Published:Updated:

லாக்டௌனில் ஸ்ட்ரெஸ்ஸா... மனசைப் புத்துணர்வாக்க ஐந்து வழிகள்! #LetsRelieveStress

புத்துணர்வு ( freepik )

"கொஞ்ச நேரத்திற்கு எல்லாவற்றையும் 'பாஸ் (pause)' செய்துவிட்டு இந்தச் செயல்பாடு மாற்றங்களில் ஈடுபடலாம். மனம் லேசாகும்" #LetsRelieveStress

லாக்டௌனில் ஸ்ட்ரெஸ்ஸா... மனசைப் புத்துணர்வாக்க ஐந்து வழிகள்! #LetsRelieveStress

"கொஞ்ச நேரத்திற்கு எல்லாவற்றையும் 'பாஸ் (pause)' செய்துவிட்டு இந்தச் செயல்பாடு மாற்றங்களில் ஈடுபடலாம். மனம் லேசாகும்" #LetsRelieveStress

Published:Updated:
புத்துணர்வு ( freepik )

வீடு, அலுவலகம், பயணம், அனுபவம் எனக் கடந்துகொண்டிருந்த பலரின் நாள்களும் வராண்டா, வாசல்படி, மொட்டைமாடி எனக் கழிந்து கொண்டிருக்கின்றன லாக்டௌனில். 'வீட்டுல இருக்கிறது ஆரம்பத்துல 'ஹப்பாடா'னு இருந்தாலும், இப்போ இதுவே ஒரு ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. வீக் எண்ட் பகல்களை பிரியாணி, டிவியில் படம்னு ஜாலியா என்ஜாய் செய்த அதே வீட்ல, இப்போ லாக்டௌன் பகல்கள் எல்லாம் செம்ம போரா போகுது' என்று புலம்புகிறார்கள் மக்கள்.

கொரோனா
கொரோனா

'என்னதான் லாக்டௌன் தளர்த்தப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் இன்னும் சில நாள்களுக்கோ, மாதங்களுக்கோ வீட்டுக்குள்தான் இருக்க வேண்டி வரும்' என்ற நிலையில், லாக்டௌன் ஸ்ட்ரெஸ்ஸைத் தவிர்ப்பதற்கு மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்த் கூறும் சில வழிகள் இங்கே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இசையில் கரையுங்கள்!

"மூத்த தலைமுறை எம்எஸ்வி-யிலும், அடுத்த தலைமுறை ராஜாவிலும், இந்தத் தலைமுறை ஏஆர்ஆர், யுவனிலும் கரைந்துவிடுவது வாடிக்கை. லாக்டௌனில் வீட்டுக்குள் சச்சரவு, வொர்க் ஃப்ரம் ஹோம் பணிச்சுமை போன்ற சூழல்களில், ஒரு மினி மியூஸிக் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.

இசை
இசை

வீட்டுக்குள்ளேயே தனிமையான ஓர் இடத்துக்குச் சென்று, ப்ளே லிஸ்ட்டில் உள்ள பிடித்த பாடல்கள் ஒன்றிரண்டைக் கேட்டுவிட்டுத் திரும்புங்கள். மனம் கொஞ்சம் அமைதியடைந்திருக்கும். அதேபோல, நாள் முழுக்க கிச்சன் வேலைபார்த்துக் களைத்த பெண்கள், இரவு மொட்டைமாடி நிலவொளியில் பிடித்த பாடல்களை குறைந்தது அரை மணி நேரம் கேட்டுவிட்டுத் திரும்புங்கள். அந்த நாளின் பளுவெல்லாம் வடிந்து இதமாகும் இரவு.

கமான், டான்ஸ்!

நடனத்தில் நாட்டம் உடையவர்களைப் பெரும்பாலும் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் சூழ்ந்திருக்கும். காரணம், நடனம் என்பது உடற்பயிற்சியின் கலைவடிவம். எனவே, லாக்டௌனில் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உங்களுக்குள் இருக்கும் டான்ஸரைத் தட்டி எழுப்புங்கள்.

கமான், டான்ஸ்!
கமான், டான்ஸ்!

பிடித்த பாட்டை மொபைலில் ப்ளே செய்து, மனதார ஆடிக் களைத்துவிடுங்கள். மூச்சுவாங்கும்போது இதழில் தெறிக்கிற சிறிய புன்னகை சொல்லிவிடும், ஸ்ட்ரெஸ் லெவல் ஜீரோவாகியிருப்பதை. குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு ஆடினால், ஸ்ட்ரெஸ்க்கு பை பைதான்!

குக்கிங் பார்ட்னர்ஷிப்!

ரொம்ப 'போர்' ஆன ஒரு நாளில், அல்லது ரொம்ப இறுக்கமான ஒரு நாளில்... சட்டென கிச்சனுக்குள் நுழைந்துவிடுங்கள். ஆம்... ‘இன்னுமா தோசை வேகுது’ டைப் கேள்வியையெல்லாம் ஷிஃப்ட் அண்ட் டெலீட் செய்துவிட்டு, கிச்சனுக்குள் செல்லுங்கள். ஏதாவது ஓர் எளிய சமையல் செய்யுங்கள். சமையல் தெரிந்தவர்கள், கேக், கிரேவி என்று புகுந்து கலக்கலாம்.

டென்ஷன் ஃப்ரீ ஃபேமிலி
டென்ஷன் ஃப்ரீ ஃபேமிலி
freepik

உங்கள் கையால் சமைத்த உணவை நீங்கள் உண்பதோடு, வீட்டிலிருப்பவர்களும் 'வாவ்' சொல்லி உண்ணும்போது... மனதின் அழுத்தங்கள் எல்லாம் கரைந்து, ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ளும். 'நமக்கு மகிழ்ச்சி தருவதோடு மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு செயலைச் செய்யும்போது, அந்த மனநிறைவு ஸ்ட்ரெஸ்ஸைப் போக்கும்' என்கிறார்கள் உளவியலாளர்களும். சமைத்ததை அப்படியே பரிமாறவும் செய்தால்... 'லலலா...'தான்.

டைரியைப் புரட்டுங்களேன்!

குறைந்தபட்சம் 6 நிமிட வாசிப்புகூட நம்மை ஆற்றுப்படுத்த வல்லது என்கிறது ஓர் ஆய்வு. ஏற்கெனவே ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும்போது, ஆன்லைனில் வாசிப்பது கண்களுக்கு மேலும் எரிச்சல் கொடுக்கலாம் என்பதால், டிஜிட்டலைவிட, காகிதங்களைப் புரட்டும் வாசிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

புத்தகம் வாசிப்பது நல்லது
புத்தகம் வாசிப்பது நல்லது
freepik

இந்தியாவில் சராசரியாக ஒருவர் வாரத்துக்கு 10.42 மணிநேரம் வாசிப்பில் ஈடுபடுவதாய் 2017-ம் ஆண்டின் ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதேபோல, பழைய டைரியையும் புரட்டலாம். டைரி எழுத ஆரம்பிப்பதும், மனச்சோர்வுக்கு எல்லாம் வடிகாலாக அமையும். டைரி எழுதும் பழக்கமில்லாதவர்கள் இந்த லாக்டௌனிலிருந்துகூட அதை ஆரம்பிக்கலாம்.

பச்சை தரும் பேரானந்தம்!

நாம் வளர்க்கும் செடியில் முளைவிடும் இலைகள், பூக்கும் பூக்கள் எல்லாம் நமக்குத் தரும் ஆனந்தம் வேற லெவல். லாக்டௌனில் ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்கள், கார்டனிங்கில் ஆசுவாசம் பெறலாம். 'இப்போ எங்கே போய் செடி வாங்குறது', 'எங்க வீட்டில் அதற்கெல்லாம் இடமில்லையே' என்பவர்களுக்கு... இருக்கிறது எளிய தீர்வு.

ஹெல்த் & வெல்த்... பணத்தை மிச்சப்படுத்தும்  வீட்டுத் தோட்டம்!
ஹெல்த் & வெல்த்... பணத்தை மிச்சப்படுத்தும் வீட்டுத் தோட்டம்!

ஒரு தொட்டியையோ, பயன்படுத்தாத பிளாஸ்டிக் வாளியையோ எடுத்துக்கொள்ளுங்கள். மண்ணை நிரப்புங்கள். வெந்தயம், மல்லி என்று வீட்டில் உள்ள விதைகளை அதில் தூவி தினமும் தண்ணீர் தெளித்துவாருங்கள். சில நாள்களில் எட்டிப் பார்க்கும் அந்தக் குட்டி இலைகளை நீங்கள் பார்க்கும்போது... மூளைக்கு ஸ்பா செய்ததுபோல மனதை ரிலாக்ஸாக்கும். தொடர்ந்து, உங்கள் பராமரிப்பில் அது இன்ச் இன்ச் ஆக வளர்ந்து வருவதைப் பார்ப்பது உங்களுக்கு மிகுந்த புத்துணர்வு அளிக்கும்'' என்ற சித்ரா அரவிந்த்,

"இறுக்கமான அல்லது டென்ஷனான சூழலிலிருந்து நம் மனதை மீட்க, இந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்கள் உதவும். இவற்றை 'கோப்பிங் மெக்கானிசம்' எனலாம். ஒரு மனநிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறி நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு இது உதவும். மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை இதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்த்
மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்த்

மனச்சோர்வு தரும் சூழலை மாற்றிக்கொள்வதில், இரண்டு வகை உண்டு. செயல்பாடுகள் மாற்றம்(Behavior coping), மனதளவு மாற்றம்(Cognitive coping). ஒரு சூழலை நாம் விரும்பாதபோது, வேறு ஒரு செயலைச் செய்வதன்மூலம் அந்த விருப்பமற்ற சூழல் நம் மனதைப் பாதிப்பதைத் தவிர்க்கலாம். நடனம், பாட்டு கேட்பது போன்றவை 'பிஹேவியர் கோப்பிங்'. உதாரணமாக, வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலில், பணியில் அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் என்றால், கொஞ்ச நேரத்திற்கு எல்லாவற்றையும் 'பாஸ்(pause)' செய்துவிட்டு, ரிலாக்ஸ்டாக ஒரு பாட்டு கேட்டுவிட்டு வரலாம்.

இதுவே, மன அழுத்தம் மிகும் ஒரு சூழலில், அதற்கான காரணங்கள் என்ன என்று, நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விஷயங்களை ஆராய்ந்து, நெகட்டிவிட்டியைக் களைந்து, பாசிட்டிவிட்டியை அதிகரித்துக்கொள்ளவது, 'காக்னிட்டிவ் கோப்பிங்'.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

இதில் முக்கியமான விஷயம்... உடனடித் தீர்வு காண முடிகிற விஷயங்களுக்கு, 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்'களை நாடக் கூடாது. அம்மாவிடமோ, தங்கையிடமோ, தோழியிடமோ, துணையிடமோ சண்டைபோட்டால், 'ஸாரி' சொல்லி சமரசம் ஆகிவிட வேண்டும். அதை ஸ்ட்ரெஸ்ஸாக வளரவிட்டு, 'ஸ்ட்ரெஸ் ரிலீஃப்க்குப் பாட்டு கேட்கப் போறேன்' என்று கிளம்விடக் கூடாது.

ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பது நமக்கு ஒருவித டென்ஷனை ஏற்படுத்தலாம். ஊரடங்கிற்கு நாம் தனித்துத் தீர்வு கண்டிட முடியாதே. எனவே, லாக்டௌனில் அடுத்த முறை ஸ்ட்ரெஸ் மேலெழும்போது... பாட்டு முதல் தோட்டம் வரை ஐந்தில் ஒன்றை முயலுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்!