Published:Updated:

ஆரோக்கியமான பற்களுக்கு, ஏழு ஆலோசனைகள்!

Dental care
Listicle
Dental care

பற்களை முறையாகப் பாதுகாப்பது எப்படி, பல் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து எளிய வழிகளைப் பரிந்துரைக்கிறார் பல் மருத்துவர் ஞானம் செந்தில்குமரன்.


பற்பசை நிறுவனங்கள் யாவும் `உங்க டூத் பேஸ்ட்ல இது இருக்கா, அது இருக்கா' எனத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. என்றாலும், பற் சுகாதாரம் மீதான நம்முடைய அலட்சியங்கள் நீங்கிவிட்டனவா, பல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பெறத் தொடங்கிவிட்டோமா என்றால் கேள்விக்குறிதான்.

வீட்டுக்கு வாசல் எப்படியோ, அப்படித்தான் உடலுக்கு வாய். முறையாகப் பராமரிக்காமலிருப்பதென்பது, நோய்களை விலைகொடுத்து வாங்குவதற்குச் சமம். பெரும்பாலான நேரங்களில் கிருமிகள் மற்றும் தொற்றுகளுக்குமான நுழைவுவாயிலாகவும் இருக்கிறது வாய்.

`தூய்மையான பற்களுக்கு, தினந்தோறும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்' - இது அனைவரும் அறிந்த தகவல்தான். ஆனால், எத்தனை பேர் நம்மில் அதை முறையாகப் பின்பற்றுகிறோம்? இந்திய பல் மருத்துவர்கள் சங்கம், 2016-ம் ஆண்டு இந்தியர்களிடம் பற்கள் மீதான அக்கறை எந்தளவுக்கு உள்ளது என்பது குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் 95 சதவிகித இந்தியர்கள் ஈறு பிரச்னைகளால் அவதிப்படுவதாகக் கூறியிருந்தனர். இதன் பின்னணியில் இருப்பது, அலட்சியமன்றி வேறில்லை.

பற்களை முறையாகப் பாதுகாப்பது எப்படி, பல் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து எளிய வழிகளைப் பரிந்துரைக்கிறார் பல் மருத்துவர் ஞானம் செந்தில்குமரன்.

"பற்கள் தொடர்பான பிரச்னைகளை உதாசீனப்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட, தற்போது குறைவுதான். விழிப்புணர்வுகள் ஓரளவு அதிகமாகி இருக்கிறது. சிக்கல் என்னவென்றால், சிகிச்சையைத் தாமதப்படுத்தாமல் இருப்பதில் காட்டும் அக்கறையை, பிரச்னையை முன்கூட்டியே தடுப்பதற்கான முயற்சியில் காட்டுவதில்லை.

பல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, `இன்றைக்குச் செய்துவிட்டேன், அதனால் நாளைக்குச் செய்ய மாட்டேன்' என்ற மனநிலையில் இருக்கவே கூடாது. பல் துலக்கும் ஒவ்வொரு முறையும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான பற்களுக்கு, அவசியம் பின்பற்ற வேண்டிய ஏழு செயல்முறை திட்ட ஆலோசனைகள் இதோ.


1
Dental Floss

டென்டல் ஃப்ளாசிங்

இன்று பலரும் எதிர்கொள்வது, ஈறு தொடர்பான பிரச்னைகளைத்தான். தினமும் பல் துலக்கிய பிறகு, டென்டல் ஃப்ளாசிங் முறை மூலமாக, பற்களுக்குள்ளான இடைவெளியைச் சுத்தம் செய்து வந்தாலே, ஈறு ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளலாம். கண்ணாடி முன் நின்று பல் துலக்குவதன் மூலம், முழுமையாக ஃப்ளாசிங் உபயோகப்படுத்தினோமா இல்லையா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2
Dental care

வருஷம் ஒருமுறை டாக்டர் விசிட்

ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து, பற்களை முழுமையாகப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், வருடம் ஒருமுறையாவது பல் மருத்துவரை அனுகுவது கட்டாயம். பலரும் சுய மருத்துவ முறையில், பற்களைச் சுத்தம் செய்துகொள்ள முயல்வதுண்டு. எலுமிச்சை - தேன் முதல் ஜெல் வரை பல்வேறு பொருள்களை அதற்கு அவர்கள் உபயோகிப்பார்கள். இவையாவும் பல் எனாமலின் அரிப்புக்கு வழிவகுக்கும்.


3
Dental care

நிறம், ஆரோக்கியத்தின் அடையாளமல்ல

பற்களின் நிறமென்பது, அதன் ஈறுப்பகுதியின் நிறத்தைப்பொறுத்தே அமையும். ஈறுகளின் நிறம், நபருக்கு நபர் மாறுபடும் என்பதால் `இந்த நிறத்தில் இருந்தால்தான், பல் ஆரோக்கியமாக உள்ளது' என்று புரிந்துகொள்ள வேண்டாம். இப்படியானவர்கள், பல் மருத்துவரை ஆலோசிக்கும்போது, `உங்களின் ஈறுகள் ஆரோக்கியமாக உள்ளனவா' என்பதை உறுதிசெய்துகொண்டால் மட்டும் போதுமானது. நிறம், ஆரோக்கியத்தின் அடையாளமல்ல. நிறம் எனக்கு சங்கடத்தைத் தருகிறது என்பவர்கள், எந்தச் சூழலிலும் நிறத்தை மாற்றுவதற்கு, சுய மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டாம்.


4
Dental care

அலட்சியம் கூடாது

ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்களில் வெள்ளைத்திட்டுகள் அல்லது கரும்புள்ளிகள் போன்ற பல் தொடர்பான எந்த பிரச்னையையும், உதாசீனப்படுத்திவிட வேண்டாம். முதல் நிலையிலேயே குறிப்பிட்ட பிரச்னையைச் சரிசெய்வதன் மூலமாக, பின்னாள்களில் பல பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக, இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை உறுதிசெய்யலாம். செயற்கை பல் வரிசை பொறுத்தியிருப்பவர்கள், லேசான எரிச்சல் அல்லது அசௌகர்ய உணர்வு ஏற்பட்டால்கூட உடனடியாக மருத்துவரை நாடவும்


5
Dental care

நா தூய்மை கட்டாயம்!

டூத் பிரஷ் வகைகள் அனைத்திலும், அதன் பின்புறம் சற்று சொரசொரப்பாக இருப்பதைக் காணலாம். பல் துலக்கும்போது, அந்த சொரசொரப்பான பகுதியைக் கொண்டு நாவைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இது பொருந்தும்.


6
Dental care

ஈறுகளுக்குத் தேவை மசாஜ்

பல் துலக்கி முடித்தபின், விரலைக் கொண்டு ஈறுகளுக்கு மசாஜ் கொடுத்து வர வேண்டும். இப்படிச் செய்யும்போது வாயின் எந்தப் பகுதியில் அசௌகர்யம் ஏற்பட்டாலும், மருத்துவரை நாட வேண்டும். ஈறுகள்தான் அனைத்துக்கும் அடிப்படை என்பதால், அவற்றின் ஆரோக்கியத்தை இப்படி உறுதிசெய்துகொள்வது, எந்தவொரு பிரச்னையையும் முதல் நிலையிலேயே கண்டறிய முடியும்.


7
Dental care

டூத் பேஸ்ட் - எது பெஸ்ட்?

டூத் பேஸ்ட்டைப் பொறுத்தவரை, ஃப்ளோரைட் ரசாயனம் கொண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது சிறப்பு. இது மட்டுமே பல் ஆரோக்கியத்துக்கான அத்தியாவசியமான சத்து என்பதால், கவனம் தேவை. 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன பேஸ்ட் உபயோகிக்கலாம் என்பதை, மருத்துவ ஆலோசனைக்குப் பின் முடிவு செய்யவும்.

ஞானம் செந்தில்குமரன், பல் மருத்துவர்

பல் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்ளாதபட்சத்தில் உடலின் உள்ளுறுப்புகள் பலவற்றிலும் பாதிப்பு ஏற்படும். குழந்தைப் பருவத்திலிருந்தே, பல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருந்து வந்தால், பல்வேறு உடல் உபாதைகளை நம்மால் தவிர்க்க முடியும். அந்தவகையில், `பற்கள் சுத்தமின்றி இருப்பது, உடல் நலச் சிக்கல்களின் வெளிப்பாடு' என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டியது, பெற்றோரின் கடமை."