Published:Updated:

போதைப்பொருள் எடுக்கத் தூண்டுதல் ஏற்பட்டால், இந்த 7 செயல்களையும் செய்யுங்கள்!

`அடிமையானவர்களை மீட்பது மட்டுமல்ல, யாரும் அடிமையாகிவிடாமல் பார்த்துக் கொள்வதும் எங்கள் கடமைதான்!' - பகிரும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரி வெங்கடேஷ் பாபு #NationalAntiDrugAddictionDay

Drug Addiction
Drug Addiction

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், இதே அக்டோபர் 2-தான் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நாளாகவும் கொண்டாடப்படுகிறது. காந்தி, தன் வாழ்நாளில் போதைப்பொருள்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தததை முன்னிட்டு, அவரின் பிறந்தநாளை போதைப்பொருள் எதிர்ப்பு நாளாகவும் கொண்டாடி வருகிறது மத்திய அரசு. போதைப்பொருள் உபயோகத்தை இந்தியாவிலிருந்து முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்பதே இந்த நாளுக்கான நோக்கமாக இருக்கிறது.

National Anti-Drug Addiction Day
National Anti-Drug Addiction Day

போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் குறித்து போதைப் பொருள் தடுப்பு அதிகாரி வெங்கடேஷ் பாபுவிடம் பேசினோம்.

"போதைக்கு அடிமையாகும் நபர்களில், பெரும்பாலானவர்கள் தங்களுடைய பத்து முதல் பதின்மூன்று வயதுக்குள்ளாகவே தங்களுடைய முதல் போதைப் பொருளை எடுத்துக்கொள்கின்றனர். முதல் நிலையில் சிகரெட் அல்லது பீடி, தொடர்ந்து அதன் மூலமாக கிடைக்கும் தொடர்புகள், அடுத்தது மதுப்பழக்கம், தொடர்ந்து கஞ்சா என அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்கின்றனர்.

National Anti-Drug Addiction Day
National Anti-Drug Addiction Day

சில மருந்துகளை, அளவுக்கு மீற எடுக்கும்போது போதை உணர்வைத்தரும். மருத்துவப் பரிந்துரையின்றி, சுயமாக அவற்றை எடுத்துக்கொண்டு, அதனால் பதின்பருவத்திலேயே போதைக்கு அடிமையானவர்களையும் நாங்கள் பார்க்கிறோம். அந்த உரிமையில்,பெற்றோருக்கும அரசுக்கும் முக்கியமானதொரு கோரிக்கையை வைக்க விரும்புகிறோம்.

National Anti-Drug Addiction Day
National Anti-Drug Addiction Day

* அரசு, பதின்பருவ குழந்தைகளின் பாடத்திட்டத்திலேயே போதைப் பொருள் விழிப்புணர்வை உள்நுழைக்க வேண்டும்.

* பத்து வயது தொட்ட அத்தனைப் பிள்ளைகளிடமும், அவரவரின் பெற்றோர் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து வீட்டில் பேச வேண்டும்.

`நாம் பேசினால்தான் போதைப்பொருள் குறித்து அவர்களுக்குத் தெரிய வரும்' என்றெண்ணி பெற்றோர் பலரும் பேசத் தயங்குகின்றனர். உண்மையில், இன்றைய குழந்தைகளுக்கு அனைத்துமே தெரிந்திருக்கிறது. அனைத்துமே அரைகுறையாகத் தெரிந்திருக்கிறது என்பதுதான் இங்கு பிரச்னை. பதின்பருவத்தில் ஏற்படும் தடுமாற்றத்தின் ஒருபகுதியாக, முதல்முறையாக போதைப் பொருளை முயல்கின்றனர் அவர்கள்.

பதின்பருவத்தினரைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக மூன்று முதல் நான்கு முறை ஒரு போதைப்பொருளை எடுத்துக்கொண்டாலும் கூட, குறிப்பிட்ட அந்தப் பொருளுக்கு அவர்கள் அடிமையாகிவிடுவார்கள்.

அடிமையாகிவிட்டால், அதிலிருந்து அவர்களை மீட்பது கடினம். மீட்டுவிடலாம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை, மீட்கும் நிலை வரும்வரைகூட எந்தக் குழந்தையையும் நாம் செல்லவிடக்கூடாது.

முதல் நிலையிலேயே விஷயத்தைக் கண்டறிந்து, பிரச்னையை சரிசெய்ய முயலவேண்டும். அதெப்படி செய்வது? அந்தக் குழந்தையிடம் பெற்றோர் அமர்ந்து பேச வேண்டும். இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது, எப்படித் தொடர்கிறது என்பதையெல்லாம் அவர்களிடம் கேட்டறிந்து தெரிந்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அவற்றைத் தடுக்க வேண்டும். அனைத்துக்கும் முதலாக, குழந்தையிடம் போதைப்பொருள் ஏற்படுத்தும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும். கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும், ரத்த அழுத்தப் பிரச்னைகள், இதயப் பிரச்னைகள் போன்றவை குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்கள், பதற்றம், மன அழுத்தம், மறதி பிரச்னைகள் குறித்து சொல்ல வேண்டும். மீட்பாளர்கள், மனநல ஆலோசகர்கள் உதவியுடன் குழந்தையை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.

National Anti-Drug Addiction Day
National Anti-Drug Addiction Day

போதைப் பொருளுக்கு குழந்தைகள் அடிமையான பிறகுதான் இவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமென்றில்லை. போதைப் பொருள் குறித்து அறியாதவர்களுக்கும்கூட, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்த வகுப்புகளைப் பெற்றோரும் ஆசிரியரும் எடுக்கலாம்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால் அன்றாட வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது. நடத்தை தொடர்பான மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு, படிப்பில் கவனம் குறையத் தொடங்கும். `பதின்பருவத்தில் நடத்தை மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான்' என நினைத்துக் கொண்டு பல பெற்றோர் இதைக் கடந்துவிடுவர். அது தவறு. குழந்தையிடம் எந்த மாற்றம் தெரியவந்தாலும், அதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை பெற்றோர் எடுக்கவேண்டும்

Drug Addiction
Drug Addiction

மீண்டு வந்த குழந்தைகள் பலரும், சமூகத்தில் தங்களுக்கென புதுவாழ்க்கை ஒன்றைத் தொடங்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் பல நேரத்தில் சமூகம் அவர்களுக்கு இயல்பான வாழ்க்கையைத் தர மறுத்துவிடுகிறது. உண்மையில், போதைப்பொருள்களுக்கு அடிமையான ஒருவர், குற்றவாளியல்ல. அவரொரு நோயாளி என்பதைச் சமூகத்தில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

போதைப்பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும்போது, அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து, `National Health Portal' முக்கியமான 7 ஆலோசனைகளை முன்வைக்கிறது. அவை :

Drug Addiction
Drug Addiction

* தூண்டுதல் ஏற்படும்போது, தனிமையில் இருக்க வேண்டாம். நம்பிக்கைக்குரிய யாரேனும் ஒருவரை எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும். நீங்களே நிலை தடுமாறினாலும், அந்த மற்றொரு நபர் உங்களுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

* எந்தவொரு தூண்டுதலும், சில நிமிடங்களுக்கானதுதான். அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்களுக்கு உங்கள் கவனத்தை வேறு ஏதேனும் விஷயத்தின் மீது செலுத்துங்கள். அதற்குள் தூண்டுதல் நின்றுவிடும்.

* தூண்டுதல் ஏற்படும்போது, நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மூச்சுப்பயிற்சியை ஆழமாகச் செய்யுங்கள்.
Vikatan

* தியேட்டர், பூங்கா போன்று போதைப்பொருள்கள் உபயோகிக்ககூடாத பொது இடங்களுக்கு சென்று அங்கு நேரம் செலவிடுங்கள் (Tobacco Free Zone).

* வேறு ஏதேனுமோர் உணவுப்பொருளைச் சாப்பிடத் தொடங்குங்கள். பெருஞ்சீரகம், கிராம்பு போன்றவை முற்றிலும் வேறொரு சுவையைக் கொண்ட உணவாக அது இருந்தல் நல்லது.

* ஒவ்வொரு முறை போதைப்பொருள் வாங்க வேண்டுமெனத் தோன்றும்போதும், அதற்காகச் செலவிடும் தொகையை உண்டியலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக அவற்றை எண்ணி, எண்ணிப் பாருங்கள்! அந்தப் பணத்தில் வெகு நாள்களாக வாங்க நினைக்கும் மனதுக்கு நெருக்கமான ஏதேனுமொரு பொருளை வாங்கிக் கொள்ளுங்கள்.

* உங்களுக்கு எந்தெந்தச் சூழலிலெல்லாம் தூண்டுதல் அதிகமாகின்றது என்பதைக் கண்டறிந்து அந்தச் சூழல்களைத் தவிர்க்கப் பாருங்கள். கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தோன்றும்போது, தயங்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சரியாக உட்கொள்ளுங்கள்.