என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

''அழகுக்குக் காரணம் ஆறு லிட்டர் தண்ணீர்!''

தேவயானி 'பளிச்' ரகசியம்

##~##

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக... ஒரு குழந்தை!

கொஞ்சல் பேச்சும், பால்யம் மாறாத சிரிப்பும் தேவயானியை இன்னமும் குழந்தையாகவே நினைக்கத் தூண்டுகிறது. 'மலர்க்கொடி’யாக மலர்ந்து சிரிக்கும் தேவயானி, ''ஒரு நிமிஷம்கூட ஓய்வு இல்லாமல் என் ஜிம்மில் நான் பரபரப்பா இருப்பேன். அதான் என் ஃபிட்னெஸுக்குக் காரணம்!'' என்கிறார். ஜிம் என அவர் கைகாட்டும் இடத்தில் அவருடைய இரண்டு குழந்தைகளும் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். ''இவங்களைப் பராமரிக்கிறது 10 ஜிம்மில் பயிற்சி எடுக்கிறதுக்குச் சமம். பராமரிப்பு, விளையாட்டுனு குழந்தைகளுடன்தான் என் ஒவ்வொரு நாளும் கழியும். சீரியல், ஷூட்டிங்னு என்னதான் பரபரப்பா இயங்கினாலும், குழந்தைங்களை மிஸ் பண்ணவே மாட்டேன். அவங்களோட பேசுறது, சிரிக்கிறது, விளையாடுறது, சோறு ஊட்டுறதுன்னு ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சுச் செலவிடுவேன். குழந்தைங்களோட பேச்சுக்குத் தலையாட்டுறதே எனக்குப் பெரிய பயிற்சிதான். அதோட, வீட்டு வேலைகளையும் நானே இழுத்துப்போட்டு செய்வேன். பாத்திரம் தேய்க்கிறது தொடங்கி, சமையல் வரைக்கும் எந்த வேலையையும் விட்டுவைக்கிறது இல்லை. ஒரு நாளைக்குக் குறைஞ்சது 30 தடவையாவது மாடிப்படி ஏறி இறங்குவேன். இதைவிடப் பெரிய பயிற்சி ஏதாவது இருக்கா சொல்லுங்க!'' - பளீர் சிரிப்பில் பயிற்சிகளைப் பட்டியல் போடுகிறார் தேவயானி.

''அழகுக்குக் காரணம் ஆறு லிட்டர் தண்ணீர்!''

''உடல் பருமனுக்கு முக்கியக் காரணம், கட்டுப்பாடு இல்லாத உணவும், சோம்பேறித்தனமும்தான். மிதமாகவும் சுவையாவும் சாப்பிடுவதுதான் என் பழக்கம். நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்த்துட்டேன். நம்ம உடல் எந்த அளவுக்கு உழைக்குதுன்னு நமக்கு நல்லாவே தெரியும். அதுக்குத் தகுந்த மாதிரி சாப்பிடணும். அவசரகதியில் அள்ளிப் போட்டு சாப்பிடும்போதுதான், ஜீரணப் பிரச்னைகள் உண்டாகும். அதனால், சாப்பாட்டை ரசிச்சுச் சாப்பிடணும். அதன் சுவையில் நாம லயிக்கணும். பகல் நேரத் தூக்கம் பலரால் கைவிட முடியாத பழக்கம். ஆனா, எவ்வளவு அசதியா இருந்தாலும், நான் பகலில் தூங்கவே மாட்டேன். ஏதாவது ஒரு வேலை பண்ணிட்டே இருப்பேன். அதே நேரம், ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத் தூக்கம் என்பதில் உறுதியா இருப்பேன். கட்டிலில் படுக்கிற பழக்கமே கிடையாது. தரையில் உடம்பு முழுக்க அழுந்திப் படுத்தால், உடல் வலி வருகிற வாய்ப்பு குறைவு!''- ஆரோக்கிய மந்திரம் சொல்லும் தேவயானி, வாக்கிங் பயிற்சியை ரொம்பவே வலியுறுத்துகிறார்.

''ஆரோக்கியமா இருக்கணும்னு பலவிதப் பயிற்சிகளைப் பண்ணி, உடலை வருத்திக்க வேண்டியது இல்லை. மிதமான உணவுப் பழக்கம் முக்கியம். காலையில் கால் மணி நேரம் ட்ரெட் மில் பயிற்சி செய்வேன். எங்க ஏரியாவைச் சுத்தியே வாக்கிங் போவேன். கோயிலுக்குப் போறப்ப, பிராகாரத்தைப் பல தடவை சுத்தி வருவேன். குழந்தைகளை நானே ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போவேன். நடக்கிறப்பதான், நம்ம உடம்பு எல்லா விதத்திலும் சுறுசுறுப்பாகுது. மனசும் ரிலாக்ஸ் ஆகுது!

வீட்டு வேலைகளைவிட உடம்புக்கு சுறுசுறுப்பு கொடுக்கிற பயிற்சிகள் ஜிம்மில்கூட இருக்காது. ஆனால், இன்னிக்கு எத்தனை பேர் வீட்டு வேலைகளை விருப்பப்பட்டு செய்யறாங்க. டி.வி. சேனல் மாற்றக்கூட ரிமோட் வந்துடுச்சு. விரல்கூட நோகாத அளவுக்கு ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்தே எல்லா வேலைகளையும் முடிச்சிடுறோம். அப்புறம், ஜிம்முக்கு ஓடுறோம். வாழ்க்கையோட பின்னிப் பிணைந்திருந்த பயிற்சிகளைப் பிரிச்சுட்டு, வாழ்க்கை வேற, பயிற்சி வேறன்னு மாத்திக்கிட்டோம். நான், 'வாழ்க்கையே பயிற்சிதான்’னு நம்புறேன். வீட்ல வேலைக்கு ஆள் இருந்தாலும், 70 சதவிகித வேலைகளை நான்தான் செய்வேன். அதுவும் ரசித்து ரசித்துப் பண்ணுவேன். நாம சொன்னா, நம்ம உடம்பு நிச்சயம் கேட்கும். என் தம்பி நகுல் சினிமாவில் ஹீரோவா ஜெயிச்சே ஆகணும்கிற வெறியோடு ஒரே வருஷத்தில் 35 கிலோ வெயிட் குறைச்சான். நம்ம இலக்குக்குத் தக்கபடி பயிற்சிகளைச் செய்ய நாம தயங்கவே கூடாது!''

''அழகுக்குக் காரணம் ஆறு லிட்டர் தண்ணீர்!''

''முகத்தில் இன்னும் பால்யம் குறையாம எப்படிப் பராமரிக்கிறீங்க?''

''கலகலப்பு குறையாத சிரிப்புதான் என் முகப் பொலிவுக்குக் காரணம். எப்பவும் புன்னகைத்துக்கொண்டே இருக்க, கவலைகளை மனசுல தேக்கிக்கவே மாட்டேன். எந்தப் பிரச்னைக்கும் அஞ்சு நிமிஷம்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். அந்த நேரத்துக்குள் அதுக்குத் தீர்வை யோசிச்சுட்டு, அடுத்த நிமிஷம் சட்டுனு இயல்புக்குத் திரும்பிடுவேன். பேபி சோப் போட்டுத்தான் முகம் கழுவுவேன். அடிக்கடி முகம் கழுவுறது நல்லது. ஷூட்டிங் தவிர, வேறு எப்பவும் மேக்கப் போட மாட்டேன். புதுசா க்ரீம், ஆயில், சோப்னு எதையும் பரிசோதனை பண்ணிப் பார்க்க மாட்டேன். கூந்தலுக்குத் தேங்காய் எண்ணெய்... நேரம் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய் மசாஜ்... அவ்வளவுதான்! ரசாயனப் பொருட்களால் உண்டாகும் அழகு கொஞ்ச காலம்தான் நீடிக்கும். அதனால், முகத்துக்காகவோ, முடிக்காகவோ, பியூட்டி பார்லர் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டேன்!''- கணவர் ராஜகுமாரன் தோளில் சாய்ந்தபடி சொல்லும் தேவயானி, தனது ஸ்லிம் தேக ரகசியமும் பகிர்ந்துகொள்கிறார்.

''ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கணும்னு சொல்வாங்க. ஆனா, நான் ஒரு நாளைக்கு ஆறு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிப்பேன். சில நாட்களில் 10 லிட்டர் வரைகூடக் குடிப்பேன். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவுக்கு உடம்பு ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

அதனால, நிறையத் தண்ணீர் குடிங்க. குடிச்சுக்கிட்டே இருங்க!''- உதடு சுழித்து தேவயானி சொல்ல, ''இவங்க சரியான தண்ணி பார்ட்டி சார்!'' எனக் கிண்டல் அடிக்கிறார் ராஜகுமாரன்.

- இரா.சரவணன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்