Published:Updated:

இது மருத்துவ முறை அல்ல... வாழ்க்கைமுறை!

இது மருத்துவ முறை அல்ல... வாழ்க்கைமுறை!
இது மருத்துவ முறை அல்ல... வாழ்க்கைமுறை!

'வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும்' என்று ஆரோக்கியமான வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கும் 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மருத்துவ முறை ஆயுர்வேதம்.  

வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உடல்நலம், ஆரோக்கியம். இவை இரண்டுக்கும் அடிப்படை வாழ்க்கைமுறை. எனவே, ஆயுர்வேதம் என்பது மருத்துவம், சிகிச்சையோடு நின்றுவிடாமல், வாழ்க்கைமுறையும் கற்றுத் தந்தது. ஓர் ஆயுர்வேத வைத்தியர், இன்னொரு வைத்தியருக்கு கற்றுத்தரும் விஷயமாக அல்லாமல், மக்கள் மருத்துவமாக இருந்தது ஆயுர்வேதம். `பாட்டி வைத்தியம்’ என்ற பெயரில் நம்முடைய மூதாட்டிகள் சர்வசாதாரணமாகச் சொல்லும் மருத்துவக் குறிப்புகள்கூட ஆயுர்வேதத்தின் ஓர் அங்கமே.   

இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கும் மூலிகைப் பொருட்களையும், நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களையும் கொண்டு சிகிச்சை அளிக்கக்கூடியது ஆயுர்வேத மருத்துவ முறை. இன்றைய அவசர வாழ்க்கை முறையில், இதை விட்டுவிட்டு, அநியாயத்துக்குப் பணத்தைக் கொடுத்து, மெடிக்கல் ஷாப்புகளில் புரியாத பெயரில்  கண்ட மருந்துகளை வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

மேலும் குளிக்கும் சோப்பிலும், பல்துலக்கும் டூத் பேஸ்ட்டிலும் வேம்பு, உப்பு, சாம்பல் இருக்கிறதா எனப் பார்க்கும் நம் கண்களுக்கு வீட்டருகே உள்ள மரங்கள் தெரிவதில்லை. ஆரோக்கிய சமையலின் ரகசியமாக இருந்த அஞ்சறைப்பெட்டிகூட இப்போதைய தலைமுறையினக்குத் தெரிவதில்லை. இஞ்சி, பூண்டு போன்ற மருத்துவ குணம்கொண்ட பொருட்கள் பேஸ்ட் வடிவில் கிடைக்கின்றன. அதேபோல,  உலக்கை, அம்மியை உபயோகித்த கடைசித் தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இவற்றையெல்லாம் அருங்காட்சியகத்தில்தான் பார்க்கப்போகிறது அடுத்த தலைமுறை.

ஆயுர்வேதம்... வரலாறு!

இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. குறிப்பாக அதர்வண வேதத்தில் ஓர் உட்பிரிவாக அடங்கியிருக்கிறது ஆயுர்வேதம்.  

ஆயுர்வேதம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. சிந்துச் சமவெளியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு இன்னதென அறியாத நோய்கள் ஏற்பட்டபோது, இமயமலையில் வாழ்ந்த ரிஷிகள் கவலையுற்று, மக்களைக் காப்பாற்ற தேவலோகம் சென்று நோய்களுக்கான மருத்துவ முறைகளைக் கற்றுவர முடிவெடுத்தனர். அதன்படி பரத்வாஜ முனிவரைத் தேர்வுசெய்து, கடவுளிடம் அனுப்பிவைத்தாகவும், அவர் கற்றுவந்த முறையே ஆயுர்வேதம் என்கிறார்கள். அதாவது, கடவுளிடம் மனிதன் கற்ற மருத்துவமுறைதான் ஆயுர்வேதம். பரத்வாஜருக்கு மகாவிஷ்ணுவே தன்வந்திரியாக அவதாரம்  எடுத்து, ஆயுர்வேதத்தை அருளியதாகவும் கருத்து உள்ளது.

இந்தியாவில் புராதன காலத்தில் வாழ்ந்த சரகர், சுஸ்ருதர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைச்சிறந்து விளங்கியவர்கள் என்று கூறப்படுகிறது. இப்படி நீண்டகால வரலாறு கொண்ட இந்த மருத்துவ முறை இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்காசிய நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றதாக இருந்தது. ஆனால் நம் நாட்டில் பிரிட்டிஷ்காரர்கள் வருகைக்குப் பிறகுதான் ஆயுர்வேத மருத்துவம், தன் செல்வாக்கை இழந்தது.

தேசிய ஆயுர்வேத தினம்

இயற்கையோடு இணைந்த பாரம்பர்ய மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக `ஆயுஷ்’ என்ற பெயரில் புதிய அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த ஆண்டு, ‘நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்’ என்ற கருப்பொருளில் தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும், தேசிய ஆயுர்வேத தினத்தை மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் அனுசரிக்குமாறு ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலவச மருத்துவ முகாம், ஆயுர்வேதம் தொடர்பான விழிப்பு உணர்வு பிரசார நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்துமாறும் அரசுத் துறைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவம் அறிவோம்... போற்றுவோம்... தேசிய ஆயுர்வேத தினத்தை அனுசரிப்போம்!

- ஜி.லட்சுமணன்