பிரீமியம் ஸ்டோரி
மனமே நலமா?
மனமே நலமா?

முன்கதைச் சுருக்கம்

அழகான இளம் பெண்ணான மாலதிக்குத் திருமணம் ஆகிறது. ஆனால் கணவனை, தாம்பத்திய உறவுக்கு நெருங்கவிடவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் இருவரும் சட்டப்படி பிரிந்துவிடுகின்றனர். வாழாவெட்டியாக இருக்கிறாளே என மாலதியின் பெற்றோர் கவலைப்பட்டனர். இதனால், வேறு ஒரு ஊருக்கு வேலைக்குச் சென்ற மாலதி, அங்கு சாந்தி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகுகிறாள். தங்களுக்கு இடையேயான உறவுக்குத் தொந்தரவு வந்துவிடக் கூடாது என்பதற்க£க மாலதியை, தன் வீட்டிலேயே தங்கவைக்கிறாள் சாந்தி. இந்த உறவு காலாகாலத்துக்கும் நீடிக்க தன்னுடைய கணவனுக்கு மாலதியை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துவைக்கிறாள். அவனுடனும் தாம்பத்திய உறவுக்கு உட்பட மறுக்கிறாள் மாலதி. அவளுக்கு ஏதோ பிரச்னை என்று உணர்ந்த பெற்றோரும், மற்றவர்களும் அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்கின்றனர்.

மனமே நலமா?

வாசகர் கடிதம்

'மாலதிக்கு சிறுவயதில் ஏதேனும் பாலியல் அத்துமீறல் நடந்திருக்கலாம். இதனால், ஆண்கள் மீதே வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். அதுதான் சாந்தியுடன் நெருங்கிப் பழகவும், கணவனை நெருங்கவிடாமல் செய்வதற்கும் காரணமாக இருந்திருக்கிறது.  எதையும் தெரிந்துகொள்ளாமல் சாந்தி செய்தது மிகப் பெரிய தவறு. மனநல சிகிச்சையின் மூலம் மாலதிக்கு ஆண்கள் மீதுள்ள வெறுப்பு உணர்வைப் போக்கலாம்.'

- வீரஜோதி, மதுரை

'தூக்கத்தில் திடீரென அலறியடித்து எழுந்துவிடுகிறாள்,' என்று தன் 18 வயது மகளை அழைத்து வந்திருந்தார் ஒரு தாய். அந்தப் பெண் பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவி.  

முதலில் அந்த பெண்ணின் தாயார், பேச ஆரம்பித்தார்.

'என் பொண்ணுக்கு 14 வயசுல இருந்து இந்தப் பிரச்னை இருக்கு டாக்டர். வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது இப்படி அலறல் சத்தம்போட்டு எழுந்திருப்பா. அப்போ, வேகமா மூச்சுவாங்கும். திருதிருன்னு முழிப்பா. 'அம்மா... அம்மா’னு கத்துவா. அந்த சமயத்துல, நாம என்ன சொன்னாலும் அவளுக்குப் புரியாது. ஒருவழியா சமாளிச்சு அவளைத் தூங்கவைப்போம். காலையில எழுந்திருக்கும்போது அவளுக்கு நடந்தது எதுவும் ஞாபகத்துல இருக்காது.

மனமே நலமா?

ரொம்ப வருஷத்துக்கு முன்னால, ஒருநாள் இரவு சினிமா பார்த்துட்டு வந்துட்டிருந்தோம். அது ஒரு பயங்கரமான கொலைப் படம். இவ மட்டும் எங்ககூட நடந்துவராமல், பின்னால கொஞ்சம் தள்ளி நடந்து வந்தா. அதுக்கு அப்புறமாத்தான் இப்படிக் கத்த ஆரம்பிச்சா. 'முனி ஓட்டத்தை இவ தாண்டினதாலதான், முனி அடிச்சிருச்சு’னு ஊர்ல சொல்றாங்க. எவ்வளவோ வைத்தியம் பார்த்தோம்... எத்தனையோ கோயில்களுக்குப் போனோம்... பேய் ஓட்டுற பூசாரி, 'இவளுக்குப் பிசாசு பிடிச்சிருக்கு. அந்தப் பிசாசுதான் ராத்திரி வந்து தாக்குது. அதனாலதான் அலறியடிச்சு எந்திருக்கிறா’னு சொல்லி, மந்திரம் சொல்லி பூஜை செஞ்சும் பார்த்தாரு. அதுக்குப் பிறகும் இவ ராத்திரியில கத்துறது மட்டும் நிக்கலை.

இவ்வளவு நாள் வீட்ல இவளை நாங்க பத்திரமா பாத்துக்கிட்டோம். இந்த வருஷம் வெளியூர்ல இருக்கிற காலேஜ்ல சீட் கிடைச்சது. இந்தப் பிரச்னை இருக்கிறதால, வேண்டாம்னு சொல்லிப்பார்த்தோம். ஆனா, இவ கேட்கலை. ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறப்ப, அங்கயும் தூக்கத்துல அலறி எழுந்திருக்கா. அங்க இருந்த எல்லாரும் பயந்துபோய், இவகூட ரூம்ல யாரும் தங்க மாட்டேங்கிறாங்க. யாரும் பேசறதுகூட இல்லியாம். காலேஜ்லயே எங்களைக் கூப்பிட்டு, ’மனநல மருத்துவரைப் பாருங்க’னு சொன்னாங்க. அதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தோம்'' என்றார்.

அந்தப் பெண்ணிடம் பேசினேன், 'எங்கே நமக்குள்ள பிரச்னை காரணமாக கல்லூரியை விட்டு அனுப்பிவிடுவார்களோ, நண்பர்களே இல்லாமல் போய்விடுமோ’ என்ற அந்தப் பெண்ணின் முகத்தில் பயமும் வருத்தமும் தேங்கியிருந்தது.அவ்வளவு மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.

இந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்னை? முனி அடித்துவிட்டதா? பிசாசு இரவு நேரத்தில் வந்து தொந்தரவு செய்கிறதா? அல்லது படத்தின் பாதிப்பாக இருக்குமா? உங்கள் பதில்களை எழுதி அனுப்புங்கள்.

டாக்டர் செந்தில்வேலன் பதில்...

மாலதியை, ஆழ்மனப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. மாலதி, சிறுவயது முதல் தன்னை ஆணாக நினைத்துள்ளார். உடலால் அவர் ஒரு பெண்ணாக இருந்தாலும், உணர்வால் அவர் ஓர் ஆண். ஆண்களைப்போல ஆடை அணிந்து, முடியைக் கத்தரித்திருக்கிறார். மாலதியின் பெற்றோர் அவரை அடித்து உதைத்து பெண்போல வளர்க்க முயற்சித்து உள்ளனர்.

'திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்து, மாலதிக்குத் திருமணமும் செய்துவைத்து உள்ளனர். மனதளவில் ஆணாக இருக்கும் மாலதியால், அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கணவனுடன் வாழ முடியாமல் திரும்புகிறாள். இந்த நேரத்தில் அவருக்கு, சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெண் உருவத்தில் இருப்பதால் யாரும் தப்பாக நினைத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று சாந்தியுடன் பழகி இருக்கிறார். தன்னை ஒரு ஆணாக பாவித்துத்தான் மாலதி பழகுகிறாள் என்பதை, சாந்தி அறிந்திருக்கவில்லை.

பிறப்புறுப்பை வைத்து ஒரு மனிதனை ஆண்/பெண் என்கிறோம். இதை 'செக்ஷ§வல் ஐடென்டிட்டி’ என்போம். ஒருவரின் பிறப்புறுப்பை மட்டும் வைத்து ஆண் பால், பெண் பால் என்று கூறிவிட முடியாது. இதை 'ஜென்டர் ஐடென்டிட்டி’ என்போம். பாலினத் தன்மை என்பது ஹார்மோனாலும், வளர்ப்பு முறையாலும், சமுதாயத்தில் சிறுவயதில் ஏற்படும் அனுபவத்தாலும் ஏற்படுகிறது அல்லது ஊட்டப்படுகிறது. சிறுவயது முதல் அது நம் உள் பின்னிப் பிணைந்துவிடுகிறது.

உடலால் ஆணாக/பெண்ணாக இருப்பவர்கள், உணர்வால் வேறு பால் தன்மை உடையவர்களாக இருப்பதை, 'டிரான்ஸ் ஜென்டர்’ என்கிறோம். இப்படி உணர்வால் பெண்ணாக மாறிய, உடலால் ஆணாக உள்ளவரை, 'திருநங்கை’ என்கிறோம். அதேபோல, ஆணாக மாறிய பெண்ணை, 'டாம்பாய்’ என்போம். பெண் ஒருவர் ஆணாக மாறுவது என்பது மிகவும் அரிதான விஷயம்.

இதுபோல ஒருமுறை அவர்களின் உடல்ரீதியான பாலினத்தில் இருந்து உணர்வால் வேறு பாலினத்துக்கு மாறிவிட்டார்கள் என்றால், அவர்களை மீண்டும் பழைய உடல்ரீதியான ஆண்/பெண் தன்மைக்கு (ஜென்டர்) மாற்றுவது கடினம். உணர்வால் ஆண் தன்மையுடன் உள்ள பெண்ணை, சிகிச்சைமூலம் பெண் உணர்வு உள்ளவராக மாற்ற முடியாது. அதனால்,  உணர்வால் அவர்கள் எந்த பாலினமாக வாழ விரும்புகிறார்களோ அப்படியே வாழ விட்டுவிடுவதுதான் நல்லது. அதனால், 'இனி உன் விருப்பம்போல ஆணாக இருந்துகொள். அடுத்த பெண்ணின் வாழ்வில் தலையிட்டு, பிரச்னையை ஏற்படுத்தாதே’ என்று மாலதிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது. அவளது பெற்றோருக்கும் கவுன்சலிங் அளிக்கப்பட்டது. தற்போது மாலதி, சுதந்திர 'ஆணாக’ வலம் வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு