Published:Updated:

விஷ காய்கறிகளுக்கு 'குட்பை'… ஆரோக்கிய காய்கறிகளுக்கு 'வெல்கம்'…!

விஷ காய்கறிகளுக்கு 'குட்பை'… ஆரோக்கிய காய்கறிகளுக்கு 'வெல்கம்'…!
விஷ காய்கறிகளுக்கு 'குட்பை'… ஆரோக்கிய காய்கறிகளுக்கு 'வெல்கம்'…!

விஷ காய்கறிகளுக்கு 'குட்பை'… ஆரோக்கிய காய்கறிகளுக்கு 'வெல்கம்'…!

'காணி நிலம் வேண்டும்… பராசக்தி காணி நிலம் வேண்டும்'- என்றார் மகாகவி பாரதியார். ஆனால், இன்றைக்கு அரைக்காணி நிலம் கூட கனவாகிவிட்ட நிலையில்... கை நிறைய பணத்துடன் போனாலும், பை நிறைய காய்கறிகள் வாங்க முடியவில்லை. அப்படி வாங்கும் கத்திரிக்காய் முதல் கீரைகள் வரை எந்தக் காய்கறிகளை வாங்கினாலும் அதில் கொஞ்சம் விஷம். இந்த நிலையை மாற்றவும், நம் வீட்டைச் சுற்றி இருக்கும் குறைந்த இடத்திலும், மொட்டை மாடியிலும், நஞ்சில்லாத காய்கறிகளை சொந்தமாக உற்பத்திச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் விகடனும், பசுமை விகடனும் தொடர்ச்சியாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில், 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது.

விஷ காய்கறிகளுக்கு 'குட்பை'… ஆரோக்கிய காய்கறிகளுக்கு 'வெல்கம்'…!

அதன் தொடர்ச்சியாக, கடந்த மே 30-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள ஜெயசக்தி திருமண மண்டபத்தில், அவள் விகடன், பசுமை விகடன் மற்றும் விழுப்புரம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த, 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்' பயிற்சி கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்தப் பயிற்சியில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பெங்களூருரில் இருந்தும், பாண்டிச்சேரியில் இருந்தும் 500 மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்தப் பயிற்சி கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்றிருந்த விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சரவணக்குமார், ''இன்றைக்கு இருக்கும் நெருக்கடியான காலக்கட்டத்தில் விவசாயம் என்பது குறைந்துக்கொண்டே போகின்றது. வருங்காலத்தில் நெல் எங்கிருந்து வருகின்றது எனப் பட்டிமன்றம் நடந்தாலும் நடக்கலாம். அந்த அளவுக்கு நகரத்து வாழ்க்கை சுருங்கி போய்விட்டது. இன்றைய வாழ்க்கையில் பலருக்கும், கிடைப்பது விஷங்கள் தெளிக்கப்பட்ட காய்கறிகள்தான். இந்த நிலை மாற வேண்டும். மொட்டை மாடியிலும், வீட்டைச் சுற்றி இருக்கும் இடத்திலும் நாமே காய்கறிகள் வளர்க்க வேண்டும் என்பது என்னை போன்றவர்களின் ஆசைகள். இதை நிறைவேற்றி வைக்கும் வழிகாட்டியாக... அவள் விகடனும், பசுமை விகடனும் இணைந்து, 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்துவதற்கு பெருமைப்படுகின்றோம்'' என்றார்.

விஷ காய்கறிகளுக்கு 'குட்பை'… ஆரோக்கிய காய்கறிகளுக்கு 'வெல்கம்'…!

சிறப்புரை ஆற்றிய சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கத்தின் நிறுவனர் சி.கே.அசோக்குமார், ''இன்றைய காலத்தில் விவசாயம் என்பது சாயம் போன ஒரு தொழிலாளாக மாறியதால்... பல விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் பசுமை விகடன், விவசாயத்திற்கு ஒரு புத்துணர்வு கொடுக்கும் வேலையைச் செய்து வருகின்றது. நம்மாழ்வார் விதைத்த விதைகள் இன்றைக்கு விரிச்சமாக வளர்ந்து 'இயற்கை’ என்னும் பழத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ரசாயன உரங்கள் இட்ட நிலமெல்லாம் பாழ்பட்டிருக்கின்றது. அலோபதி மருத்துகள் நம் உடலையெல்லாம் சீரழித்திருக்கின்றது. இவற்றை சரி செய்ய ஒரு நம்மாழ்வார் போதாது. பல ஆயிரம் நம்மாழ்வார்கள் இருந்தால்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

அமெரிக்காவில் இருந்து நாங்கள் நடத்திய கருத்தரங்கத்திற்கு புற்றுநோய் சிறப்பு மருத்துவர் தாமஸ் லோடி என்பவரை அழைத்து வந்திருந்தோம் அவர் பேசும்போது, மேலைநாடுகளை பார்த்து, பீட்சா, மேக்டொனால்ட் மாதிரியான பாஸ்ட் உணவுகள் இந்தியாவில் இருப்பவர்களும் உண்கின்றனர். அந்த உணவு வகைகளில் ஸ்லோ பாய்ஸன் அடங்கி இருகின்றது. அவைகள் புற்றுநோய் மாதிரியான வியாதிகளை ஏற்படுத்தக்கூடியவை.

இந்த நோய் தாக்கத்திற்கான காரணம் நம் பெற்றோரின் மரபியல் அல்ல, நம்முடைய வாழ்வியல் முறைகள்தான் என்றார். 2012-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 7 லட்சம் மக்கள் இந்தியா நாட்டில் கேன்சார் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டில் 5 மடங்காக உயரும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இன்றைக்கு நம்மூரிலும் கேன்சர் வியாதிகள் அதிகமாகிவிட்டது. அதற்கு உதாரணம் மாவட்ட தலைநகரமான கடலூரில் கேன்சருக்கு தனியாக ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, நாம் எல்லோரும் வாழ்க்கை முறையையும், உணவு முறைகளை சற்று மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

`'வீட்டுத்தோட்டத்தில் காய்கறி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் இல்லங்களில் கழிவு நீர் மேலாண்மை’ என்ற தலைப்பில் பேசிய அனிதா கிருஷ்டினா, ''நாம் இருக்கிற இடத்தை சுற்றி தூசி, குப்பை, சாக்கடை தண்ணீர், நெடிக்கடியான வீடு, பரப்பரப்பான வாழ்க்கைனு வாழ்கிறோம். 20 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் இதுமாதிரியான நெருக்கடிகள் இல்ல. காற்றோட்டமான வீடு, வீட்டை சுற்றி கத்திரிக்காய், சுரக்காய், அவரைக்காய்னு பலவிதமான காய்கள்னு இருந்த வாழ்க்கை எல்லாம், வாழ்க்கை சக்கரத்துல கரைஞ்சு போச்சு.

விஷ காய்கறிகளுக்கு 'குட்பை'… ஆரோக்கிய காய்கறிகளுக்கு 'வெல்கம்'…!

வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். ஒரு வீடு, சுத்தமான காற்று, மொட்டை மாடியில தோட்டம், அதுல விளைஞ்ச கத்திரிக்காய், வெண்டைக்காய்களை பயன்படுத்தி சமைத்த சாப்பாடுனு கனவுகளோட பட்டியல் நீளும். அப்படி எனக்கு இருந்த ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றிக்கதான், நான் என்னோட வீட்டை வடிவமைச்சுகிட்டேன். எங்களோட வீட்டுல இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை தவிர மற்ற எந்தக் கழிவுகளும் வெளியில போறதில்லை. எல்லா கழிவுகளையும் முழுமையா மறுசுழற்சி செய்றேன். எங்க வீட்டை சுற்றிப் பார்த்தா பசுமையா இருக்கும்'' என்றவர், வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்கும் தொழில்நுட்பங்களை விளக்க ஆரம்பித்தார்.

''நாம வளர்க்குற எந்தச் செடியும், நல்ல தண்ணீர் கொடுத்தா மட்டும்தான் வளரும்னு கிடையாது. நாமதான் நல்ல தண்ணீரை மட்டும் ஊத்திவிடுறோம். கழிவு தண்ணீரையே முறையா சுத்தம் செய்துப் பயன்படுத்தலாம். இதன் மூலமா... தண்ணீர் பிரச்னை இருக்கிற சென்னை மாதிரியான இடங்களிலும் காய்கறி வளர்க்கலாம்.

மாடித்தோட்டம் போட்டு அவங்க உழைப்புல விளைந்த காய்கறிகளை சாப்பிட்டுப் பழகிட்டா, வெளியில இருந்து காய்கறிகள் வாங்க சுத்தமா பிடிக்காது. இதுவரைக்கும் பலரோட வீட்டுல இருக்கிற மொட்டை மாடி இரவு நிலாச்சோறு ஊட்ட மட்டும் பயன்பட்டிருக்கும். இந்த மொட்டை மாடியில நம்மோட ஆசைக்கு ஏற்ற மாதிரி காய்கறிகள் வளர்க்கலாம். குறைந்தப்பட்சம் 300 சதுர அடி இடம் இருந்தாலே ஒரு சின்ன குடும்பத்துக்குப் போதுமான காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

மாடித்தோட்டம் அமைக்கும் போது, ஒரே நேரத்துல அதிகமான அளவுக்கு தொட்டிகளை வாங்கி அடுக்கி வெச்சிட கூடாது. முதல் தவணையா 5 தொட்டிகளை வாங்கி விதைகளை நட்டு வளர்த்துப் பார்த்துட்டு, அடுத்து, ரெண்டு ரெண்டா தொட்டிகளோட எண்ணிக்கையை அதிகப்படுத்தணும். மொட்டை மாடியில தொட்டிகளை வைக்கும் போது ஒரே இடத்துல அடுக்கி வைக்காம பகிர்து அடுக்கி வைக்கணும். தொட்டி, அதுல இருக்குற மண், செடினு எல்லாம் சேர்த்து 2 கிலோவுல இருந்து 3 கிலோ எடை இருக்கலாம். அதுக்குமேல இருக்கக்கூடாது. செடிகளை வளர்க்கிறதுக்கு சிமெண்ட் தொட்டிகளைதான் பயன்படுத்தணும்னு தேவையில்லை. வீட்டுல இருக்கிற பழைய பிளாஸ்டிக் வாளி, குடம், பிளாஸ்டிக் கவர் மாதிரியான பொருட்களையும் பயன்படுத்தலாம்'' என்றார், 36 வயதினிலே ஜோதிகா கணக்காக...

'செலவு குறைந்த கீரின் பில்டிங் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில் பேசிய ஃபெரோ சிமெண்ட் தொழில்நுட்பப் பயிற்றுநர்கள் ராஜராமன் மற்றும் லார்ஸ், ''இன்றைக்கு வீடு கட்டுவதில் பலவிதமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதில் வழக்கத்தில் இருக்கும் வீடு கட்டும் தொழில்நுட்பம் அதிகமான செலவு பிடித்தாலும் முழுமையாக சூழலுக்கு உகந்த வீடுகளாக இல்லை. அதற்கு மாற்றாகத்தான் ஃபெரோ சிமெண்ட் தொழில்நுட்பங்களை முன் வைக்கின்றோம். இந்த தொழில்நுட்பத்தைக் கடந்த 30 ஆண்டு காலமாக நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம். இதில் செங்கல் மற்றும் மரம் இல்லாமல் இரும்பு பொருட்களை கொண்டு கட்டுக்கின்றோம். ஆகையால்... இதனை 'பசுமை வீடு' என்று சொல்லலாம்.

விஷ காய்கறிகளுக்கு 'குட்பை'… ஆரோக்கிய காய்கறிகளுக்கு 'வெல்கம்'…!

இந்த ஃபெரோ சிமெண்ட் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் வீடுகள் பூகம்பத்தையும் தாங்கி நிற்கும். நம்முடைய வடிவமைப்பு, அந்தப் பகுதியில் விற்பனையாகும் மணல் விலை ஆகிவற்றின் அடிப்படையில் 850 ரூபாய் முதல் 2000 ரூபாய் ஒரு சதுர அடிக்கு செலவாகும். நாங்கள் எல்லா இடங்களிலும் வீடுகளை கட்டிக்கொடுப்பதில்லை. இந்த முறையில் வீடுக்கட்ட ஆசைப்படுபவர்கள் அழைத்து வரும் கொத்தருக்கு பயிற்சி கொடுக்கின்றோம். நன்றாக கட்டடம் கட்டத்தெரிந்த கொத்தனாரை அழைத்து வந்தால் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கின்றோம். அதன் மூலம் நீங்களே வீட்டை கட்டிக்கொள்ளலாம். ஃபெரோ சிமெண்ட் தொழில்நுட்பத்தில் ஒரு வாரத்தில் வீடு கட்டிவிடலாம். இந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் ஒரே குறைபாடு நாம் நினைத்த இடத்தில் சுவிட் பாக்ஸை வைக்க முடியாது'' என்றார்.

'பணம் கொட்டும் காளான் வளர்ப்பு நுட்பங்கள்' என்ற தலைப்பில் பேசிய முன்னோடி காளான் பண்ணையாளர் சேகரன், ''காளான் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான உணவு. அதிகமான அளவில் புரதசத்துக்கள் கொண்டது. காளான்களில் மொட்டுக்காளான், சிப்பி காளான், பால் காளான் போன்ற வகைகள் உள்ளன. இதில் மொட்டுக்காளான் வளர்ப்பதற்கு அதிகமான முதலீடுகள் தேவை. சிப்பி காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பதற்கு குறைவான முதலீடுகள் போதுமானது. இதில் சிப்பி காளான் வளர்ப்பதற்கு 22 முதல் 28 டிகிரி வெப்பம் தேவை. அதேபோல் காளான் வளர்ப்பு செய்வதற்கு 32 முதல் 35 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். சிப்பி காளான் பறித்த ஒருநாள், இரண்டு நாட்களுக்கு மேல் வைக்க முடியாது. ஆனால், பால் காளானை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

காளான் வளர்ப்பில் இறங்குபவர்கள் முதலில் விற்பனைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துக்கொண்டு, அதனை பற்றி தெளிவாக தெரிந்துக்கொண்டு இறங்க வேண்டும். அதோடு, காளான் வளர்ப்பையும் முறையாக செய்ய வேண்டும். இல்லையெனில் முன்னேற்றம் காண்பது கடினம். இன்றைக்கு ஒரு கிலோ காளான் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகின்றது'' என்றார்.

வீட்டுத்தோட்டங்களுக்கு தேவையான இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள் பற்றி விளக்கிய பயிற்சியாளர் பாண்டியன், ''உங்கள் வீடுகளில் மிச்சமாகும் காய்கறி மற்றும் உணவு கழிவுகளை உரமாக மாற்றலாம். பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால்... வீட்டில் இருக்கும் இஞ்சி, பூண்டு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அசைவம் சாப்பிடும் வீடுகளில் மீன் கழிவுகள் கிடைக்கும் அந்த கழிவுடன், வெல்லம் இட்டு மூடி 41 நாட்கள் வைத்திருந்தால் தரமான மீன் அமிலம் கிடைக்கும் அதை தண்ணீருடன் கலந்து தெளிக்கும் போது செடிகள் நன்றாக செழிப்பாக வளர்ச்சி அடையும்'' என்றார்.

-காசி.வேம்பையன்

படங்கள்: தே.சிலம்பரசன்

அடுத்த கட்டுரைக்கு