Published:Updated:

69 பேருக்குக் கொரோனா நெகட்டிவ்... அலோபதியும் சித்த மருத்துவமும் இணைந்ததன் வெற்றி!

கொரோனா
கொரோனா

நான்கு நாள்களில் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்ததை மூன்று நாள்களாகக் குறைக்கும் வகையில் முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் சித்த மருந்துகளால் குணமடைந்து வீடு திரும்பிய செய்திகளைக் கேள்விப்படுகிறோம். உலகமே கொரோனாவுக்கான தீர்வைக் கண்டறிய முடியாமல் திணறி வரும் சூழலில் சித்த மருத்துவ முறைகளுக்குக் கட்டுப்படுகிறதா கொரோனா வைரஸ் என்ற கேள்வியும் ஆச்சர்யமும் எழுகிறது.

Traditional medicine
Traditional medicine

இந்த நோயின் பிறப்பிடமான சீனாவில் நோய் கட்டுப்படுத்தப்பட்டதற்கு அந்நாட்டு பாரம்பர்ய மருத்துவத்துக்கும் முக்கியப் பங்குள்ளதாக தொடர்ச்சியாகக் கூறப்படுகிறது.

சென்னையில் அலோபதி மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் கொடுத்ததன் பேரில் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் நிரம்பியதைத் தொடர்ந்து 60 நோயாளிகள் சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளுடன் ஏற்கெனவே தமிழக அரசு அனுமதித்துள்ள கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் உள்ளிட்ட கஷாயங்கள் கொடுக்கப்பட்டன. அதனுடன் சிறப்பு சித்த மருத்துவ டயட்டும் வழங்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார கமிஷனின் இயக்குநர் மருத்துவர் செந்தில்ராஜின் பரிந்துரையின் பேரில் சித்த மருத்துவர் வீரபாபு இதனை வழங்கியிருக்கிறார்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக முயன்று வருகிறோம்
சித்த மருத்துவர் வீரபாபு

இது தொடர்பாக சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்:நோயாளிகளுக்குக் காலை எழுந்தவுடன் கபசுரக் குடிநீர், காலை உணவாகக் கறிவேப்பிலை இட்லி, கொள்ளு துவையல், முட்டை, அதிமதுரம், சித்தரத்தை உள்ளிட்ட மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட தேநீர் வழங்கப்பட்டன.

11 மணியளவில் தூதுவளை சூப், மதிய உணவாக ஆவாரம் பூ சாம்பார், கற்பூரவல்லி ரசம், பூண்டு குழம்பு, ஏதாவது காய்கறியில் செய்யப்பட்ட கூட்டு அல்லது பொரியல் வழங்கப்படும். மாலை 3.30 மணிக்குத் தேநீர் மற்றும் நவதானிய சுண்டல் வழங்கப்பட்டன.

Veerababu
Veerababu

இரவு உணவு எளிதில் செரிக்க வேண்டும் என்பதற்காக மூலிகைகளை சற்று குறைத்துவிட்டு இட்லி, தோசை போன்ற எளிய உணவுகள் மற்றும் கசாயம் வழங்கப்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாள்கள் அவர்களுக்கு இந்த உணவுமுறை பின்பற்றப்பட்டது. ஐந்தாம் நாள் 15 பேருக்குப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்குக் கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்தது.

immunity boosting food
immunity boosting food

இதனையடுத்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அடுத்தடுத்த நாள் செய்யப்பட்ட பரிசோதனைகளில் முதலில் அனுமதிக்கப்பட்ட 60 பேர், அதற்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட 9 பேர் என மொத்தம் 69 பேருக்கும் முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தது. இதனையடுத்து அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

நான்கு நாள்களில் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்ததை மூன்று நாள்களாக குறைக்கும் வகையில் முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்திய மருத்துவ முறை ஆணையமும் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் இணைந்து கூடுதல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் திட்டமிட்டு வருகின்றனர். தமிழக சுகாதாரத் துறையால் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 மருத்துவக் குழுவில் சித்த மருத்துவர் வீரபாபுவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

Siddha medicine
Siddha medicine

மேலும் கொரோனாவின் லேசான அறிகுறிகள் மற்றும் பாதிப்புடன் இருப்பவர்களுக்கு அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே அனுமதித்து சித்தமருந்துகளை மட்டுமே கொடுத்து குணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நியூயார்க்கில் `ட்ரம்ப் மரண கடிகாரம்’ - கொரோனா விவகாரத்தில் அதிபரை விமர்சித்த இயக்குநர்
அடுத்த கட்டுரைக்கு