குட் நைட்

##~## |
'குழந்தை என்பது ஒருவருக்குக் கிடைத்த அற்புத வரம்தான். ஆனால், ஒருவருக்குக் குழந்தை இல்லை என்பது சாபம் அல்ல!’ இந்த ஆழமான வித்தியாசத்தை, இந்த இதழ் கட்டுரை உங்களுக்குப் புரியவைக்கும்.
குழந்தையின்மைக்கான காரணத்தை அலசினால், அதில் செக்ஸ் பிரச்னையும் ஒரு முக்கியமான விஷயம். குழந்தையின்மைக்கு செக்ஸ் பிரச்னை ஒரு காரணமாக இருப்பதுபோல்... செக்ஸ் பிரச்னைக்குக் குழந்தையின்மையும் ஒரு காரணமாக அமையும் என்பது பலருக்குத் தெரிவது இல்லை.
என்னென்ன செக்ஸ் பிரச்னையால் ஒரு தம்பதிக்குக் குழந்தையில்லாமல் போகிறது. என்பதில், முதலில் ஆணின் செக்ஸ் பிரச்னையைப் பார்ப்போம்.
• சில ஆண்கள், செக்ஸ் என்றால் பல கிலோ மீட்டர் தள்ளிப்போய் நிற்பார்கள். செக்ஸ் நடவடிக்கையில் துளிகூட ஆர்வமே இருக்காது. இப்படி செக்ஸில் ஆர்வமே இல்லாமல்போனால், எப்படி அதில் ஈடுபட முடியும்? குழந்தை எப்படிப் பிறக்கும்?

• சில ஆண்களுக்கு செக்ஸில் ஆர்வம் இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள். ஆனால், அடிக்கடி செக்ஸில் ஈடுபடும் மனநிலை இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை செக்ஸில் ஈடுபடுகிற காரணத்தினாலேயே இவர்களுக்குக் குழந்தை இல்லாமல் போகலாம்.
• ஒருவருக்கு விறைப்புத் தன்மையில் உள்ள குறைபாடுகூட குழந்தையின்மைக்குக் கூடாரமாக அமைந்துவிடலாம். இந்த விறைப்புத்தன்மைக் குறைபாடு இரண்டு வகைகளைக்கொண்டது. சம்பந்தப்பட்ட ஆணுக்குத் துளி கூட விறைப்புத்தன்மை ஏற்படாதது முதல் வகை. அடுத்தது, விறைப்புத்தன்மை ஏற்படும். ஆனால், உடலுறவின் பாதி நிலையிலேயே அந்த விறைப்புத்தன்மை குறைந்துபோய் ஆண் உறுப்பு, காற்றுப்போன பலூன்போல ஆகிவிடும். ஆணின் இதுபோன்ற பிரச்னைகளாலும் ஒருசில தம்பதிகளுக்குக் குழந்தையில்லாமல் போய்விடலாம்.
• சில ஆண்களுக்கு விந்து சார்ந்தப் பிரச்னைகள் கூட, குழந்தையின்மைக்குக் கால்கோள் விழா நடத்திவிடும். சில ஆண்களுக்கு உடலுறவு சமயத்தில் பெண் உறுப்பில் ஆண் உறுப்பைச் செலுத்துவதற்கு முன்பே... முந்திக்கொண்டு விந்து வெளியேறிவிடும்.
• உடலுறவில் எத்தனை முறை ஈடுபட்டாலும், விந்துப் பையில் விந்து இருந்தாலும்... சில ஆண்களுக்கு அது வெளியேறவே வெளியேறாது. இன்னும் சில ஆண்களுக்கு அரிதாக ரெட்ரோகிரேடு எஜாகுலேஷன் என்கிற பிரச்னை இருக்கலாம். அதாவது, ஓர் ஆண், உடலுறவில் ஈடுபடும்போது விந்து ஆண் உறுப்பு வழியாக பெண் உறுப்புக்குள் செல்வதுதான் செக்ஸ் நடவடிக்கையின்போது இயல்பாக நடைபெறுகிற விஷயம். ஆனால், இந்த Retrograde Ejaculation என்ற பிரச்னையில்... உடலுறவில் ஈடுபடும்போது ஆணுறுப்பில் இருந்து விந்தானது பெண் உறுப்புக்குள் செல்வதற்கு மாறாக, ஆணின் பிறப்பு உறக்குள்ளேயே யு டர்ன் அடித்து... அந்த ஆணின் சிறுநீர்ப் பைக்குள் சென்றுவிடலாம். வழி தவறி சிறுநீர்ப் பைக்குள் விந்து சென்றடையும்போது, அந்த விந்துவில் உயிர் அணுக்கள் இருந்தாலும் சிறுநீரில் இருக்கும் அமிலங்கள் அந்த உயிர் அணுக்களை சாகடித்துவிடும்.
• சிலர், அதீத உற்சாகத்துடன், காமத் தீ கொளுந்துவிட்டு எரிய... அடிக்கடி உடல் உறவிலும் ஈடுபடுவார்கள். ஆனால், விந்து மட்டும் அந்த ஆணிடம் இருக்காது. இவை எல்லாம் குழந்தையின்மைக்கு விந்து சார்ந்த காரணங்களாகும்.
குழந்தையின்மைக்குக் காரணங்களாக அமைகின்ற பெண்ணின் செக்ஸ் பிரச்னைகள்:
• சில பெண்களுக்குப் பெண் பிறப்புறுப்பில் இயல்பாகவே அடைப்பு (obstruction)இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந்தை உண்டாகாமல் போகக்கூடும்.
• சில பெண்களுக்கு செக்ஸில் அதிக ஆர்வமும் இருக்கும். கணவனுடன் உடலுறவிலும் ஈடுபடுவார்கள். ஆனால், உடலுறவு தொடர்பான அச்சம், கடுமையாக வலி எடுக்கும் என்ற தவறான கற்பிதங்கள், அவர்களின் மனதில் ஆழப் பதிந்துபோயிருக்கும். இதன் காரணமாக உடலுறவு சமயத்தில் அவர்களின் பிறப்புறுப்பு இறுக்கமாக மூடிக்கொண்டு, ஆண் உறுப்பை உள்ளே நுழையவிடாமல் செய்துவிடும். இதற்கு மருத்துவ மொழியில் வெஜினிமஸ் (Vaginimus) என்று பெயர். ஆண் உறுப்பே பெண் உறுப்புக்குள் நுழையாவிட்டால், எப்படிக் குழந்தை உண்டாகும்?
• பல பெண்களுக்கு அரிதாக போபிக் ஃபியர் ஆஃப் பெனிட்ரேஷன் (Phobic Fear of Penetration எனப்படுகிற பிரச்னை இருக்கும். செக்ஸில் ஈடுபடும்போது, கடுமையாக வலிக்கும் என்கிற அதீதமான பயத்தால், செக்ஸ் நடவடிக்கையின் முன்விளையாட்டுகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். ஆனால், உடல் உறவில், பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையும் சமயத்தில்... மனப் பதற்றத்துடன் வேண்டாவெறுப்பாக கணவனை எட்டித் தள்ளிவிடுவார்கள். கணவன் என்ன சமாதானம் செய்தும் 'அது’ நடந்தேறாமலே போய்விடும். பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையவிடாமல் தடுத்தால், எப்படிக் குழந்தை பாக்கியம் இருக்கும்?
குழந்தையின்மைக்கு செக்ஸ் பிரச்னையும், செக்ஸ் பிரச்னைக்கு குழந்தையின்மையும் எப்படி காரணமாக அமைகிறது என்பதை இன்னும் பார்ப்போம்.
- இடைவேளை...