Published:Updated:

இந்தியர்களில் 64% பேர் உடற்பயிற்சி செய்வதேயில்லை!- அதிர்ச்சி தரும் சர்வே ரிசல்ட்

இந்தியர்களில் 46 சதவிகிதம் பேர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே எங்களின் நோக்கம் எனக் குறிப்பிட்டிருந்தாலும், அவர்களில் 37சதவிகிதம் பேர் மட்டுமே உடற்பயிற்சி செய்கிறார்கள் என்பது அதிர்ச்சி...

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

"சமீப காலமாக இந்தியர்களுக்கு, தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இளையதலைமுறையினர்களில் பலர் சிக்ஸ்பேக் சிங்கங்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் உடற்பயிற்சி நிலையங்களுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள்" என்றெல்லாம் ஜிம் பயிற்சியாளர்கள் சொல்லிவரும் வேளையில், சந்தைப் புலனாய்வு நிறுவனங்களில் ஒன்றான மைன்டெல், இந்தியர்களில் 64 சதவிகிதம் பேர் உடற்பயிற்சி செய்வதில்லை என்கிற அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

இந்த சர்வே 18 வயதுக்குமேல் உள்ள 3,000 இந்தியர்களை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 46 சதவிகிதம் பேர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே எங்களின் நோக்கம் எனக் குறிப்பிட்டிருந்தாலும், அவர்களில் 37 சதவிகிதம் பேர் மட்டுமே உடற்பயிற்சி செய்கிறார்கள் என்பது அதிர்ச்சிதருவதாக அமைந்திருக்கிறது. 31சதவிகிதம் பேர், அதற்கு எங்களுக்கு நேரமில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

67 சதவிகிதம் பேர் நடைப்பயிற்சி மாதிரி சாதாரண பயிற்சிகளையும், 26 சதவிகிதம் பேர் யோகா, பைலெட்ஸ், கிராஸ்ஃபிட் , 11சதவிகிதம் பேர் கார்டியோ மற்றும் குழு விளையாட்டுகளில் பங்கெடுக்கிறோம் என்றும், 10 சதவிகிதம் பேர் புஷ்-அப், புல்-அப் மாதிரியான பயிற்சிகளையும், ஸ்கூவாட்ஸ் போன்ற கடினமான பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஜிம் மற்றும் பயிற்சிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால், சாதாரணமான உடற்பயிற்சிகளைத் தாமாகச் செய்துவருவதாகவும் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.