Published:Updated:

ஜாக்கிங்... வாக்கிங்... ஸ்பின்னிங்!

அழகு ரகசியம் சொல்கிறார் பியாஇரா.சரவணன்

##~##

'புன்னகையே பொன் நகை’ எனத் தங்க நகை விளம்பரங்களில் ஒலிக்கும் தத்துவத்தின் வழி நடக்கிறாரோ என்னவோ... பளிச் புன்னகையில் குட்டிக் குழந்தையாக ஜொலிக்கிறார் பியா. ''போட்டோ எடுக்கிறப்ப, 'ஸ்மைல் ப்ளீஸ்’னுதானே கேமராமேன் சொல்வாங்க. ஆனா, என்னை மட்டும் 'சிரிக்காதீங்க’ன்னு தான் சொல்வாங்க. அந்த அளவுக்கு நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேன்!'' - மூன்று வரிகளை முடிப்பதற்குள் நான்கு முறை சிரிக்கிறார் பியா.

 ''நான் இயல்பிலேயே ஒல்லியான ஆள். அதனால் பெரிய அளவில் பயிற்சிகள் பண்ணத் தேவை இல்லை. ஆனாலும், காலையில் எழுந்ததுமே நான் கண் விழிப்பது ஜிம்மில் தான். ஆறு மணிக்கு ஜிம்மில் ஆஜராகிற நான், சரியா ஒரு மணி நேரம் பிராக்டீஸ் பண்ணுவேன். இந்த சின்னப் பொண்ணுக்கு இதுவே போதுமான பிராக்டீஸ்தான். ஆனாலும், தொடர்ந்து வாக்கிங், ஜாக்கிங்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜாக்கிங்... வாக்கிங்... ஸ்பின்னிங்!

ஸ்பின்னிங்னு உடம்பைப் போட்டு பிழிஞ்சு எடுத்திடுவேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில் இந்தப் பயிற்சிகளையே ரசிச்சு ரசிச்சு செய்வேன். சில மாதங்களுக்கு முன்னால் வயிற்றில் 'செல்லத் தொப்பை’ விழுற மாதிரி இருந்தது. பார்க்க அழகாத்தான் இருக்கும். ஆனால், அதுவே அப்புறம் சரிபண்ண முடியாத அளவுக்குப் போயிடும். அதனால், பவர் யோகா பண்ணினேன். மூன்றே வாரத்தில் செல்லத் தொப்பை ஓடிப் போயிடுச்சு!'' - மீண்டும் மீண்டும் சிரிப்பு.

''அதிகப்படியான பயிற்சிகள் உடம்பை டயர்டாக்கிடும்னு சொல்றாங்களே?''

''ஆமாம்! சாப்பிடுற சாப்பாட்டுக்குத் தக்கபடி பயிற்சிகள் பண்ணினாலே போதும். ஹெவியா உடற்பயிற்சி பண்ற வங்களைப் பார்த்தால், நல்லா சாப்பிடுவாங்க. சாப்பாட்டைக் குறைச்சிட்டு பயிற்சிகளை அதிகம் பண்ணினால், நிச்சயம் அது உடம்புக்குப் பாதிப்பாகத்தான் முடியும். ஆனால், என்னோட பயிற்சி முறைகளே வேற. ரொம்ப ஃப்ரீயா இருக்கிற நாட்களில்தான் நான் தீவிரப் பயிற்சிகளைச் செய்வேன். அப்போதான் உடம்போட எல்லா பாகங்களும் வளைஞ்சு நிமிர்ந்து பழகும். மாதத்துக்கு ஒரு தடவையாவது ஹெவியான பயிற்சிகளைச் செய்வேன். மற்ற நேரங்களில் என்னோட பயிற்சிகள் ரொம்ப ஜாலியா இருக்கும். குறிப்பாக மழை நேரங்களில்தான் நான் ஜாக்கிங் பண்ணுவேன்.

ஜாக்கிங்... வாக்கிங்... ஸ்பின்னிங்!

இந்த உலகத்திலேயே நான் ரொம்ப அபூர்வமா பார்க்கிறது மழையைத்தான். இயற்கையோட மொத்த அழகும் சொட்டுச் சொட்டா கொட்டுற அழகை அப்படியே அனுபவிப்பேன். மழை கொட்டுற நேரத்தில் எப்போதாவது நீச்சல் பண்ணி இருக்கீங்களா? மழை பெய்கிற ஒரு பொழுதைக்கூட வீணாக்காமல் நான் நீச்சல் அடிப்பேன். மேலே இருந்து கொட்டுற மழை ஜில்லுனு குத்த, குளத்தில் இருக்கும் தண்ணீர் வெதுவெதுப்பாகி கதகதப்பு கொடுக்க... உடம்பும் மனசும் பரவசத்தில் மிதக்கும். மழை விடும் வரைக்கும் நீச்சல் அடிப்பேன். கரை ஏறினால், எப்படா கண்ணை மூடித் தூங்கலாம்னு தோணும். கண்கள் சொக்க... பெட்டில் விழுந்தால், அடுத்த அஞ்சு மணி நேரம் ஆள்... அவுட் ஆஃப் சர்வீஸ்தான்!''

''குழந்தைகள் சாப்பிடுவதைப்போல் குறைவாகத்தான் சாப்பிடு வீங்களாமே..?''

ஜாக்கிங்... வாக்கிங்... ஸ்பின்னிங்!

''ஹா... ஹா... குழந்தைங்களைவிடக் கொஞ்சம் ஜாஸ்தி. நான் சுத்த சைவம். உணவு விஷயத்தில் 'குறைவு - நிறைவு’ங்கிறதான் என் பாலிசி. உடம்புக்குத் தேவையான சத்துக்களை அதிகம்கொண்ட காய்கறிகளைத் தேர்வு பண்ணி கிராம் கணக்கில் சமைத்து மிகக் குறைவா சாப்பிடுவேன். கேரட் மாதிரியான காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவேன். கொழுப்பு அதிகமான உணவுகளைத் தொடுவதே இல்லை. கட்டுப்பாடு இல்லாமல் நான் சாப்பிடுவது பழங்களைத்தான். ஜூஸ் சாப்பிடுவதில் எனக்கு விருப்பமே இல்லை. பழத்தோட வாசனை மட்டும்தான் ஜூஸில் மிஞ்சுதே தவிர, முழுமையான சத்துக்கள் கிடைக்காது. அதனால், பழங்களை அப்படியே சாப்பிடுவேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன். சரி இல்லாத உணவுகளைச் சாப்பிட்டுவிட்டால்கூட, நிறையத் தண்ணீர் குடித்தால் வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் இருக்காதுன்னு அம்மா சொல்வாங்க!''

''எப்பவுமே சிரிப்பு குறையாத சின்னக் குழந்தையா முகத்தை எப்படி மெயின்டெய்ன் பண்றீங்க?''

''கோபத்தால் எந்த அற்புதத்தையும் நிகழ்த்த முடியாதுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? சிரிக்கும்போது முகத்தின் ரத்த ஓட்டம் சீராகும்; மூளை நரம்புகளில் புத்துணர்வு பொங்கும். என்னோட முக அழகுக்கு சிரிப்புதான் முக்கியக் காரணம். பெரும்பாலும் ஷூட்டிங் நேரத்தில்கூட நான் மேக்கப் போடுறது கிடையாது. டைரக்டர்ஸ் ரொம்ப வற்புறுத்தும்போது மட்டும்தான் மேக்கப் போடுவேன். வெதுவெதுப்பான தண்ணீரில் அடிக்கடி முகம் கழுவுவேன். மேக்கப் போடும் நாளில் இரவில் வெந்நீர் வைத்து முகத்தை சுத்தமாகத் துடைத்த பிறகே தூங்கப்போவேன். பியூட்டி பார்லருக்குப் போறதோ பேஷியல் பண்றதோ எனக்குப் பழக்கமே இல்லை!''

''விருப்பமான பொழுதுபோக்கு?''

''மழையும் மழை சார்ந்த பொழுதுகளும்தான்!

லீவு கிடைத்தால் ஏதாவது ஒரு மலைப் பிரதேசத்தை நோக்கி ஓடிடுவேன். வயதான காலத்தில் மலைப் பகுதியில் ஒரு வீடு கட்டி வாழணும்னு ஆசை. அந்த அளவுக்கு இயற்கையின் காதலி நான்!''