைத்துள்ளார். அவருடன் மனம்விட்டுப் பேசி மனதில் உள்ள பாரத்தைக் குறைக்கலாம்.

- சு.விமலா, அறந்தாங்கி

டாக்டர் செந்தில்வேலன் பதில்

இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு டிசோசியேட்டிவ் டிஸ்ஆர்டர் (மனபிறழ்வு நிலைகள்) என்று சொல்வோம். எதிரும் புதிருமான கருத்துக்கள் மனதில் முட்டி மோதிக்கொள்ளும்போது, என்ன செய்வது எனத் தெரியாமல் மனம் துடிக்கும். அந்த இன்னலில் இருந்து விடுபடுவதற்காக மனதே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு வழிதான் மயக்கம் போடுதல். இதனால் அந்தப் பெண்ணுக்குக் குற்ற உணர்ச்சி என்ற உண்மையான பிரச்னை மறைந்து, மயக்கம்போட்டு விழுவதுதான் பிரச்னை என்பதுபோலத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.            

அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு எல்லா வகையிலும் தாலி சென்டிமென்ட்டே காரணம். தாலி கட்டிவிட்டாலே அவள் நமக்கு உரிமையானவள் ஆகிவிடுவாள் என்ற சென்டிமென்டில் அவன் தாலி கட்டினான். தனக்குப் பிடித்ததை எப்படியாவது உரிமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நுகர்வு வெறி அவனுக்கு. இந்த நுகர்வு வெறி அதிகரிக்கும்போதுதான் கொலை செய்வது, ஆசிட் வீசுவது போன்ற விபரீத செயல்கள் அரங்கேறுகின்றன. பையனின் பெற்றோர் தாலி சென்டிமென்ட் காரணமாகத்தான், கைம்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்தால்தான் தங்கள் மகன் ஆன்மா அமைதியடையும் என்று செய்திருக்கின்றனர். நண்பர்கள் மற்றும் சமுதாயத்தின் நெருக்குதல் காரணமாக, தான் தாலியைக் கழற்றிப்போட்டதால்தான் அவன் இறந்துவிட்டான் என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்கு குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றஉணர்ச்சி அதிகமாகி, கடும் மனப்பதட்டம் ஏற்படுவதால் வலது இடது மூளைக்கு இடையே உள்ள தொடர்புகள் தற்காலிகமாகச் சரிவரச் செயல்படாமல் மயக்கம் வருகிறது. அந்தப் பெண்ணுக்கு, உளவியல்ரீதியான சிகிச்சைகளும், தேவையற்ற குற்றஉணர்ச்சியை அகற்ற மனப்பயிற்சியும் அளிக்கப்பட்டு தற்போது நலம் அடைந்து வருகிறாள்.