Published:Updated:

செல்போனே, தள்ளிப் போ!

- ஓர் அபாய அறிவிப்பு

செல்போனே, தள்ளிப் போ!

- ஓர் அபாய அறிவிப்பு

Published:Updated:
செல்போனே, தள்ளிப் போ!

செல்போன் டவர்களில் இருந்து பரவும் மின்காந்த அலைகளால், சிட்டுக் குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் பதறுகிறார்கள். 'சிட்டுக் குருவிகளுக்கு மட்டுமல்ல... இதனால் பொதுமக்களுக்கும் அபாயகரமான நோய்கள் உண்டாகலாம்!’ என்ற இன்னோர் அணுகுண்டை வீசுகிறார்கள், உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானிகள்! 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.நா. உலக சுகாதார அமைப்பின் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மே 26 தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை எட்டு நாள் மாநாடு ஒன்றை பிரான்ஸில் நடத்தியது. 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் புற்று நோய் தடுப்பு குறித்தும் அதற்கான நவீன சிகிச்சைகள் குறித்தும் விவாதங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எடுத்து வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில்தான், 'செல்போன் பயன்படுத்துவதால் மூளைப் புற்று நோய் வரலாம்’ என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டு அதிரவைத்து இருக்கிறார்கள்.

தினமும் அரை மணி நேரம் செல்போனில் பேசுகிறவர்களிடம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட

செல்போனே, தள்ளிப் போ!

ஆய்வுகளின் அடைப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகச் சொன்ன விஞ்ஞானிகள், ''புற்று நோய் வரலாம் என்பது எச்சரிக்கைதானே தவிர இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், சமீபகாலமாக மூளைப் புற்று அதிகரித்து வருவதற்கு செல்போன் உபயோகிப்பதற்கும் தொடர்பு இருக்கலாம்...'' என்று சொல்கிறார்கள்.

இதுகுறித்து மதுரை அப்போலோ மருத்துவமனையின் புற்று நோய் மற்றும் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் அமர்நாத்திடம் பேசினோம். ''வாகனப் புகை, சிகரெட் புகை, தொழிற்சாலை நச்சு போன்றவை போலவே, செல்போன்களில் இருந்து பரவும் மின் காந்த அலைகளும் நமது உடலில் நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும். அது மூளைப் புற்றாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இன்னும் ஆய்வுகள் முழுமையடையவில்லை. அநேகமாக ஜூலை மாதத்தில் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகலாம்.

கதிரியக்கத்தின் அளவுக்கு இல்லை என்றாலும்கூட, மின் காந்த அலைகள் நமது உடலின் மரபணுக்களுக்கு பாதிப்புகளை உண்டாக்குகிறது. குறிப்பாக மின்காந்த அலைகளானது, நமது மூளையில் உள்ள மரபு அணுக்களைத் தாக்குகிறது. இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தால்... மூளைப் புற்று கட்டாயம் வந்துவிடும். செல்போனை அதிகநேரம் காதில் வைத்துப் பேசுவதால் காது நரம்புகளிலும் ஒரு வகையான கட்டி உருவாகலாம். இது சாதாரணக் கட்டியாகவும் இருக்கலாம்... கேன்சராக மாறவும் வாய்ப்பு உண்டு.

செல்போன்களை அதிகம் பயன்படுத்தும் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. அதனால் தாம்பத்ய உறவு பாதிக்காது என்றாலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படியே பிறந்தாலும் ஊனமாக இருக்க வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு கருச்சிதைவு வாய்ப்பும் உண்டு!'' என்று அதிர வைத்தார்.

செல்போனே, தள்ளிப் போ!

அவரே தொடர்ந்து, ''அமெரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ச்சியடைந்த

செல்போனே, தள்ளிப் போ!

நாடுகளில், ஒரு பொருளால் பாதிப்பு ஏற்படுவது உறுதியாகத் தெரிந்தால், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்பு உணர்வு பிரசாரங்களையும் முடுக்கிவிடப்படுகிறது. இந்த விஷயத்தில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவு களுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நம் நாட்டிலும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு இன்ஸ்டிட்யூட்டில் இதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. செல்போன் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்தாலும் நம்முடைய இண்டியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் அமைப்பு, 'உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறித்து இந்தியாவில் யாரும் அச்சப்படத் தேவை இல்லை. உடற்கூறுகளில் இந்தியர்களுக்கும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருப்பதால் அங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது. நம் நாட்டின் ஆராய்ச்சி முடிவுகள் வந்தால்தான் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்கிறார்கள். இது இந்திய செல்போன் வியாபாரத்தை பாதித்துவிடக் கூடாது என்பதற்காகச் சொல்லப்படும் கருத்தாகவே தெரிகிறது.

உலகம் முழுவதும் 5 பில்லியன் மனிதர்களின் கைகளில் செல்லப் பிள்ளையாய் இருக்கிறது செல்போன். அதிலும், இந்தியர்கள்தான் அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். புற்று நோய் குறித்த தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், நம்மை நாமே காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இப்போதே இறங்குவது நல்லது. செல்போன்களை எப்போதும் உடம்புடன் ஒட்டியே வைத்திருக்க வேண்டியது இல்லை. அதிகநேரம் பேசுவதைத் தவிர்க்கலாம்... அவசியம் ஏற்பட்டால் ஹெட் போன்களை பயன்படுத்தலாம். தூங்கும் நேரத்தில், தலையணைக்கு அருகில் செல்போன் வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்!'' என்று ஆலோசனையும் தருகிறார்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால்... செல்போனை தேவைக்கு 'மட்டும்’ பயன்படுத்தித் தள்ளி வைப்போமே!

- குள.சண்முகசுந்தரம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism