Published:Updated:

எது ஸ்லோ பாய்ஸன்... உப்பா, சர்க்கரையா? #SugarVsSalt

எது ஸ்லோ பாய்ஸன்... உப்பா, சர்க்கரையா? #SugarVsSalt
News
எது ஸ்லோ பாய்ஸன்... உப்பா, சர்க்கரையா? #SugarVsSalt

எது ஸ்லோ பாய்ஸன்... உப்பா, சர்க்கரையா? #SugarVsSalt


'கொஞ்சம் உப்பு, கொஞ்சம் இனிப்பு'. உயர்வும் தாழ்வும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வாசகம் இது.
நம் உணவில் உப்பும் வேண்டும், இனிப்பும் வேண்டும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இரண்டும் அளவோடு இருக்க வேண்டும். காலங்காலமாக மனிதர்களின் நாக்கை அடிமைப்படுத்தி வைத்திருப்பவை உப்பும் சர்க்கரையுமே! ஆனால், இவை இரண்டும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கே எமனாக மாறியிருக்கின்றன என்பதுதான் இன்றையச் சூழலில் மறுக்க முடியாத உண்மை. 


உப்பு


'உப்பு இல்லா பண்டம் குப்பையிலே' என்பார்கள். உணவில் சரியான அளவில் உப்பு இருந்தால்தான் அது ருசிக்கும். ஆனால், 'உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் அதிக மரணங்களுக்கும், சிறுநீரகக்கோளாறு, ரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம், அளவுக்கு அதிகமான உப்பைப் பயன்படுத்துவதுதான்' என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதற்கு ஆதாரமாக, உலகம் முழுவதும் அதிக அளவு உப்பை பயன்படுத்துவதன் மூலம் வருடத்துக்கு 25 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், லட்சக்கணக்கானவர்கள் இதய நோய் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் 'உப்பு பயன்பாடு' பற்றி, சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்குக் காரணம், அதிக உப்பினால் எந்த  மாதிரியான பிரச்னைகள் வரும், ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு போதுமானது... என்பது பற்றியெல்லாம் நமக்கு விழிப்பு உணர்வு இல்லாததுதான்.

மானம், நீதி, நேர்மை, நன்றி போன்ற மனிதனின் நற்குணங்களுக்கு அடையாளச் சின்னமாக உப்பைக் குறிப்பிடுவார்கள். உலகில் உப்புக்காகப் பல யுத்தங்கள் நடந்திருக்கின்றன. இப்படி உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ்மொழிகளும், வரலாற்றுச் சம்பவங்களும் உண்டு.

அதுபோல உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது சோடியம் எனப்படும் சமையல் உப்பு. உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான இந்த சோடியம், பெரும்பாலும் உப்பு மூலமாகவே கிடைக்கிறது.


உப்பின் பயன்பாடு


மனிதன், உணவுக்காக விவசாயம் செய்யத் தொடங்கியபோது, உணவில் சேர்த்துக்கொண்டது ஒரு நாளைக்கு வெறும் 2 கிராம் உப்புதான். ஆனால், மாறிவிட்ட இன்றைய வாழ்க்கைமுறையில், இப்போது அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 10 கிராமும், இந்தியர்கள் 12 கிராம் வரையும் உப்பை எடுத்துக்கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.

இதற்குக் காரணம், நமது உணவுப் பழக்கமே. உப்பு கொஞ்சம் கம்மியா இருக்கு... இன்னும் கொஞ்சம் போடுங்க...' என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவது நம் வழக்கமாகிவிட்டது.

ஊறுகாய், கருவாடு, சிப்ஸ், பிஸ்கட், சமோசா, துரித வகை உணவுகள், நூடுல்ஸ், சாஸ், சூப் போன்று சுவைக்காகச் சாப்பிடும் பொருட்களின் மூலமாகவும் உப்பை எடுத்துக்கொள்கிறோம்.


இப்படி அளவுக்கு அதிகமாகச் சேரும் உப்பினால் பல்வேறு பதிப்புகளுக்கு உள்ளாகிறோம். ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் 200 கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பானது, வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.


‘நாளொன்றுக்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக 5 கிராம் உப்பு போதுமானது’ என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
ஆனால், பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக, இரண்டிலிருந்து மூன்று கிராம் உப்பே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, உப்பைக் குறைத்துச் சாப்பிடும் பழக்கத்தை சிறுவயது முதலே ஏற்படுத்தவேண்டும்.
இயற்கையாக கடலில் இருந்து கிடைக்கும் உப்பில் பொட்டாசியம், மாங்கனீசு, அயோடின், இரும்புச்சத்து, துத்தநாகம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. இவை சற்றே பழுப்புநிறத்தில் இருக்கும். ஆனால், அதிக வெப்பத்தில் ரீஃபைண்ட் செய்யப்படுவதால், உப்பை பிளீச் செய்கிறார்கள், இந்த முறையால், உப்பில் இயற்கையாக இருக்கும் பல்வேறு தாது உப்புக்கள் வெளியேறிவிடுகின்றன. அயோடின் அதிக அளவு நிறைந்த தூள் உப்பை அதிகம் உணவில் சேர்ப்பதால் இதயநோய்கள், ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் எளிதில் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, இயற்கையில் கிடைக்கும் கல் உப்பைப் பயன்படுத்தலாம்.


சர்க்கரை


உலக சுகாதார  நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராமும், அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 24 கிராமும்தான். அதாவது சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் ( 24 கிராம்) சர்க்கரையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது. இனிப்பு வகைகளில் மட்டும் சர்க்கரை சேர்த்தது போய், இப்போது எல்லாவற்றிலுமே சர்க்கரையைக் கலக்கிறார்கள். இனிப்பான பழங்களை ஜூஸ் போடும்போதுகூட, அதனுடன்  சர்க்கரையைக் கலந்துதான் குடிக்கிறோம்.

காய்கறிகள், பழங்கள்  போன்ற உணவு வகைக்குள்ளேயே இருக்கிற சர்க்கரை, உடலுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால், நம் உணவில் கலக்கப்படும் சர்க்கரைதான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. குளிர்பானங்கள், டீ, காபி, பிஸ்கட், இனிப்புப் பண்டங்கள், ஜாம், சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்..


சர்க்கரையின் பயன்பாடு


1750-ம் ஆண்டில், ஒரு நபரின் சர்க்கரை பயன்பாட்டின் அளவு வருடத்துக்கு 2 கிலோ. இது 1850-ம் ஆண்டில் 10 கிலோவாகவும், 1994-ம் ஆண்டில் 60 கிலோவாகவும், 1996-ம் ஆண்டில் 80 கிலோவாகவும் உயர்ந்துள்ளது. இன்றைக்குச் சராசரியாக, வாழ்நாளில் நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு இரண்டு டன் என்ற அளவில் உள்ளது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் சாப்பிடும் உணவில் வெள்ளை நிறத்திலான சர்க்கரையின் அளவு அதிகரித்து வருகிறது என்பதை மேற்கண்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்.

இதன் விளைவாக சர்க்கரைநோய், ரத்தக் கொதிப்பு (பிரஷர்), இதயநோய்கள், உடல்பருமன், அதிக கொலஸ்ட்ரால், கொழுப்பு கல்லீரல் நோய் (fatty liver) போன்ற நோய்த் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

சர்க்கரை முற்றிலும் வெண்மையாக இருக்க, ரீஃபைண்ட் என்ற பெயரில் பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இந்தச் சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவதால் கல்லீரல் நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுகின்றன. சீக்கிரமே முதுமை அடைவதற்கும் சர்க்கரை ஒரு முக்கியக் காரணம். மேலும், பல் சொத்தை, எலும்பு பாதிப்புகள் போன்ற பிரச்னைகளும் இதனால் ஏற்படுகின்றன.


எனவே, சர்க்கரைக்கு மாற்றாக கரும்புச்சாறு, தேன் ஆகியவற்றையும், ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சைச் சாறு, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களையும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் நல்லது. வெல்லம் மற்றும் உலர் பழங்களில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.


நாம் சுவைக்காகத்தான் உப்பையும் சர்க்கரையையும் சேர்த்துக்கொள்கிறோம். உப்பும் சர்க்கரையும் அன்றாட உணவுப்பொருளாக நமக்குப் பழகிவிட்டதால் இவற்றைத் தவிர்க்க முடியாது. ஆனால், இரண்டுமே நம்மை மெள்ளக் கொல்லும் விஷங்களாக மாறிவிட்டன என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே, இயன்ற வரை இரண்டையும் அளவைக் குறைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.


- ஜி.லட்சுமணன்