Published:Updated:

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

Published:Updated:
மனமே நலமா?
##~##

சுரேஷ், தர்ஷினி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும் 40 வயதைக் கடந்தவர்கள். வேலை பார்க்கும் இடத்தில் ஒருவருக்கு ஒருவர் பிடித்துவிட, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் இருவருக்கும் வேலை. சுரேஷூக்கு தர்ஷினி மீது அளவு கடந்த அன்பு. இவர்களது வாழ்க்கையில் ஒரு திடீர் தடுமாற்றம் நிகழ்ந்தது. தன்னுடன் வேலைப் பார்க்கும் ஒருவரின் மனைவி வேறு ஒருவருடன் வீட்டைவிட்டு வெளியேறியது சுரேஷின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. நம் குடும்பத்திலும் இதுபோன்று நடந்துவிடுமோ என்ற எண்ணம் சுரேஷூக்கு வந்து. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மனைவி வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவரது செல்போன், இ-மெயிலைப் பரிசோதிப்பது என்று ஆரம்பித்த சுரேஷின் நடவடிக்கைகள், நாளாக நாளாக, மனைவி மீதான நம்பிக்கை தகர்ந்து, அவர் உடுத்திச் சென்ற ஆடை கசங்கியுள்ளதா? கறை படிந்துள்ளதா? என்று உள் ஆடைகளையும் சோதித்துப்பார்க்கும் அளவுக்குச் சென்றது. மனைவி மீதான சந்தேகம் உச்சத்துக்குச் செல்ல, ஒரு கட்டத்தில் மனைவியை அடிக்கவும், யாருடன் வேண்டுமானாலும் அவரை சம்பந்தப்படுத்தி பேசவும், மனதை காயப்படுத்தவும் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சுரேஷின் நடத்தையைப்பற்றி இந்தியாவில் இருக்கும் தன் மாமியாரிடம் சொல்லி அழுதிருக்கிறார் தர்ஷினி. மருமகளைப் பற்றி நன்கு தெரிந்த மாமியார், தன் மகனுக்குத்தான் ஏதோ மனநலப் பிரச்னை இருக்கும் என்ற சந்தேகத்துடன், சில காரணங்கள் சொல்லி இருவரையும் இந்தியாவுக்கு வரவழைத்தார். சுரேஷின் அம்மா வீட்டில் இருவரும் தங்கினர். அந்த வீட்டில் சுரேஷின் தம்பியும் தன் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.

மனமே நலமா?

அன்று இரவு, படுக்கை அறையை பூட்டி சாவியை தன் தலைமாட்டில் வைத்துக்கொண்டார் சுரேஷ். படுக்கையைச் சுற்றி கொசுவலை கட்டினார். கொசு பேட் வைத்து அந்த அறையில் இருந்த கொசுக்களை கொன்றிருக்கிறார். இதற்கு மேல் கொசு இருந்ததால், கொசுவர்த்தி சுருளைப் பற்றவைத்து அந்த அறையில் ஒரு கொசுகூட இல்லை என்ற நிலை வந்த பிறகு படுக்கைக்கு வந்திருக்கிறார். இரவில் கணவன், மனைவி இருவரும் நன்றாகத் தூங்கியிருக்கின்றனர். மறுநாள் காலையில் எழுந்தவுடன் சுரேஷ், தன் மனைவியைப்போட்டு அடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருவழியாக அவரைக் கட்டுப்படுத்தி என்னிடம் அழைத்துவந்தனர்.

அவரிடம் பேசினேன். 'அவளுக்கு வேற யார் யாருடனோ தொடர்பு இருக்கு. நேத்து, வீட்ல எல்லா கொசுவையும் அடிச்சுட்டு ஒண்ணுகூட இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் தூங்கப்போனோம். காலைல அவ எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி நான் முழிச்சிட்டேன். ஆனாப் பாருங்க, கொசு வலைக்குள்ள இரண்டு மூணு கொசு சுத்திக்கிட்டு இருந்துச்சு. நான் நல்லாத் தூங்கினதுக்கு அப்புறம் அவ எழுந்து வெளியில போயிருக்கா. அதனாலதான் கொசு வந்திருக்கு. நைட் ஏன் அவள் வெளியே போகணும்? அவளுக்கு நிறையத் தொடர்புகள் இருக்கு டாக்டர். அதனாலதான் வெளியில போயிருக்கா. அவ கதவைத் திறந்த நேரத்துல கொசுங்க உள்ள வந்திருக்கு. இதுல இருந்து இவ தப்பு பண்றது தெரியுது. ஆனா, கையும் களவுமா பிடிக்க முடியலை. இதையெல்லாம் சொல்லப்போனா பைத்தியம்னு என்னை உங்ககிட்ட கூட்டிட்டுவந்திருக்காங்க’ என்று ஆதங்கப்பட்டார். கணவரின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் 'நான் எங்கேயும் போகலை டாக்டர். நைட் முழுக்க இவர்கூடத்தான் இருந்தேன். ரூம்ல கொசு இருந்ததுக்கு, நான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றாரே’ என்று அழுதார். சுரேஷூக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? யார் மீது தவறு? இதற்கு என்னதான் தீர்வு? உங்கள் எண்ணங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

கடந்த இதழ் கதைச் சுருக்கம்

10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவியைக் கண்டதும் காதலில் விழுகிறான். அந்தப் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கிறான். அந்த பெண் காதலை ஏற்க மறுக்க, கை, உடல் எங்கும் பச்சைக் குத்தி, நெருப்பால் பெயரை எழுதி அதை அந்தப் பெண்ணிடம் காட்டுகிறான். இதைப்பார்த்து, இவரை விட நம்மீது அக்கறைகொண்டவர் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து காதலை ஏற்றுக்கொள்கிறாள் அந்தப் பெண். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணமும் செய்து குழந்தைகளும் பிறந்தன. அவனுக்கு தற்போது, வேறு ஒரு பெண்ணிடம் காதல் பிறக்கிறது. அந்தப் பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கும்படி தன் மனைவியிடமே சண்டைபோடுகிறான். உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறேனோ, அதே அளவுக்கு அந்த பெண்ணையும் காதலிக்கிறேன். காதலின் வலி உனக்குக்கூடத் தெரியாதா என்று மனைவியிடம் கேட்கிறான். பெற்றோரைப் பகைத்துக்கொண்டு காதல் திருமணம் செய்துகொண்ட அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாள்.  

டாக்டர் செந்தில்வேலன் பதில்

இதற்கு 'குணாதிசயக் கோளாறுகள்’ (பர்சனாலிடி டிஸ்ஆர்டர்) என்று பெயர். குறிப்பாக இதை பார்டர்லைன் பர்சனாலிடி டிஸ்ஆர்டர் என்போம். இது மனநிலைப் பாதிப்பில் ஒரு வகை. மன வியாதி என்று சொல்லும் அளவுக்கு இருக்காது. ஆனால் இவர்களால் சாதாரண மனிதர்களைப்போல சிரமமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாது. மன அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் இருக்காது. ஒவ்வொரு விஷயத்தையும் கையாளும்போது தங்களை மையப்படுத்தி செய்வார்கள். பேசும்போது மற்றவர்களைப் பற்றி அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். அதிக அளவில், மிக எளிதில் உணர்ச்சிவசப்படுபவார்கள். அதில் ஆழமான உணர்வு இருக்காது. அதனால்தான் கையெல்லாம் காயம் ஏற்படுத்திக் காதலித்துத் திருமணம்செய்த பெண்ணைவிட்டு வேறு ஒரு பெண் மீது காதல் வந்து, அந்த காதல் நிறைவேற வேண்டும் என்று துடிக்கிறான். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த ஒரு வரைமுறையும் இன்றி தங்கள் விருப்பப்படி வாழ்வார்கள். இதற்கு பெற்றோரின் வளர்ப்பும் ஒரு காரணம். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும்போது, இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களாக வளர வாய்ப்புள்ளது. இந்த நபருக்கு கவுன்சிலிங் மற்றும் மருந்து மாத்திரைகள் அளித்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைத்தோம். பிறகு, இரண்டாவது காதலில் இருந்து விலகி வருவதற்காக, இரண்டாவது காதலில் விழுந்த பெண்ணையும் அழைத்து அவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அந்த பெண்ணே இந்த நபரை விட்டு விலகிச் சென்றார். தற்போது, இவர் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறார்.

மனமே நலமா?

வாசகர் கடிதங்கள்

விரும்பியதை அடைந்தே தீரவேண்டும் என்ற 'ஆழ்மன சங்கல்பம்’ சங்கீதாவின் கணவருக்கு இருக்கிறது. சுரேஷின் மனதை மாற்றும் எண்ணத்துடன் சங்கீதா செயல்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, கணவரின் மனதை மாற்ற சங்கீதா அன்பொழுகப் பேசுவதன் மூலம், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

- ப.கிருஷ்ணமூர்த்தி, காட்டுப்புத்தூர்

'பள்ளிக்கூட காதல்களும், ஒரு தலை காதல்களும் பெருக முழுக்க முழுக்க சினிமாக்களும், இருமுறை காதல்கள் பெருக முழுக்க முழுக்க டிவி சீரியல்களே காரணம். காதலர்கள் பெரும்பாலும் கற்பனையிலும், ஒரு வித மாயையிலும் இருப்பார்கள். கவுன்சிலிங் மூலமாக, இதிலிருந்து முழுமையாக வெளிவர முயற்சிக்கவேண்டும்.

- கிருத்திகா, திருச்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism