Published:Updated:

செயலிழந்த பகுதி...செயல்பட்ட அதிசயம்!

விகடன் விமர்சனக்குழு
செயலிழந்த பகுதி...செயல்பட்ட அதிசயம்!
செயலிழந்த பகுதி...செயல்பட்ட அதிசயம்!
செயலிழந்த பகுதி...செயல்பட்ட அதிசயம்!

புதுப்புது நோய்கள் புற்றீசலாகப் பெருகிவரும் நிலையில், அதற்கான மருந்துகளின் ஆராய்ச்சியும், கண்டுபிடிப்பும் உலகையே அண்ணார்ந்து பார்க்க வைக்கின்றன. இப்படி மருத்துவத் துறையில் அடுக்கடுக்காக நிகழும் சாதனைகள், நோய்களின் மீதான மக்களின் அச்சத்தை போக்கி விடுகிறது.

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக மார்புக்கு கீழே செயலற்று இருந்த ஒருவரை, மீண்டும் எழுந்து நடக்க வைத்திருப்பதே மருத்துவ உலகின் தற்போதைய மிகப்பெரிய சாதனை.

நாற்பது வயதான டெரிக் பிடிகா கடந்த 2010-ம் ஆண்டு, மோசமான கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானார். இந்த தாக்குதலில் அவரது முதுகுத் தண்டுவடத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த தண்டுவட நரம்புகள் பெருமளவு அறுந்து போயின. இதனால் அவரது உடலின் நெஞ்சுப்பகுதிக்கு கீழே செயலற்று அவர் முழுமையாக இயங்க முடியாமல் போனது. 

அவரது அறுந்து போன முதுகுத் தண்டுவட நரம்புகளை மீண்டும் உருவாக்குவதற்குப் போலந்து நாட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர்களும், லண்டன் விஞ்ஞானிகளும் இணைந்து புதுவித சிகிச்சைமுறையை உருவாக்கினர். மனிதர்களின் நாசித்துவாரத்தின் இரு பக்கத்திலும், ஓ.இ.சி.எஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ஒருவித பிரத்யேக செல்களை உற்பத்தி செய்யும் நுகர்வுச் செல்குருத்துத் தொகுதிகள் இருக்கும். இந்த செல்கள் தான் மனிதர்கள் வாசனை அறிவதற்குக் காரணமாகின்றது.

இந்தக் குறிப்பிட்ட ஒ.இ.சி.எஸ் செல்கள், நாசித் துவாரப்பாதையை அமைக்கும் செல்களாக நாசித் துவாரமெங்கும் பாசிபோல் படிந்து இருக்கும். நாசித்துவாரத்தில் இருக்கும் நுண்ணிய நரம்பு நார்களை, நாள்தோறும் புதுப்பிக்கும் வேலையை இந்த ஓ.இ.சி.எஸ் செல்கள் செய்கின்றன. எனவே, இந்த நுகர்வுச்செல் குருத்துத் தொகுதிகள், தொடர்ந்து நரம்புச்செல்களை உற்பத்தி செய்யும் தன்மையை இயற்கையிலேயே கொண்டிருக்கின்றன.

இந்தச் சிகிச்சையின் முதல்கட்டமாகப் பாதிக்கப்பட்டவரின் நாசித்துவாரத்தின் இரு பக்கங்களிலும் இருக்கும் இரண்டு நுகர்வுச்செல் குருத்துத் தொகுதிகளில் ஒன்றை மருத்துவர்கள் வெட்டி எடுத்து, அதை செயற்கை முறையில் சோதனைச் சாலையில் வைத்து ஒ.இ.சி.எஸ் செல்களை மருத்துவ விஞ்ஞானிகள் வளர்த்தனர்.

இரண்டு வாரங்கள் கழித்து, இப்படிச் சோதனைக்கூடத்தில் வைத்து வளர்த்த ஒ.இ.சி.எஸ் செல்களை நுண்ணிய ஊசிமூலம் பாதிக்கப்பட்டவரின் முதுகுத்தண்டுவடப் பகுதிக்குள் செலுத்தினார்கள். முதுகுத்தண்டு வடத்தில் காயம்பட்ட இடத்துக்குக் கீழேயும் மேலேயும் இப்படி ஊசி மூலம் ஓ.இ.சி.எஸ் செல்கள் செலுத்தப்பட்டன. சுமார் நூறுமுறை மிக நுண்ணிய ஊசிகள் மூலம் இந்தச் செல்கள் அங்கே பதியப்பட்டன.

செயலிழந்த பகுதி...செயல்பட்ட அதிசயம்!


அடுத்தகட்டமாகப் பாதிக்கப்பட்டவரின் கணுக்காலில் இருந்து நான்கு தொகுதி நரம்புத்திசுக்கள் எடுக்கப்பட்டு அவை முதுகுத்தண்டு வடத்தின் நரம்புத்தொகுதி அறுபட்ட இடத்தில் பதியப்பட்டது. இதன் விளைவாக முதுகுத்தண்டுவடத்தின் அறுபட்டிருந்த நரம்புத்தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உருவானதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அவர்களின் பார்வையில், சோதனைச் சாலையில் வளர்த்து முதுகுத்தண்டு வடத்தில் பதியப்பட்ட ஒ.இ.சி.எஸ் செல்களும் கணுக்காலில் இருந்து எடுக்கப்பட்ட நரம்புத்தொகுதியும் இணைந்து செயற்பட்டதன் விளைவாக, கத்திக் குத்தில் அறுபட்டிருந்த முதுகுத்தண்டுவட நரம்பு மண்டலம் மீண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு மூளையி லிருந்து அனுப்பப்படும் உத்தரவுகள் முதுகுத்தண்டு வடம் முழுமைக்கும் சென்றது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவரது உடலின் எல்லாப் பகுதிகளும், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் செயற்படச் செய்திருக்கிறது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து.

தற்போது டெரிக் பிடிகாவால் கைத்தடி உதவியுடன் நடக்க முடிகிறது.  கொஞ்சம் கொஞ்சமாக அவர் பழைய நிலைக்கு திரும்புவார் என மருத்துவர்கள் நம்புகிறார்கள். ‘மீண்டும் நடக்க முடிந்திருக்கும் செயல் தனக்கு ஒரு மறுபிறவி எடுத்ததைப்போன்ற அனுபவம்’ என்கிறார் டெரிக் பிடிகா.

- மு. அழகர் பாரதி