Published:Updated:

`கொரோனா பாதிப்பில் மதுரை கொட்டாம்பட்டி இளைஞர்?!'- வைரஸ் அறிகுறிகளுடன் தமிழகத்தில் 6 பேர் அனுமதி

கொரோனா சிறப்பு மையம்
கொரோனா சிறப்பு மையம்

நேற்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இந்த வைரஸ் பாதிப்பினால் 250-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 11,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வுகான் நகரில் தொடங்கிய வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி உலக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சிறப்பு மையம்
கொரோனா சிறப்பு மையம்

இந்தியாவைப் பொறுத்தவரை, கேரளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. `இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்புள்ள நபர்' என்ற அந்த அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட நிமிடம் தொடங்கி இப்போது வரை `தமிழகத்தில் கொரோனா பரவத்தொடங்கிவிட்டது' என்கிற ரீதியிலான பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன.

ஆனால், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்த 3,223 பேரை சோதனை செய்ததில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மருத்துவக் குழுவினர் ஆய்வுசெய்து கொண்டிருந்தனர்.

அப்போது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த தவமணி என்பவரின் மகன் அருண் (27) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது எனக் கூறப்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சுகாதார அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதற்கிடையே, தமிழகத்தில் ஒரு சீனர் உட்பட 6 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை, திருச்சி, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் 3 பேரும், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேரும் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரில் ஒருவர் சீனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைத் தீவிர சோதனையில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.

இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த தம்பதி ஒன்று தங்களது இரண்டு குழந்தைகளுடன் சமீபத்தில் கோவைக்கு வந்துள்ளனர். அவர்கள் நேற்று ஈஷா மையத்துக்குச் சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் சான்று கொண்டுவந்தால் அனுமதிக்கப்பதாக ஈஷா மையம் தரப்பில் தெரிவிக்க சான்றிதழுக்காக தனியார் மருத்துவனைக்கு சென்றுள்ளது அந்த தம்பதி.

மருத்துவமனை நிர்வாகம் இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்களை ஒருவாரம் பாதுக்காப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு