Election bannerElection banner
Published:Updated:

நலம் தரும் நாவல் பழம்

நலம் தரும் நாவல் பழம்

##~##

நோயின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பலத்தைத் தருவது காய்கறி - பழங்கள். காய், கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்த சித்தர்களும், நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை வளம் செரிந்தது. நாகரிகத்துக்கு மாறுகிறேன் என்று மனிதன் இயற்கை உணவுகளைத் தவிர்த்து, சமைத்த உணவுக்காக, தினம் தினம் வாய்க்கு கைக்கும் சண்டை போடுவதன் விளைவு பல்வேறு நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். 

'தினமும் மூன்று வகைப் பழங்களைச் சாப்பிடுங்கள். நோய் கிட்ட நெருங்காது'' என்கிற காரைக்குடி சித்த மருத்துவர் ஆறுமுக பிரபு, நாவல் பழத்தைப் பற்றி விவரித்தார்.

'ஜூலை முதல்  செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான்.  நம் ஊர்தான் நாவல் பழத்துக்குப் பூர்வீகம்.

நலம் தரும் நாவல் பழம்
நலம் தரும் நாவல் பழம்

நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது'' என்றவர், நாவல் பழத்தின் பலன்களை விவரித்தார்.

'கால்சியம், எலும்புகளுக்கு உறுதியைக் கொடுப்பதுடன், உடலை வலிமையாக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த விருத்தியடையச் செய்யும். ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள வைட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

நாவல் பழத்திலுள்ள 'ஜம்போலினின்’ எனும் 'குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

நலம் தரும் நாவல் பழம்

சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லாமல் மருந்தாக பத்தியமிருந்து 1 மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம்.  

இந்தப் பழத்தில் 'குயுமின்’ எனும் 'ஆல்கலாய்டு’ உள்ளது.  இது தோலில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்’ ஆப்பிள், கேரட், மாதுளையைவிட நாவல் பழத்தில் அதிகம். இதனால் தோலில் ஏற்படும் வெண்புள்ளி, அரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவலை தொடர்ந்து உண்டுவர தோல் பொலிவு கிடைக்கும். வாய் முதல் குடல் வரை ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்தும். அதிகமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் போக்குக் கட்டுக்குள் வரும். பசியைத் தூண்டும்.

நாவல் பழம் குளிர்ச்சியானது என்பதால்  உடல் சூட்டைத் தணிக்கும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களையும், மஞ்சள் காமாலையையும் குணப்படுத்தக் கூடியது. பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான  சிக்கல், வெள்ளைப்படுதல், மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றையும்  நாவல் பழம் சரியாகும்.

நாவல் பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள். இது தவறு! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய அற்புத பழம்.  இப்போது நகர்புறங்களில் விதையில்லா 'ஹைப்ரிட் வகை’ நாவல் பழங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இதில் கொஞ்சம்கூட சத்து கிடையாது. நாட்டு நாவல் பழத்தில் மட்டுமே மேற்கூறிய பலன்கள்!'' என்றார்.

நாட்டு நாவலை உண்டு மகிழ்வோம்!

சு.ராம்குமார்,

படங்கள்: சாய் தர்மராஜ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு