Published:Updated:

மனமே நலமா?

மனமே நலமா?

முன்கதைச் சுருக்கம்

மனமே நலமா?

தன்னுடன் வேலைபார்க்கும் நபர் மீது அந்தப் பெண்ணுக்கு அன்பு ஏற்படுகிறது. அவருடன் பேசாமல், அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. எங்கே தப்பு நடந்துவிடுமோ என்று பயந்து, அந்த நபருக்கு அந்தப் பெண்ணே திருமணம் செய்துவைக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மனதில் ஏதோ குற்ற உணர்ச்சி. 'அவரைத் தவறவிட்டுவிட்டோமோ' என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனால், அழுது புலம்புகிறார். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனதில் விபரீத எண்ணங்கள் ஏற்படுகின்றன. தோழிகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவரால் அந்த நபரை மறக்க முடியவில்லை. சரி, அந்த நபருடன் ஒருமுறை இணைந்துவிட்டால் ஈர்ப்புப்போய்விடும் என்று நினைத்த தோழிகள், இருவரையும் வெளியூருக்கு அனுப்பிவைக்கின்றனர். ஆனால், அதன் பிறகு பிரச்னை இன்னும் அதிரித்தது. வேறுவழியின்றி அந்தப் பெண்ணை மனநல மருத்துவரிடம் அழைத்துவந்தனர்.

மனமே நலமா?

யாருக்கும் கட்டுப்படாமல், கட்டுக்கடங்காமல் இருந்த 18 வயது கமலேஷ் என்ற இளைஞனை அவனது அப்பா, அம்மா, மாமா ஆகியோர் என்னிடம் அழைத்துவந்தனர். அவனுக்கு என்ன பிரச்னை என்பதை அவனது மாமா சொல்ல ஆரம்பித்தார்.

'சொந்த ஊர் கோவை பக்கத்துல கிராமம். ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பம். நான்தான் இவனை, இன்ஜினீயரிங் காலேஜில் சேர்த்துப் படிக்கவைக்கிறேன். காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சிட்டு இருக்கான். அதிர்ந்துகூடப் பேசாத அமைதியான பையன். உடம்பு சரியில்லைன்னு வீட்டுக்கு வந்திருக்கான். ரொம்ப மூச்சு வாங்கிகிட்டே இருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போய் பார்த்தா, ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும் மூச்சு வாங்குறது மட்டும் நிக்கவேயில்லை. கோவிலுக்கு அழைச்சிட்டுப்போய் விபூதி பூசி மந்திரிச்சோம். அந்த நேரத்தில மட்டும் மூச்சு வாங்குறது சரியாகி,  திரும்பவும் கொஞ்ச நேரத்துல அதிகமா மூச்சு வாங்க ஆரம்பிச்சு, திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான். வேற ஒரு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். அங்க அவனுக்கு இதயம், நுரையீரல்னு எல்லா டெஸ்ட்டும் செஞ்சு, எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லிட்டாங்க. ஆனா, மூச்சுப் பிரச்னை மட்டும் சரியாகலை. மயக்கம் போட்டு விழுறது அதிகமாயிடுச்சு. அரை - முக்கால் மணி நேரம் வரைக்கும்கூட மயங்கிக் கிடப்பான். அந்தநேரத்தில், அவனைக் கிள்ளினா, அடிச்சாக்கூட எந்த உணர்வும் இல்லாம இருப்பான். என்ன செஞ்சாலும் எந்திரிக்க மாட்டான்.

அதுக்கப்புறம், ஒரு பூசாரிகிட்ட கூட்டிட்டுப் போனோம். அவர், இவனுக்கு விபூதி போட்டு, வேப்பிலையில அடிச்சு 'நீ யாரு?’ன்னு கேட்டதும், 'நான் முத்து’னு சொல்லியிருக்கான். அந்த நேரத்துல அவனோட குரல், பார்வை, நிற்கும் ஸ்டைல் எல்லாமே மாறிடுச்சு. 'ஏன் கமலேஷ் உடம்புல இருக்க? அவனை விட்டுட்டுப் போயிடு''ன்னு பூசாரி சொல்ல, அதுக்கு இவன், 'நான் கமலேஷைக் கொல்லத்தான் வந்திருக்கேன், விட்டுட்டுப் போகமாட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல கமலேஷ் ரத்தம் கக்கிச் சாவான். கமலேஷ் நல்லவன் இல்லை. அவன் உயிரோட இருக்கக் கூடாது, கண்டிப்பா செத்தே தீரணும்'னு சொல்லிட்டு மயக்கம் போட்டு விழுந்துட்டான். மயக்கம் தெளிஞ்ச கமலேஷ், 'எனக்கு என்னாச்சு? நாம ஏன் இங்கே இருக்கோம். என்ன நடந்தது’னு கேட்டிருக்கான். முத்துங்கிறவர் யாருன்னு விசாரிச்சப்போ, இவன்கூட படிச்ச பையன். போன வருஷம் விபத்துல இறந்துட்டதா கமலேஷ் சொன்னான்.

'பேய் ஓட்ட நல்ல நாள் பார்க்கணும்; அதுவரைக்கும் பத்திரமா வீட்ல வெச்சுக்கோங்க’னு பூசாரி சொன்னாரு. அன்னைக்கு ராத்திரி சாப்பிடும்போது ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்தான். அலறி அடிச்சு, இவனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். போகும்போது இவன் உடம்புல இருந்த முத்து, 'செய்த தப்புக்கு கமலேஷ் சாகப்போறான். ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோறது வீண்’னு சொல்லியிருக்கான். ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு கரூர்ல இருக்குற என் வீட்டுக்குக் கூட்டிட்டுவந்தேன். அன்னைக்கு நைட் திடீர்னு ஒரு போன். 'நான் எங்கே இருக்கேன்னு தெரியலை மாமா, வந்து என்னை கூட்டிட்டுப்போங்க’னு கமலேஷ் பேசினான். அவன் சொன்ன அடையாளத்தை  வெச்சுக்கிட்டுப் போனா அது சுடுகாடு. 'எப்படி வந்தேன்னு தெரியலை மாமா’னு சொல்லிட்டிருந்தவன், திடீர்னு குரலை மாற்றி, 'டேய் நீ கமலேஷைக் காப்பாத்திடுவியா? அவனைக் கொல்லாம விடமாட்டேன்’னு பேச ஆரம்பிச்சுட்டான். இவன் தொல்லை தாங்க முடியாம, உங்ககிட்ட கூட்டிட்டுவந்தேன்’ என்றார் பரிதாபமாக.

கமலேஷ§க்கு என்ன பிரச்னை? ஏன் மாறி மாறிப் பேசுகிறான்? அவன் உடலில் இருப்பது முத்துவின் ஆவியா? அவனுக்கு என்ன நடந்திருக்கும்? இதைச் சரிசெய்ய முடியுமா? உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள். அவனுக்கு என்ன பிரச்னை, எப்படிச் சரிசெய்யப்பட்டது என்பது பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.

டாக்டர் செந்தில்வேலன் பதில்

மனமே நலமா?

அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைக்கு மனச் சோர்வு நோய் என்போம். தான் செய்வது தவறு என்று அந்தப் பெண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், மனச்சோர்வு நோய் இருந்தால், நமக்கு உண்மை நிலை தெரிந்தாலும் கூட அதில் இருந்து மீள முடியாது. அந்தக் குறிப்பிட்ட சம்பவத்தால், மூளையில் செரட்டோனின், டோபமைன், நார்அட்ரினலின் போன்ற வேதிப் பொருட்கள் சுரப்பு என்பது குறைந்துபோய்விடுகிறது. அதனால், என்னதான் தலைகீழாக நின்றாலும் குறிப்பிட்ட சிந்தனையில் இருந்து அவர்களால் வெளியே வரவே முடியாது. அந்தச் சம்பவம் திரும்பத் திரும்ப நினைவில் வந்து மண்டையைக் குடைந்துகொண்டே இருக்கும். பல்வேறு அவஸ்தை கொடுக்கும், கடைசியில் தற்கொலைக்குத் தூண்டும். இதைச் சரிப்படுத்தலாம். அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து சைக்கோதெரப்பி மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுத்தோம். மேலும், அந்த நபருடன் நேரிலோ, தொலைபேசியிலோ பேசவே கூடாது என்று சொன்னோம். மேலும், அவரது தோழிகளிடமும் அந்த நபரிடம் இவர் பேசாமல் இருப்பதைக் கண்காணிக்கும்படி கூறினோம். சொன்னதுபோலவே அந்த பெண்மணிகள் செய்தனர். தற்போது முற்றிலும் இந்தப் பிரச்னையில் இருந்து வெளிபட்டு, தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கிறார்.

மனமே நலமா?

'பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்குப்பதில், பிரச்னையை மேலும் அதிகப்படுத்திவிட்டது தோழிகளின் செயல். அதுதான் பிரச்னை முற்றியதற்கு முக்கிய காரணம். நல்லது செய்கிறேன் என்று பலரும் இப்படித்தான்  குழப்பத்தை ஏற்படுத்திவிடுவதுண்டு.  யோகா, தியானம் என மனதை ஒருநிலைப்படுத்தும் செயல்களைச் செய்து, தோழியின் மனசைத் திசை திருப்பியிருக்கலாம். நல்ல கவுன்சிலிங் கொடுத்த பிறகாவது, அந்தப் பெண், உடன் வேலை பார்க்கும் அந்த நபரைச் சந்திப்பதைத் தவிர்த்து, குடும்பத்தின் நலன் கருதி, நிம்மதியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்!'

- ஷர்மிளா, தூத்துக்குடி.